மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிய பயோபிக் படைப்புகளைப் பார்த்து, `இந்த நடிகைகள் யாருக்கும் அம்மா முக ஜாடை வரலப்பா' என்று அலுத்துக்கொண்ட ரசிகர்கள், இன்று மங்கை என்ற மலேசியப் பெண்ணை, `அச்சு அசலா `அம்மா' மாதிரியே இருக்கீங்க' என்று ரசிக்கிறார்கள்! காரணம், ஒப்பனைக் கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கம். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மலேசியாவில் வசிக்கிறார்.
இவர், தான் செய்யும் மேக்கப்பால் சாமான்யப் பெண்களுக்குக்கூட நடிகைகளின் முகச்சாயலைக் கொண்டுவந்துவிடுகிறார். நீங்கள் சமீபத்தில் நயன்தாரா போன்றே இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் காண நேரிட்டிருக்கலாம். எல்லாம் இவரின் கைவண்ணமே! தற்போது `ஆதிபராசக்தி' ஜெயலலிதாவின் முகஜாடையை தன் மேக்கப் மூலம் மங்கை என்ற பெண்ணுக்குக் கொண்டுவந்திருக்கிறார். இந்த போட்டோஷூட்டுக்கும் சோஷியல் மீடியாவில் செம ரெஸ்பான்ஸ்!
`தம்பி... ஜெயலலிதா அம்மாவே உயிர்பெற்று வந்த மாதிரி இருக்கு' என்று அ.தி.மு.க தொண்டர்களும் ரசிகர்களும் மெச்சும் ஒப்பனைக் கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கத்திடம் இந்த மேக்கப் மற்றும் போட்டோஷூட் குறித்துப் பேசினோம்.
``ஹீரோயின்களோட முகஜாடையை மேக்கப் மூலமா மற்ற பெண்களுக்குக் கொண்டுவர்ற யோசனை இந்த லாக்டௌன் காலத்துலதான் வந்துச்சு. ஆரம்பத்துல நயன்தாரா, ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய்னு இந்த ஹீரோயின்களோட முகஜாடையை சில பெண்களுக்கு 3D மேக்கப் மூலமா கொண்டுவந்தேன். அவங்களை போட்டோஷூட் எடுத்து சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்ணினேன். மக்கள் எல்லாருமே பாசிட்டிவ் கமென்ட்ஸ் தந்தாங்க.
எனக்கு சின்ன வயசுல இருந்தே ஜெயலலிதா அம்மாவை ரொம்பப் புடிக்கும். அவங்க நடிச்ச படங்கள் நிறைய பார்த்திருக்கேன். 3D மேக்கப் மூலமா அவங்க முகத்தையும் யாருக்காவது கொண்டுவந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா, அவங்க கண், உதடு எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அவங்கள மாதிரி ஓரளவாவது முக ஜாடை இருக்குற பெண்ணைத் தேடிக்கிட்டு இருந்தேன்.
நான் சோஷியல் மீடியாவுல போடுற எல்லா போட்டோஷூட்டையும் பார்த்துட்டு எனக்கு சப்போர்ட் பண்றவங்கள்ல ஒருவர், கீதா. அவங்க ஒருநாள் எனக்கு போன்பண்ணி, `எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காங்க. அவங்க கொஞ்சம் ஜெயலலிதா அம்மா முக ஜாடையில் இருப்பாங்க'னு சொல்லி மங்கையோட போட்டோவை அனுப்பினாங்க. இப்படித்தான் ஜெயலலிதா அம்மா மாதிரி மேக்கப் ட்ரை பண்ணிப் பார்க்க, மங்கை அறிமுகமானாங்க.
ஜெயலலிதா அம்மான்னாலே எல்லாருக்கும் அவங்க அரசியல்ல இருந்த காலகட்டமும் அந்த நடை உடை பாவனைகளும்தான் நினைவுக்கு வரும். ஆனா, அவங்க ஹீரோயினா இருந்தப்போ எப்படி இருந்தாங்கனு இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது. அதனால `ஆதிபராசக்தி' படத்துல ஜெயலலிதா அம்மா எப்படி இருப்பாங்களோ, அதே மாதிரி மங்கைக்கு 3D மேக்கப் போடலாம்னு முடிவு பண்ணினேன்.
`ஆதிபராசக்தி' படத்துல ஜெயலலிதா அம்மா போட்டிருந்த காஸ்ட்யூம் மாதிரி, மலேசியாவுல எங்கேயுமே கிடைக்கல. அதனால, நானே துணி எடுத்து அதே மாதிரி புடவையை வடிவமைச்சேன். கிடைக்காத நகைகளை பேப்பர், பெயின்ட் கொண்டு நானே செஞ்சேன். அதே மாதிரி சிகை அலங்காரத்துக்கான விக் செய்யுறதுக்கும் கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.
மாடல் ரெடி. காஸ்ட்யூம்கூட ரெடி. ஆனா, எப்படி மேக்கப் பண்ணப் போறேன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. ஏன்னா, இந்தக் கால ஹீரோயின்ஸ் போட்டோஸ் எல்லாம் இப்போ உள்ள டிஜிட்டல் கேமராவுல எடுக்கப்படறதால அவங்களோட முக அமைப்பு, தாடையெலும்பு அமைப்பு எல்லாம் தெளிவா அந்த போட்டோவுல தெரியும். ஆனா, அந்தக் காலத்துல உள்ள ஹீரோயின்ஸ் போட்டோஸ் எல்லாம் 360 டிகிரி லைட் செட்டிங்ல எடுக்கப்பட்டிருக்கும். அதுல நிழல் கொஞ்சம்கூட இருக்காது. அதனால, முக அமைப்பு, தாடையெலும்பு எல்லாத்தையும் உள்வாங்குறது கொஞ்சம் கஷ்டம்.
Also Read: "வைகோ பேச்சைக் கேட்க, வாடகை சைக்கிள் பயணம்!" - சீமான் ஃப்ளாஷ்பேக் பகிர்வு
மங்கைக்கு மேக்கப் போட்டு போட்டோஷூட் எடுக்குறதுக்கு முந்தின நாள் இரவு நான் தூங்கவே இல்லை. ஜெயலலிதா அம்மாவோட பழைய படங்கள் எல்லாத்தையும் பார்த்து அவங்க முக அமைப்பை மனசுல பதிய வெச்சிக்கிட்டேன். மறுநாள் மங்கைக்கு 3D மேக்கப் மூலமா, ஜெயலலிதா அம்மா முகஜாடையைக் கொண்டுவந்தேன். சிகையலங்காரம், ஆடையலங்காரம் எல்லாமே செஞ்சு முடிச்சதுக்குப் பிறகு, இந்த போட்டோஷூட்டுக்கு நாங்க பட்ட கஷ்டத்துக்கான பலன் கிடைச்சிடுச்சுனு தோணுச்சு.
மங்கை மருத்துவத்துறையில வேலைசெய்யறவங்க. அவங்களுக்கு நடனம், மாடலிங்னு எந்த அறிமுகமும் இல்ல. 3D மேக்கப் எல்லாம் முடிச்சதுக்குப் பிறகு மங்கையை, `ஆதிபராசக்தி' படத்துல ஜெயலலிதா அம்மாவோட போஸ் எல்லாம் கொடுக்க வெச்சு போட்டோஷூட் பண்றது கொஞ்சம் சவாலாதான் இருந்தது. இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டா, ஃபேஸ்புக்னு எல்லா சோஷியல் மீடியாவிலும் போஸ்ட் பண்ணினேன். எல்லாரும் சப்போர்ட் பண்ணினாங்க. அ.தி.மு.க கட்சிக்காரங்க போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான போட்டோஷூட்" என்று புன்னகையுடன் முடிக்கிறார் கண்ணன்.
source https://www.vikatan.com/lifestyle/fashion/makeup-artist-kannan-rajamanickam-recreated-aathi-parasakthi-movie-jayalalitha-look
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக