கொரோனா, ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, துபாயில் இருந்து 10 கைக் குழந்தைகள் உள்பட 184 பயணிகளுடன் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏர் எக்ஸ்பிரஸ் (IX-1134) விமானம் புறப்பட்டுள்ளது. அதில் 2 விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் இருந்துள்ளனர்.
Also Read: கேரளா: `விமானம் தரையிறங்கும் போது விபத்து!' - உயிரிழப்பு 14ஆக உயர்வு #NowAtVikatan
கோழிக்கோடு விமானநிலையம் மலப்புரம் மாவட்டம் காரிபூர் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வரும்நிலையில், வெள்ளிக்கிழமை தொடர்ந்து மழை கொட்டியுள்ளது. இதனால், அந்த விமானம் இரவு 7.40 மணியளவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, எதிர்பாரத விதமாக ரன்வேயில் சறுக்கி நிலைதடுமாறி, 30 அடி குழிக்குள் விழுந்துள்ளது விமானம். இதில் விமானம் இரண்டாக பிளந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினரும், மருத்துவக்குழுவினரும் விரைந்துள்ளனர். விமானத்தின் இரண்டு விமானிகள் தீபக் வசந்த் சத்தே, அகிலேஷ்குமார் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அதிக காயங்களுடன் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மற்றவர்களுக்கு பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த முகமது சிதான், அவரது மனைவி சாஜிதா, சாகிலா சாஜஹான் ஆகிய மூன்று பேரும் பயணித்துள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 11 மணியளவில் விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலப்புரம் (0483 2736320 ) மற்றும் கோழிக்கோடு (0495 2376901) மாவட்ட நிர்வாகங்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை (0483 2719493) உதவி எண்களை வெளியிட்டுள்ளன. மேலும், ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் நிறுவனமும், தங்களது உதவி மையம் மற்றும் உதவி எண் (1800222271) மூலம் பயணிகளின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தச் சம்பவம் தொடர்பாக, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் போன் மூலம் பேசினேன். அவர் இந்த விவகாரத்தில் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்” என கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய, மாநில அமைச்சகள், பொது மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், “விபத்துக்குள்ளான விமானம், 13 ஆண்டுகள் பழமையானது. அதன் லேண்டிங் கியர் பழுதாகிவிட்டது. இந்த விமானம் மதியமே தரையிறங்க வேண்டியது. ஆனால், பலமுறை முயற்சித்தும் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை” என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக இன்று ஏர் இந்தியா மற்றும் ஏர்போர்ட் அத்தாரட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த 2 விசாரணை குழுவினர் சம்பவ இடத்தில் விவசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகுதான், விபத்துக்கான உண்மையான காரணம் வெளியில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/india/17-died-in-kerala-plane-crash
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக