நாஞ்சில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 15 வயது சிறுமியை 20 வயது இளைஞர் கடத்திச் சென்றதாக கடந்த மாதம் 16-ம் தேதி பெற்றோர் புகார் செய்தனர். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் கடந்த மாதம் 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்த போலீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் நாகர்கோவில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் உள்பட சிலர் அந்த சிறுமியை சிறார் வதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் 27-ம் தேதி அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நாஞ்சில் முருகேசன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் தாய் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார்.
திருநெல்வேலி மாவட்டம் குட்டம் பகுதியில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை கடந்த மாதம் 29-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது நாஞ்சில் முருகேசனுக்கு அதிக ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
Also Read: சிறார் வதை வழக்கு: `நாஞ்சில் முருகேசனுக்கு உதவி?’ - நீக்கப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி
இதைத் தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் 8 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் நாஞ்சில் முருகேசன். பின்னர், நேற்று அவரது உடல் நலம் தேறியதாக மருத்துவர்கள் அறிக்கை கொடுத்ததை அடுத்து நாஞ்சில் முருகேசனை சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
நேற்று நாஞ்சில் முருகேசன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் முருகேசனுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் வழங்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாளையங்கோட்டை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/admk-former-mla-nanjil-murugesan-lodged-in-palayankottai-jail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக