புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,396 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 4,909 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 3,364 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக மட்டுமே சுமார் 1,000 பேர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிறைந்துவிட்டதால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திகொள்ள பரிந்துரைக்கும் சுகாதாரத்துறை, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகும்படி கூறுகிறது. அறிகுறிகளுடன் புதிதாக வரும் நோயாளிகள், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பப்படும் நோயாளிகளுக்கு, பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் பொதுச்செயலாளரான பாலன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஏழுமலை (வயது 54) கொரோனா தொற்று ஏற்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
Also Read: `நான் யார் தெரியுமா?' -மிரட்டும் கரை வேட்டிகள்... திணறும் போலீஸ்; புதுச்சேரி கொரோனா அப்டேட்ஸ்
கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி. அதன்படி இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை புதுச்சேரி முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மருந்தகம், பால் நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை கொரோனா தொற்றுக்கு புதுச்சேரி மாநிலத்தில் 123 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 9 பேர் உயிரிழந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதேபோல இன்று ஒரேநாளில் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/9-corona-related-deaths-registered-in-puducherry-in-24-hours
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக