Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

திருநெல்வேலி: `5 மாதங்களாகப் பேசவில்லை!’ - ஏமனில் தவிக்கும் பொறியாளர் குடும்பம் கண்ணீர்

நெல்லை புறநகர் பகுதியான மூளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் மாரியப்பன். அவரது மனைவி வேல்மதி. இவர்களுக்கு மோசஸ் என்ற 5 வயது மகனும் அர்ஷாரியா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். பொறியாளரான மணிராஜ் மாரியப்பன், ஓமன் நாட்டின் `ஐலாண்ட் பிரிட்ஜ் ட்ரெய்னிங் அண்ட் டிரான்ஸ்போர்ட்’ என்ற கம்பெனியில் தலைமைப் பொறியாளராக உள்ளார்.

பொறியாளர் மணிராஜ் மாரியப்பன்

கப்பலில் வேலை செய்த மணிராஜ் மாரியப்பன், குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர் நெல்லையில் இருந்து கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பணிக்குத் திரும்பிச் சென்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிவந்த அவர், பிப்ரவரி 17-ம் தேதிக்குப் பிறகு பேசவில்லை.

Also Read: `சாகுறதுக்குள்ள மகனை ஒரு தடவைப் பார்த்துடணும்' - வீட்டை விற்று வெளிநாடு அனுப்பிய கோமதி பாட்டியின் ஏக்கம்!

கடைசியாக அவர் மனைவி வேல்மதியிடம் பேசியபோது, `எங்கள் கப்பலில் 14 இந்தியர்களும் பங்களாதேஷைச் சேர்ந்த 5 பேரும் எகிப்து நாட்டைச் சேர்ந்த கப்பல் மாலுமியும் இருக்கிறோம். நாங்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்றபோது கடலில் சீற்றம் ஏற்பட்டது.

மணிராஜ் மாரியப்பனுடன் கப்பலில் உள்ள குழுவினர்

அதனால் கப்பல் தரைதட்டி விபத்து ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக ஏமன் நாட்டு எல்லைப் பகுதியில் கப்பலை நிறுத்தி வைத்தோம். அங்கு வந்த அந்த நாட்டு அதிகாரிகள், எங்கள் அனைவரையும் கைது செய்து விட்டார்கள். அதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு குடும்பத்தினரால் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஏமனில் சிக்கிய பொறியாளர் மணிராஜ் மாரியப்பனின் மனைவி வேல்மதி, தன் இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கணவரை மீட்டுத்தரக் கோரி கண்ணீருடன் மனு அளித்தார்.

குடும்பத்தினருடன் வேல்மதி

இது குறித்து வேல்மதி கூறுகையில், ``கடந்த 5 மாதங்களாக எங்களால் என் கணவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரும் எங்களிடம் பேசவில்லை. தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் அவரது உடல்நிலை குறித்து கவலையாக இருக்கிறது. அவரை விரைவாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நானும் என் குழந்தைகளும் அவரது வருவாயை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அவரைத் தொடர்பு கொள்ள இயலாததால் குடும்பத்தினர் அனைவருமே வேதனையில் இருக்கிறோம். தூதரக உதவியுடன் அவரையும் அவருடன் இருக்கும் இந்தியர்களையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஏமன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள மணிராஜ் மாரியப்பன், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கக்கூடும் என உறவினர்கள் சந்தேகிக்கிறார்கள். அதனால் அவரது தற்போதைய நிலை குறித்தாவது உடனடியாக விசாரித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/family-of-tirunelveli-engineer-stranded-in-oman-seeks-governments-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக