லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தின் சேமிப்பு கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் மொத்த நகரமும் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளனர். துறைமுக வட்டாரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவு வரை உள்ள கட்டடங்கள் சுக்குநூறாக நொறுங்கின. 4000 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 3,00,000 மக்கள் தங்கள் வீட்டை இழந்து தவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. 6,000-த்துக்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்குத் துறைமுக அதிகாரிகள் மற்றும் நீதித்துறையின் அலட்சியம் தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைமுக அதிகாரிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Also Read: BeirutBlast :`2,750 டன் அமோனியம் நைட்ரேட்; கட்டடங்கள் தரைமட்டம்!’ - லெபனான் விபத்தின் பின்னணி
அமோனியம் நைட்ரேட்!
அமோனியம் நைட்ரேட் என்பது வெள்ளை நிறத்தில் உப்பு போல இருக்கும் ஒரு சேர்மம். இதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3 ஆகும். இது நீரில் கரையும் தன்மை கொண்டது. இந்த வேதிப்பொருளானது, பெரும்பாலும் விவசாயத்துறையில் உரமாகவும், சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் வெடிபொருள்களின் முக்கியப் பகுதியாகவும் உள்ளது. பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக அமோனியம் நைட்ரேட் உரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கட்டடங்களை இடிக்கவும் பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. இது வெடிக்கும் தன்மைகொண்டதால் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே பல நாடுகள் இந்த சேர்மத்தை பொதுவான நுகர்வோர் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அமோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரியும் அப்போது வெளியாகும் சிவப்பு நிற புகை அதிக நச்சுத்தன்மை கொண்டது. இந்த புகை மனிதர்களை நொடியில் கொல்லும் திறனுடையது என்றும் அறிவிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த பெரும் விபத்து, அனைத்து நாடுகளையும் விழிப்படையச் செய்துள்ளது. தங்கள் நாடுகளில் இருக்கும் அமோனியம் நைட்ரேட் தொடர்பாக அனைவரும் தற்போது சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் அமோனியம் நைட்ரேட்!
இந்நிலையில் வட சென்னை துறைமுகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 740 டன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் அம்மன் கெமிக்கல் நிறுவனம் அனுமதியில்லாமல் 2015-ம் ஆண்டு இறக்குமதி செய்த 740 டன் அமோனியம் நைட்ரேட் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டடது. கடந்த 5 ஆண்டுகளாக வடசென்னை துறைமுகத்தையொட்டிய குடோனில் அமோனியம் நைட்ரேட் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
Also Read: ஏன்... எப்படி... எதனால் வெடித்தது லெபனான்? #BeirutBlast
துறைமுகத்தில் 37 கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ள இந்த அமோனியம் நைட்ரேட்டின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அதைப் பாதுகாப்பாக எப்படி அப்புறப்படுத்தலாம் என்ற ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சென்னை துறைமுகத்துக்கு வரும் ஒவ்வொரு சரக்குகளும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஒரு தனித்துவமான நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. இதையே எங்கள் அதிகாரிகளும் பின்பற்றுகின்றனர்’ என ஒரு உயர் அதிகாரி கூறியுள்ளார்.
இதற்கிடையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இந்த விவகாரம் தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில்``சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணம்!
சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!'’ என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read: `90 சதவிகித ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு!’ -கொரோனா அச்சத்தால் திணறும் தூத்துக்குடி துறைமுகம்
சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு ``பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. அவை, விரைவில் ஏலம் விடப்படவுள்ளது. மணலி சுங்கத்துறை கிடங்கை சுற்றி வீடுகள் எதுவும் இல்லை. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்" என்றனர்
source https://www.vikatan.com/news/tamilnadu/ammonium-nitrate-storage-at-chennai-port-irks-controversy-after-beirut-explosion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக