Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

`விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு?!’ - உச்ச நீதிமன்றத்தை நாடும் விவசாயிகள்

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் பலன், உண்மையான விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. மோசடி பேர்வழிகள், இந்த உதவித்தொகையை குறுக்கு வழியில் அபகரித்துள்ளார்கள். இது விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணம். இதுகுறித்து நேர்மையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.

விவசாயிகள்

சிறு, குறு ஏழை விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு, நாடு முழுவது நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டம் தமிழில் `பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம்’ என அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒரு ஹெக்டேர் வரை மட்டுமே நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நான்கு மாத இடைவெளியில் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் விவசாயமே செய்யாத நபர்களும் இத்திட்டத்தில் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஆயிரம் கோடி ரூபாய் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழக வேளாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கும், அபகரிக்கப்பட்ட பணத்தை மீட்கவும், சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்துகிறார்கள். இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இச்சங்கத்தின் செயலாளரான சுவாமிமலை சுந்தர. விமல்நாதனிட்ம் நாம் பேசியபோது ‘’இந்தியாவில் வேறு எங்குமே இது போன்ற முறைகேடு நடைபெறவில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் 6 ஆயிரம் ரூபாயோடு, தெலுங்கானாவில், மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக 4 ஆயிரம் சேர்த்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆந்திராவில் விவசாயிகள் உதவித்தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் முறைக்கேடு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் அரங்கேறியுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற, விவசாயிகளே நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்ததால், மோசடி பேர்வழிகள், விவசாயமே செய்யாத நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, போலி ஆவணம் மூலம் விண்ணப்பித்துள்ளார்கள். ஆனாலும் ரகசிய குறியீட்டு எண் இருந்தால்தான் அதை பதிவேற்றம் செய்து ஒப்புதல் வழங்க முடியும். வேளாண்மைத்துறை அதிகாரிகள், தங்களிடம் உள்ள ஆவணங்கள் மூலம் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவார்கள். இந்த முறைகேட்டில் ஒரு சில அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே சி.பி.ஐ விசாரித்தால்தான் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிக்க முடியும். பணத்தையும் மீட்க முடியும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால், சி.பி.ஐ விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்” என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmer-are-going-to-court-on-kisan-sanman-scheme-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக