சென்னைக்குள் வருவோரையும் திரும்பிச் செல்வோரையும் வரவேற்று வழியனுப்பும் பல்லாவரம் சாலை. இடைவிடாமல் வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதால், எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இடம். சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் இடது மார்க்கம். பல்லாவரம் பேருந்து நிறுத்த மேம்பாலத்துக்குச் சற்று முன்பாக இடது புறத்தில் ஒத்தையடிப் பாதை ஒன்று செல்கிறது. அதற்குள் சென்றால், சிங்காரச் சென்னையின் மறுபக்கத்தைக் காணலாம்.
தீப்பெட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்ததுபோல, அணிவகுத்துக் காணப்படுகின்றன ஒண்டுக்குடித்தன வீடுகள். மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகும். சாலைகள் ஆறாகும். முன்தினம் பெய்த மழை நீர் ஆங்காங்கே குட்டையாய்த் தேங்கி நிற்க, தட்டுத்தடுமாறி முட்டுச்சந்தை அடைந்தோம். அங்கே சில குழந்தைகள் கூட்டாக விளையாடிக்கொண்டிருந்தனர். நடந்து செல்லவே தடுமாற்றமாக இருக்கும் சாலையில், செருப்புக்கூட இல்லாமல் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் புன்னகை தவழ விளையாடிக்கொண்டிருந்தான், மூன்றரை வயதுச் சிறுவன் சந்தோஷ்.
``பார்த்து விளையாடுறா கண்ணு. கீழ விழுந்துடாத..!” - இந்த வார்த்தைகளை, ரயில் நிலைய அறிவிப்புச் செய்திபோல சலிப்பின்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் அவன் அம்மா வசந்தி. தலசீமியா என்ற மிகச் சிக்கலான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் சந்தோஷ். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இயல்பான ரத்த உற்பத்தி தொடர்ந்து நடைபெறாது. எனவே, 15 நாள்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட அளவு ரத்தம் உடலில் புதிதாகச் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்னைக்கான நிரந்தர சிகிச்சையாக, பாதிப்பு உள்ளவர்களுக்குப் பொருத்தமான மரபணு மற்றும் புரத அணுக்கள் இருப்பவரிடம் ஸ்டெம்செல் தானமாகப் பெறலாம். தலசீமியா பாதிப்பு உள்ளவரின் எலும்பு மஜ்ஜையில் இருக்கும் பழைய ஸ்டெம்செல்களைக் கதிர்வீச்சு மூலம் அழித்துவிட்டு, தானமாகக் கிடைக்கும் ஸ்டெம்செல்கள் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்தப்படும். இதன் பிறகு அவரின் உடலில் இயல்பாகவே புதிய ரத்தம் உற்பத்தியாகும். ஆனால், ஸ்டெம்செல் தானம் கிடைப்பது சவலான காரியம்.
தலசீமியா பாதிப்பால், சந்தோஷின் உடலில் ரத்தக் காயங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என, எப்போதும் விழிப்புடன் மகனின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறார் வசந்தி. இவரின் கணவர் சரவணன், செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவருக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அந்தக் குடும்பத்திலுள்ள நான்கு ஜீவன்கள் வாழ்கின்றன. கொரோனா பாதிப்பால் சரவணனின் வாழ்வாதாரம் முடங்கியதுடன், தற்போது ஒருவேளைச் சாப்பாட்டுக்கே திண்டாடுகிறார்கள்.
மேலும், சந்தோஷூக்கு இருக்கும் தலசீமியா பாதிப்பால் மொத்தக் குடும்பமும் மூன்றாண்டுகளாகவே நிம்மதியை இழந்துள்ளது.
நம்மைக் கண்டவுடன், குழந்தையை அழைத்துக்கொண்டு வேகமாய் அருகில் வந்த வசந்திக்குப் பெருமூச்சு. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, அடுத்த வாரம் பிரசவத்துக்குத் தேதி கொடுத்திருக்கிறார்கள். ரத்தச் சொந்தங்களின் உடலிலிருந்து பெறப்படும் ஸ்டெம்செல் தானம், தலசீமியா பாதித்தோருக்கு மிகவும் பயன்தரும். எனவேதான், குடும்பக் கஷ்ட சூழலை மீறி இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்திடுக்கிறார்கள், சந்தோஷின் பெற்றோர்.
``இதுதான் சார் எங்க வீடு. தலை குனிஞ்சு வாங்க, கதவு இடிச்சுடப் போகுது...” என்ற வசந்தி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். முன்தினம் பெய்த மழையில் வீட்டுச் சுவர் முழுக்க ஈரம் படர்ந்திருந்தது. கதவில்லாத ஷெல்ஃப்தான் துணி வைக்கும் பீரோ. அதிலுள்ள சில கட்டைப் பைகளில், வீட்டிலுள்ள நால்வரின் துணிகள் இருக்கின்றன. மிகவும் கஷ்டமான வாழ்க்கைதான். ஆனாலும், நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சற்று நேரத்தில் சரவணனும் வந்தார். தட்டுத்தடுமாறி கீழே அமர்ந்த வசந்தியின் கண்களில் நீர் அருவியாகக் கொட்டுகிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசத் தொடங்கினார்.
``எங்க குடும்பத்துல யாருமே சரியா படிக்கலை. அப்பா இறந்துட்டதால குடும்பத்துல வறுமை. வலிப்பு பிரச்னையுடன் அம்மாவுக்குக் கண்ணும் சரியா தெரியாது. அதனால நான் நாலாப்போடு படிப்பை நிறுத்திட்டு, செருப்பு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அப்புறம் வீட்டு வேலைக்குப் போனேன். இவரும் ஸ்கூல் போனதில்ல. தாத்தா, அப்பா மாதிரி இவரும் செருப்புத் தைக்கிற வேலைக்கு வந்துட்டார்.
2015-ல் எங்களுக்குக் கல்யாணமாச்சு. அப்போ, இருக்க வீடுகூட இல்லாம தவிச்சோம். அப்புறம் சிலர் உதவி செய்யவே, இந்த வாடகை வீட்டுக்கு வந்தோம். இவரு பல்லாவரம் மேம்பாலத்துக்குக் கீழ செருப்பு தைப்பார். வயசான அம்மாவைக் கவனிச்சுக்கிட்டு, நான் அக்கம்பக்கத்துல வீட்டுக்கு வேலைக்குப் போனேன்.
பண்டிகைக் காலத்துலகூட நல்ல சோறு, துணிமணியெல்லாம் எங்களுக்குக் கிடைக்காது. அப்போ அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கோங்க. ஆனாலும், நிம்மதியாதான் வாழ்ந்துகிட்டிருந்தோம். 2016-ல சந்தோஷ் பிறந்தான். ரெண்டு பேருக்கும் பையன் மேல கொள்ளைப் பிரியம். ஆனா, எங்க சந்தோஷம் மூணு மாசம்தான் நீடிச்சது.
தாய்ப்பால் குடிச்சதும் உடனே வாந்தி எடுத்துருவான் சந்தோஷ். அடிக்கடி பையனோட வயிறு வீங்கிடும். பயந்துபோய் ஆஸ்பத்திரியில காட்டினா, `பையனுக்கு தலசீமியா நோய் இருக்கு, மாசத்துக்கு ரெண்டுமுறை புது ரத்தம் ஏத்தணும், பையனை இனி பத்திரமா பார்த்துக்கணும்'னு குண்டைத் தூக்கிப் போட்டாங்க..!” - தொண்டை வறண்டாலும், கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுகிறார் வசந்தி.
அருகிலிருக்கும் சரவணனின் மடியில் அமர்ந்திருந்த சந்தோஷ், ``ஏம்மா அழுவுற! அழாதம்மா...” என்று தாயின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான். குழந்தையைக் கட்டியணைத்து முத்தமிட்டுச் சாந்தமாகிறார் வசந்தி.
மெல்லிய குரலில் பேசத் தொடங்கும் சரவணன், ``உடனே கீழ்ப்பாக்கம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் பையனைச் சேர்த்தோம். அங்க 22 நாள்கள் சிகிச்சை நடந்துச்சு. இதுக்கிடையே பையனுக்கு முதல் முறையா ரத்தம் மாத்தினாங்க. அங்கிருந்தப்போ கையில சுத்தமா காசில்லை. பையனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்தான் எங்களுக்குச் சாப்பிடக்கூட காசு கொடுத்தார். பிறகு, வீட்டுக்கு வந்துட்டோம். ஆனா, தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஆஸ்பத்திரிக்கு போயிடுவோம். பையனுக்குப் பொருத்தமான `பி +’ ரத்தம் கிடைக்கிறவரை ஒருசில நாள் அங்க இருப்போம். புது ரத்தம் கிடைச்சு அதை சந்தோஷூக்கு ஏத்தினதும் சாயந்திரமே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.
அப்புறம் சில காரணங்களுக்காக மூணு வருஷமா ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலதான் பையனுக்கு ரத்தம் ஏத்துறோம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துலயே சிகிச்சை நடக்கிறதால ஆஸ்பத்திரிக்குனு பெரிசா செலவில்லை. ஆனா, பையனுக்குப் பொருத்தமான ரத்தம் கிடைக்க ஒருநாள் தாமதமானாலும் பரிதவிச்சுப் போயிடுவோம். இப்படியே இப்பவரை ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அல்லாடிக்கிட்டிருக்கோம். புது ரத்தம் ஏத்திட்டு வந்தா, பத்து நாள்கள்தான் நல்லா இருப்பான். அப்புறம் சரியா சாப்பிட மாட்டான். சரியா ஓடியாட முடியாம அடிக்கடி சோர்ந்துபோய் படுத்துடுவான். மலம் போறப்போ அவனுக்கு ரத்தமும் அதிகமா வரும். அப்போல்லாம் பையனை நினைச்சு எங்களால நிம்மதியா சாப்பிடக்கூட முடியாது.”
தளர்வான குரலில் பேசிய வசந்தியை இடைமறிக்கிறார் பக்கத்து வீட்டுப் பெண். மருத்துவ ரிப்போர்ட் ஃபைலை வசந்தியிடம் கொடுக்கிறார். அதை நம்மிடம் காண்பித்தவர், ``மழை வந்தாலே எங்களுக்குத் திண்டாட்டம்தான். வீடு முழுக்கத் தண்ணி ஒழுகும். சரியா தூங்கக்கூட முடியாது. அதனால மழை வர்றமாதிரி இருந்தாலே பக்கத்து வீட்டுல இருக்கிற அக்காகிட்ட பையனோட மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலைக் கொடுத்து வெச்சுடுவேன்.
பையனுக்கு தினமும் முட்டை தரணும். அடிக்கடி மீன் கொடுக்கச் சொல்வாங்க. ஆனா, காசு இருந்தாதான் மீன் வாங்குவோம். தலசீமியா பிரச்னை இருக்கிறதால பையனுக்கு இரும்புச் சத்து அதிகமா இருக்கும். அதனால, பேரீச்சை, கீரை வகைகள் உள்ளிட்ட இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகள் எதையும் பையனுக்குக் கொடுக்கக் கூடாது. ஐஸ்கிரீம், சாக்லேட்டும் தரக்கூடாது. பக்கத்துல பசங்க யாராச்சும் சாக்லேட் சாப்பிட்டா, `அம்மா, எனக்கு ஒரு சாக்லேட் வாங்கித்தாம்மா'னு அழுவான். கஷ்டமா இருக்கும்.
போன வருஷம்தான் பையனை பக்கத்துல இருக்கும் ஸ்கூல்ல சேர்த்தோம். இப்ப எல்.கே.ஜி போகப்போறான். இவனாச்சும் நல்லா படிக்கணும்னு ஆசைப்படறோம். ஆனா, ஃபீஸ் கட்டுறதுதான் பெரிய போராட்டமா இருக்கு. பிரதாப்னு ஒரு அண்ணன்தான் உதவினார். ஸ்கூல்லயும் சந்தோஷை பத்திரமா பார்த்துக்கச் சொல்லி டீச்சர்ங்ககிட்ட சொல்லியிருக்கோம்” என்றவர், கர்ப்பகால அசெளகர்யங்களால் அமைதியானார்.
``அடுத்த வாரம் டெலிவரி சார். அதனால வயிறு அடிக்கடி ரொம்ப வலிக்குது” என்றபடியே ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார். ``நான் ரெண்டாவது முறையா கர்ப்பமானேன். ஏற்கெனவே ஒருவேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலையில், இன்னொரு குழந்தையையும் சிரமப்படுத்தணுமான்னு எங்களுக்கு ரொம்பக் கவலை. அதனால குழந்தையைக் கலைச்சிடலாம்னு முடிவெடுத்தோம்.
`குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம்செல் எடுக்க முடியும். பிறக்கப்போற குழந்தையின் ஸ்டெம்செல் உங்க பையனோட செல்களுக்கு பொருத்தமா இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கலாம். அப்படி இருந்தா அவனுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை கொடுக்கலாம். அதனால குழந்தையைக் கலைக்க வேண்டாம்’னு ஆஸ்பத்திரியில சொன்னாங்க. ரொம்பவே நிம்மதியா இருந்துச்சு.
ஆனா இப்போ, `கொரோனா பிரச்னையால இன்ஃபெக்ஷன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும். எனவே, பிறக்கப்போற குழந்தையின் தொப்புள் கொடியில் ஸ்டெம்செல் எடுக்க முடியாது'னு ஆஸ்பத்திரியில் சொல்லிட்டாங்க. இதைக் கேட்டதுல இருந்து நிம்மதி இல்லாம தினமும் அழுதுகிட்டே இருக்கோம்.
வீட்டுக்கார் நாள் முழுக்க வெயில்ல குத்தவெச்சு வேலை செஞ்சாலும் 200 ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். அதைவெச்சுத்தான் வாழ்ந்துகிட்டிருந்தோம். இந்தக் கொரோனா வந்ததுல இருந்து, இப்பவரை இவருக்கு வேலையில்லை. நாங்க அருந்ததியர் சமூகம். இந்தச் செருப்புத் தைக்கிற வேலையைவிட்டுட்டு இவரால வேற வேலைக்கும் போக முடியலை. ரேஷன் அரிசி சாப்பாடுதான். காய்கறிகள் வாங்கக்கூட ரொம்பவே சிரமப்படறோம். பிறக்கப்போற குழந்தையைக்கூட எப்படியாச்சும் சிரமப்பட்டாவது பார்த்துக்குவோம். ஆனா, என் புள்ளையோட படிப்புக்கும், இவருக்குப் புது வேலை கிடைக்கவும் யாராச்சும் உதவி செஞ்சா புண்ணியமா போகும்” - மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியான வசந்தி, மகனைக் கட்டியணைத்துக்கொண்டார்.
சிறுவன் சந்தோஷூக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ரேவதியிடம் பேசினோம். ``சந்தோஷூக்கு தலசீமியா மேஜர் கண்டிஷனில் இருக்கு. அவனுடைய எடையில் ஒரு கிலோவுக்கு 20 மில்லி லிட்டர் அளவுல, 15 நாள்களுக்கு ஒருமுறை புது ரத்தம் செலுத்தப்படுது. தலசீமியா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏழு வயதுக்குள் ஸ்டெம்செல் சிகிச்சை செய்து முடிப்பது நல்ல பலன் தரும். இந்தப் பாதிப்பு உள்ளவரின் உடன் பிறந்தவர்கள், ரத்த சொந்தம், அல்லது ஸ்டெம்செல் தானம் செய்ய முன்வரும் ரத்த சொந்தம் அல்லாதவர்கள்னு மூணு ஆப்ஷன்ல இன்னொருத்தர்கிட்ட இருந்து ஸ்டெம்செல் தானம் வாங்கலாம்.
அதன்படி வசந்திக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் ரத்த வகை, எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல் ஆகியவை சந்தோஷூக்குப் பொருத்தமா இருந்தால், அடுத்த எட்டாவது மாதத்தில்கூட ஸ்டெம்செல் சிகிச்சையை நடத்த முடியும். அதுக்கு முன்பாக குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்தும் ஃப்ரெஷ்ஷான ஸ்டெம்செல்களை 20 சதவிகிதம் அளவில் எடுத்து சந்தோஷூக்குப் பொருத்த முடியும். ஆனா, கொரோனா சூழலால் அந்த சிகிச்சை இப்போதைக்குச் செய்வது சாத்தியமில்லை. பிறக்கப்போகும் குழந்தையின் ஸ்டெம்செல் பொருந்தலைன்னா, உலகம் முழுக்க ஸ்டெம்செல் தானம் செய்யப் பதிவு செய்திருக்கும் பலரில் பொருத்தமான ஒருவரிடம் இருந்து ஸ்டெம்செல் தானம் பெறலாம். இதெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்கணும்” என்றார்.
சிறுவன் சந்தோஷின் குடும்பத்துக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். உங்களுக்குத் தேவையான தகவல்கள் உடனடியாகத் தரப்படும்.
source https://www.vikatan.com/news/miscellaneous/3-year-old-santhosh-suffers-due-to-thalassemia-and-poverty
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக