Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தஞ்சாவூர்: `விதிமுறைகளை மீறி இரவு 7 மணிக்குமேல் நிகழ்ச்சி!’ சர்ச்சையில் வைத்திலிங்கம்

தஞ்சாவூரில் கொரோனா லாக்டெளன் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதனை மீறி மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா என்ற பெயரில் கட்சி நிகச்சிகளை நடத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அ.தி.மு.க நிகழ்ச்சியில் வைத்திலிங்கம்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரடங்கு விதிகளை மீறி கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அ.ம.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து பல்வேறு நபர்கள் விலகி அ.தி.மு.கவில் இணைவதை மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இதில், கொரோனா பரவுதலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தஞ்சை மாவட்டத்தில் 7 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. ஒரு சிலர் கடைகளை அடைக்காமல் செயல்பட்டால், போலீஸார் வந்து உடனடியாக கடைகளை அடைக்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சில சமயங்களில் கடுமையாகவும் நடந்து கொள்கின்றனர்.

வைத்திலிங்கம்

`ஊருக்குத்தான் ஊரடங்கு நடமுறை பொருந்தும் எங்களுக்கு இல்லை என்கிற வகையில் அ.தி.மு.க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வைத்திலிங்கம் அரசின் ஊரடங்கை மீறி இரவு 7 மணிக்கு மேல் ஊர் பொது இடத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இது எந்த விதத்தில் நியாயம்?’ என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்தோம். ``முன்னாள் அமைச்சரும், நால்வர் அணியில் ஒருவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்ற வைத்திலிங்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில், தன் சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார்.

வைத்திலிங்கம்

இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாகக் கடந்த பல மாதங்களாக கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் அதிருப்தியில் இருப்பதாக வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் சிலரே வெளிப்படையாக பேசி வந்தனர். கொரோனா லாக்டெளன் அமலில் இருப்பதால் வெளியே எங்கும் தலைகாட்டுவதில்லை என அவருக்கு நெருக்கமான சிலர் அதற்குக் காரணம் கூறி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மீண்டும் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்த முறை ஒரத்தநாடு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்று விட வேண்டும் என இப்போதே அதற்காக பணிகளில் இறங்கி முனைப்புக் காட்டி வருகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Also Read: அ.தி.மு.க: `அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் வைத்திலிங்கம்!’ - உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

அதன் முதற்கட்டமாக ஒரத்தநாடு தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் தி.மு.க அதிக வாக்குகளைப் பெற்ற ஊராட்சிகள் குறித்த விவரங்களை சர்வே எடுத்துள்ளார். மேலும், அந்தப் பகுதிகளை அ.தி.மு.க-வுக்கு சதாகமாக மாற்றும் செயல்களை செய்யத் தொடங்கியுள்ளார். குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வுக்குச் சென்ற நபர்கள், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களை அ.தி.மு.கவில் இணைக்கும் முயற்சி நடக்கிறது.

அதன்படி நேற்று இரவு துலுக்கம்பட்டி, வல்லுண்டாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற வைத்திலிங்கம் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் பெண்கள் கோலாட்டம், தப்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தி பட்டாசு வெடித்து வைத்திலிங்கத்துக்குப் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

மாற்றுக் கட்சியினர் இணையும் விழா

அப்போது பேசிய வைத்திலிங்கம், `உங்க ஊருக்கு என்ன தேவை? அதற்கான கோரிக்கைகளைக் கூறுங்கள். என்னால் முடிந்த அளவில், அதனை நிறைவேற்றித் தருகிறேன். எப்போதும் வேண்டுமனாலும் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கலாம். என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேட்கலாம்’’ எனக் கூறி மரியாதை செலுத்தும் விதமாக வேட்டி போர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இதனை கவனத்தில் கொள்ளாமல் பொது இடத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

Also Read: `சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``லாக்டெளன் விதிமுறைகளைக் கடைபிடித்து, போதுமான சமூக இடை வெளியுடன் இந்த நிகழ்ச்சிகளை வைத்திலிங்கம் நடத்தி வருகிறார். ஒரு ஊரில் மட்டும் நிர்வாகி ஒருவர் விமரிசையாக வரவேற்புக் கொடுத்தார். `இந்த நேரத்தில், இதனைச் செய்ய கூடாது’ என அதனை தடுத்து விட்டார். எதிர்க்கட்சிகள் இதனை பெரிதுபடுத்துகின்றன’’ என்பதோடு முடித்துக் கொண்டனர்.



source https://www.vikatan.com/news/politics/former-minister-vaithilingam-irks-controversy-after-organised-party-meets-in-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக