Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

சென்னை:`திருட்டு கார் விபத்து; காட்டிக்கொடுத்த சர்வீஸ் சென்டர்' - போலீஸில் சிக்கிய நபர்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்சுப்பிரமணி (24).இவர், தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் மேற்படிப்பு படித்து வருவதால், வில்லிவாக்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது காரை வில்லிவாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் விட்டு விட்டு சேலையூருக்குச் சென்று விட்டார் சாய்சுப்பிரமணி.

இணையதளம்

நீண்ட நாள்களாக காரைப் பயன்படுத்தாததால் பழுதடைந்து விடும் என்பதால், அதை விற்க சாய்சுப்பிரமணி முடிவு செய்தார். மேலும், அவரால் காருக்கு வாங்கிய கடனுக்கு இஎம்ஐ செலுத்த முடியவில்லை. அதனால், காரை ஆன்லைனில் விற்பனை செய்ய சாய்சுப்பிரமணி இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்துவிட்டு பொழிச்சலூரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் சாய்சுப்பிரமணியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, `காரின் புகைப்படத்தைப் பார்த்தேன், விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. நேரில் பார்த்து பேசி முடிவு செய்துகொள்வோம். காரை நேரில் பார்க்க வேண்டும்’ என்று பால்ராஜ் கூறியிருக்கிறார். அதற்கு சாய்சுப்பிரமணியும் சம்மதித்தார்.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் காரை ஓட்டிப் பார்த்து விட்டு வாங்கிக் கொள்வதாக கூறிய பால்ராஜ், வில்லிவாக்கத்துக்கு வந்தார். அங்கிருந்து காரை பால்ராஜ், ஓட்டிக் கொண்டு மதுரவாயல் சென்றார். காரில் சாய்சுப்பிரமணியும் இருந்தார். மதுரவாயலில், தன்னுடைய நண்பர் இருப்பதாகவும் அவரிடம் பணத்தை வாங்கித் தருகிறேன் என பால்ராஜ் கூறியிருக்கிறார். மதுரவாயல் ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே வந்தவுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு நபரைக் காட்டி, அவர்தான் தன்னுடைய நண்பர் என்று கூறிய பால்ராஜ், அவரை இறங்கிச் சென்று அழைத்துவரும்படி சாய்சுப்பிரமணியிடம் தெரிவித்தார். அதை நம்பிய சாய்சுப்பிரமணி காரை விட்டு கீழே இறங்கினார். இந்தச் சமயத்தில் காரை அங்கிருந்து எடுத்துச் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார் பால்ராஜ்.

மதுரவாயல் காவல் நிலையம்

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாய்சுப்பிரமணி, உடனடியாக பால்ராஜின் செல்போன் நம்பருக்குத் தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச் ஆப் என பதில் வந்திருக்கிறது. இதையடுத்து தன்னை ஏமாற்றி, காரை நூதன முறையில் திருடிக் கொண்டு சென்ற பால்ராஜ் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் சாய்சுப்பிரமணிக்கு கார் சர்வீஸ் சென்டரிலிருந்து போன் வந்தது. `சார், உங்களுடைய கார், ரெடியாகிவிட்டது. நீங்கள் வந்து எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள்.

அதைக்கேட்டு ஆச்சர்யமடைந்த சாய் சுப்பிரமணி, கார் சர்வீஸ் சென்டரிலிருந்து வந்த போன் அழைப்பு குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸார் குறிப்பிட்ட கார் சென்டருக்குச் சென்றனர். அங்கு காரை சர்வீஸிக்கு விட்ட பால்ராஜ் வந்தார். அப்போது அங்கு காத்திருந்த போலீஸார், பால்ராஜை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் காரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பால்ராஜிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மோசடி

Also Read: சென்னை: `நம்பிச் சொன்னேன்; முழுசா ஏமாத்திட்டாங்க..!' - கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``காரைத் திருடிக் கொண்டு சென்ற பால்ராஜின் உண்மையான பெயர் சந்துரு என்கிற ராஜபாண்டி. இவர் போலியான பெயரில் சாய்சுப்பிரமணியிடம் அறிமுகமாகியுள்ளார். சாய்சுப்பிரமணியிடமிருந்து காரை திருடிக் கொண்டு சென்ற சந்துரு, அதை விற்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக காரை விற்க முடியவில்லை. இந்தச் சமயத்தில் அந்தக் காரை சந்துரு ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளது. அதனால்தான் காரை சர்வீஸ் சென்டரில் விட்டு பழுதுபார்த்துள்ளார். காரின் ஆவணத்திலிருந்த சாய்சுப்பிரமணியின் செல்போன் நம்பருக்கு சர்வீஸ் சென்டரிலிருந்து தகவல் தெரிவித்ததும், சந்துரு சிக்கிக் கொண்டார். சந்துரு மீது லாரி திருட்டு வழக்கு மதுரையில் உள்ளது. இதுதவிர ஆடு திருட்டு வழக்கும் உள்ளது" என்றனர்.

நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில், டூவிலரை ஓட்டிப்பார்த்து விட்டு வாங்குவதாகக் கூறி அதை திருடிச் செல்லும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போல நிஜ சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-maduravoyal-police-arrested-car-thief

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக