Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஸ்டெர்லைட்: 1994 ஆரம்பம் முதல் இன்றைய தீர்ப்பு வரை! #Timeline

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனத் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கடந்த 28 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்தக் கட்டுரை.

1992

ஸ்டெர்லைட் ஆலைக்காக மகாராஷ்ட்ரா அரசு ரத்னகிரி அருகே 500 ஏக்கர் நிலத்தை அளித்தது.

ஜூலை 15, 1993

ரத்னகிரியின் கடற்கரை பகுதிகள் மாசு அடையும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை கோரி மனு. மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையின் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தார்.

ஸ்டெர்லைட்
ஆகஸ்ட் 01, 1994

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என அனுமதி அளித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஜனவரி 16, 1995

சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்யாமல், ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்படுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்தது.

மே 1995

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஆலை அமைக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட்
அக்டோபர் 14, 1996

ஸ்டெர்லைட் ஆலை, விதிகளை மீறி மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டது. சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டால் ஆலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையோடு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது.

மே 05, 1997

ஸ்டெர்லைட் அருகில் தோட்ட வேலையில் ஈடுபட்ட பெண்கள் மூவர் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஏற்பட்ட வாயுக் கசிவால் மயக்கம் அடைந்ததாகப் புகாரளித்தனர்.

ஆகஸ்ட் 20, 1997

ஸ்டெர்லைட் ஆலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் உடல்நலப் பாதிப்பு ஏற்படுவதாகப் புகாரளித்தனர். எனினும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை எனச் சான்று அளித்தது.

நவம்பர் 23, 1998

'நீரி' என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரித் தீர்ப்பு.

சென்னை உயர் நீதிமன்றம்

Also Read: `13 பேருக்கு நினைவு மண்டபம்; 2 ஆண்டு கோரிக்கை!' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர்

டிசம்பர் 01, 1998

முன்பு அளித்திருந்த தீர்ப்புக்கு மாற்றாக, சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி மீண்டும் ஆய்வு செய்யுமாறு, 'நீரி' நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. 1997 முதல் 2009 வரை, ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக 'நீரி' நிறுவனத்துக்கு 1.27 கோடி ரூபாய் நிதியளிக்கப்பட்டது.

பிப்ரவரி 09, 1999

உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 45 நாள்களில், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவதாக 'நீரி' நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.

மார்ச் 02, 1999

ஸ்டெர்லைட் ஆலை அருகிலிருந்த அனைத்து இந்திய வானொலி நிலையத்தின் ஊழியர்கள் 11 பேர் விஷவாயு கசிவால் மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறவில்லை என ஒப்புதல் அளித்ததோடு, தனது உற்பத்தியை 40 ஆயிரம் டன்களில் இருந்து 70 ஆயிரம் டன்கள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது.

ஜனவரி 02, 2001

இரண்டு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் மீது பல்வேறு புகார்களை அளித்து வந்த தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு, நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகப் புகாரளித்து போராட்டம்.

செப்டம்பர் 22, 2004

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற ஆய்வுக்குழு, ஆலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பரிந்துரையை ரத்து செய்யுமாறு கூறியது. எனினும் மறுநாளே, ஸ்டெர்லைட் ஆலை தன் உற்பத்தியைத் தொடங்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்தது.

Supreme Court Of India
நவம்பர் 16, 2004

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி, ஆண்டுக்கு 1.65 லட்சம் டன் காப்பர் உற்பத்தி செய்வதாகவும், அனுமதி பெறாமல் பல்வேறு கட்டுமானங்களைக் கட்டியுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது.

ஏப்ரல் 07, 2005

முன்பு அளித்த அறிக்கைக்கு மாற்றாக, உச்சநீதிமன்ற ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதியளித்தது.

2008

ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 900 டன்னில் இருந்து 1200 டன்னாக உயர்த்தியது.

செப்டம்பர் 28, 2010

1996-ம் ஆண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தூய்மையான சுற்றுப்புறத்துக்கான தேசிய அறக்கட்டளை முதலானோர் ஸ்டெர்லைட் ஆலையின் மீது தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலை மீது தடை விதிக்கப்பட்டது. மூன்று நாட்களில், உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடை செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தது.

vaiko
மார்ச் 23, 2013

தூத்துக்குடி நகரம் முழுவதும் மக்கள் தலைவலி, கண் எரிச்சல், இருமல் முதலான உடல்நலக் குறைவுகளுக்கு உள்ளாகினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு இதற்குக் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

மார்ச் 29, 2013

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. எனினும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் விஷவாயு கசிவுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என நிரூபிக்க முடியாததால், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குத் தடை அளிக்கப்படவில்லை.

ஏப்ரல் 02, 2013

உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் அளிக்கும் புகார்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறியது. எனினும் ஸ்டெர்லைட் ஆலை ஒவ்வொரு ஆண்டும் காப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும், பாதுகாப்பு, மின்சாரம் முதலான துறைகளில் காப்பர் பயன்படுத்தப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்கப்பட்டால் அங்கு பணியாற்றும் 1300 பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் எனவும் அறிவுறுத்தியது. ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மார்ச் 2014

ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தாவிடம் தேர்தல் நிதியுதவி பெற்றதற்காக பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சியை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்தது.

மே 22, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராடிய மக்கள், பேரணியாகச் சென்று, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்னோலின் என்கிற 17 வயது சிறுமி உட்பட, 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்
மே 28, 2018

தமிழக அரசின் அரசாணையின்படி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசாணையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தது.

செப்டம்பர் 01, 2018

ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உத்தரவு.

டிசம்பர் 15, 2018

தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை சில விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

பிப்ரவரி 18, 2019

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலை
பிப்ரவரி 27, 2019

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ஜூன் 2019

இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

ஜூன் 27, 2019

சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து 39 நாள்கள் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

ஜனவரி 8, 2020

வழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடப்படாமல் இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்

Also Read: ஸ்டெர்லைட்: `மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!’ - தூத்துக்குடியில் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 18, 2020

ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/a-brief-timeline-of-thoothukudi-sterlite-copper-plant-and-its-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக