Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

வேலூர்: `திடீர் வளர்ச்சி; வக்காலத்து வாங்கும் போலீஸ்!’ -தி.மு.க புள்ளிமீது ஓயாத சர்ச்சை

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க மாணவர் அணியில், துணை அமைப்பாளராக இருந்தவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மனோஜ். காட்டன் சூதாட்ட மாஃபியாக்களை வழிநடத்துதாக இவர்மீது புகார் எழுந்திருக்கிறது. பொருளாதார சூழலில், மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மனோஜ், தற்போது பெரும்புள்ளியாக வலம்வருகிறார். கை விரல்களில் தங்க மோதிரங்கள், கழுத்தில் பெரிய தங்கச்சங்கிலி, விலைஉயர்ந்த புல்லட், கார் என மனோஜுடைய இந்த திடீர் வளர்ச்சி அனைவரையும் வியக்கவைத்திருக்கிறது. எந்த தொழிலும் தொடங்காமல், இவ்வளவுப் பெரிய உச்சத்தை எட்டியது எப்படி என்று திகைக்கும் வேளையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் தயாரானார் மனோஜ்.

முரசொலியில் வந்த அறிவிப்பு

குடியாத்தம் தொகுதியில் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு சில முக்கிய நிர்வாகிகளையும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினார். இந்த சூழலில்தான் மனோஜின் குற்றப்பின்னணி வெளிச்சத்துக்குவந்தது. காவல்துறை, ஊடகத்துறையைச் சார்ந்த சில நபர்களை அரவணைத்துக்கொண்டு காட்டன் சூதாட்டத்தை நடத்தி தினக்கூலி தொழிலாளர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிப் பறிப்பதாக தி.மு.க தலைமைக்குப் புகார் பறந்தது. இதையடுத்து, ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. மனோஜ் மீதான குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்ததால், அவரிடம் இருந்து எந்த விளக்கத்தையும் பெறாமல் மாணவர் அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது தி.மு.க தலைமை.

இதற்கான அறிவிப்பு முரசொலியில் நேற்று வெளியாகியிருந்தது. இதுதொடர்பாகப் பேசிய மனோஜ்,``நான் அந்த மாதிரி ஆள் இல்லை. என்மீது களங்கம் ஏற்படுத்த தவறான தகவலைப் பரப்புகிறார்கள்’’ என்று கூறியிருந்தார். இப்படியானச் சூழலில், `மனோஜ் ரொம்ப நல்லவர், வல்லவர்’ என்று வாலன்ட்டரியாக ஆஜராகி வக்காலத்து வாங்குகிறார்கள் குடியாத்தம் போலீஸார். இதுதொடர்பாக குடியாத்தம் டி.எஸ்.பி சரவணனிடம் கேட்டபோது, ``என்னுடைய சப்-டிவிஷனில் காட்டன் சூதாட்டம் நடக்கவே இல்லை. பொறுப்பில் இருந்து மனோஜ் நீக்கப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கும். நன்றாக விசாரித்துப் பாருங்கள்’’ என்றார்.

குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன்

இதுகுறித்து, அறிவாலயத்துடன் தொடர்பில் இருக்கும் முக்கிய நிர்வாகியிடம் கேட்டபோது,``மனோஜ் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான். ஆதாரங்கள் கிடைத்தப் பின்னரே, அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறோம்’’ என்றார். காட்டன் சூதாட்டம் நடக்கிறது என்று தி.மு.க நிர்வாகிகளே ஒப்புக்கொள்ளும் சூழலில் பதவிப் பறிக்கப்பட்ட நிர்வாகிக்கு ஆதரவாக போலீஸாரே ஆதரவாகப் பேசுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது. `எது எப்படியாக இருந்தாலும், தி.மு.க பிரமுகர் மனோஜுடன் தொடர்பிலிருக்கும் காட்டன் மாஃபியாக்களின்மீதும், மாதந்தோறும் மாமூல் வாங்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கொந்தளிக்கிறார்கள் குடியாத்தம் மக்கள்.



source https://www.vikatan.com/news/politics/gudiyatham-controversy-police-supports-former-dmk-official

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக