நாடு முழுவதும் 74-வது சுதந்திரதினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வழக்கம் போல தேசிய கொடி ஏற்றி சுதந்திரதினத்தை கொண்டாடினர். கோவை, வ.உ.சி பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெற்றது.
Also Read: பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்! - உற்சாகத்தில் ஜீவஜோதி
அதேபோல, ஆங்காங்கே அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களும் சுதந்திரதினத்தை உற்சாகமாக கொண்டாடினர். பா.ஜ.க சார்பில் அந்தந்த பகுதி வாரியாக சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இதில், பா.ஜ.க-வின் கோவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கணபதி பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி பா.ஜ.க-வினர் சுதந்திர தினம் கொண்டாடினர். இதில், பா,ஜ.க கணபதி மண்டல் தலைவர் வெங்கடேஷ் கலந்து கொண்டார். அப்போது, பா.ஜ.க கட்சி கொடியை ஏற்றும் கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை மாநகர போலீஸார் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, வெங்கடேஷ் உள்ளிட்டோர் மீது தேசிய கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, கோவையில் மேலும் சில இடங்களில் பா.ஜ.க தங்களது கட்சிக் கொடி கம்பத்தில், தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சுமார் 40 பா.ஜ.க பிரமுகர்கள் ஒன்று கூடி, அனுமதியின்றி சாலையை மறித்து நோய் பரப்பும் வகையில் சுதந்திர தினத்தை கொண்டாடியதாக மாவட்ட மகளிரணி தலைவி ஜெயதிலகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே காரணத்துக்காக, பா.ஜ.க மாநில செயலாளர் ஜி.கே.எஸ் செல்வக்குமார், எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள் மீது காட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/coimbatore-police-filed-fir-against-bjp-cadre
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக