நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோன தடுப்பு குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லைக்கு வருகை தந்தார். கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமே அவர் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில், ரூ.196 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் ரூ.79 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Also Read: நெல்லைக்கு நாளை வரும் முதல்வர் - அ.தி.மு.க-வினருக்கு கொரோனா பரிசோதனை!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வருகை தந்தது குறித்து அறிந்த நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை என்ற முதியவர் முதல்வரிடம் மனு அளிக்க வந்திருந்தார். ஆனால், அவரை ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் செல்லக் கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.
அதனால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் அவர் சுற்றியபடி இருந்ததைப் பார்த்தவர்கள் வேதனையடைந்தனர். அவரிடம் பேசியபோது, ``நான் மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 65 வயதாகிறது. ஏற்கெனவே பிரபலமான இனிப்பகம் உள்ளிட்ட கடைகளில் கணக்குகளைப் பராமரிக்கும் வேலை செய்திருக்கிறேன்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் என்னால் சரிவர பணிக்குச் செல்ல முடியவைல்லை. அதன் பின்னர் வாகனக் காப்பகத்தில் வேலை செய்தேன். எனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். ஒரு மகன் காணாமல் போய்விட்டார்; மற்ற இரு மகன்களும் என்னைக் கவனிப்பதில்லை. அதனால் முதுமையில், சாப்பாட்டுக்கும் மருந்துச் செலவுக்கும் மிகவும் கஷ்டப்படுகிறேன்.
எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு தாலுகா அலுவலகம் உள்பட பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இதுவரை ஐந்து முறை மனு கொடுத்தும் பலன் இல்லாததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுக்க வந்தேன்” என்று தெரிவித்தார். முதியவர் ஆறுமுகம் முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க மறுக்கப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தத்துடன் ஆட்சியர் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் சுற்றியபடியே இருந்தார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/nellai-old-man-seeks-governments-help
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக