Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு; தட்டிக்கேட்டவருக்கு அடி, உதை? - சிவகங்கை சர்ச்சை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது சங்கங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். குறிப்பிட்ட இந்த கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கேள்வி எழுப்பியவரை, தனிநபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நூறு நாள் வேலை வாய்ப்பு ( கோப்புப் படம்)

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முத்தையா நம்மிடம் கூறுகையில், ``சங்கங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புளியங்குளம்தான் எனது கிராமம். நான் பி.ஜே.பி கிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் உள்ளேன். எங்கள் பகுதியில் தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடப்பதாகத் தெரியவந்தது. இது குறித்து ஆவணங்களைப் பார்த்தபோது 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிக்கு வராமலே சம்பளம் பெறுவது தெரியவந்தது.

Also Read: கரூர்: கொரோனாவால் உயிரிழந்த முதியவர்! - அதிர்ச்சியில் 100 நாள் வேலைத்திட்ட பெண்கள்

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். `இந்தப் புகாரில் எங்கள் பெயரை ஏன் சொன்னாய்?’ என குறிப்பிட்ட சிலர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கினர். இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு மதுரை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளேன். ஆனால், நான் தனிப்பட்ட முறையில் சண்டை போட்டதாக இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்தால் கண்டிப்பாக முறைகேடுகளைக் கண்டறியலாம்" என்றார்

முத்தையா

இது குறித்து ஊராட்சிமன்றத் தலைவர் சங்கையாவிடம் கேட்டோம்.``ஊராட்சியில் முன்பு எப்படியோ, தெரியாது. நான் பொறுப்பேற்றபின் அனைத்து வேலைகளும் சரியாக நடக்கின்றன. 100 நாள் வேலை முறைகேடு என்பது பொய்யான குற்றச்சாட்டு. கிராமத்தில் தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையே நடந்த பிரச்னையை இதில் கொண்டு வருகின்றனர். அதற்கும் 100 நாள் வேலைக்கும் சம்மந்தம் இல்லை" என்பதோடு முடித்துக் கொண்டார்.

திருப்புவனம் பி.டி.ஓ ஜெகன் முத்துவிடம் கேட்டதற்கு, ``இது குறித்து எனக்கு எந்தப் புகாரம் வரவில்லை. இருந்தாலும் எனக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் விசாரித்ததில், ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட சிலர், இது வேறு பிரச்னை என்று தெரிவித்தனர். முறைகேடு குறித்து எனக்கு புகார் வந்தால் முழுமையாக விசாரணை நடந்தி நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.

பாதிக்கப்பட்ட முத்தையா

இதுகுறித்து கிராம மக்கள் சிலர், ``முறைகேடுகள் நடப்பது உண்மைதான். இதனால்தான் கிராமத்தில் பிரச்னைகள் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-man-alleges-irregularities-in-nrega-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக