Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

இன்று தவறவிடக்கூடாத மகாசங்கடஹர சதுர்த்தி... கட்டாயம் விநாயகரை வழிபடுங்கள்!

தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அன்றைய நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மகாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.

விநாயகர்

மகாசங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகரைக் கட்டாயம் வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கட ஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

நான்காம்பிறை பார்க்கலாமா...

மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது மிகவும் புண்ணியம் என்றும் சதுர்த்தி அன்று சந்திரனை தரிசனம் செய்யக் கூடாது என்றும் நம்பிக்கை உள்ளது. மூன்றாம்பிறை தோன்றி மறைவது மிகவும் குறைவான காலம். எனவே, அதை தரிசிப்பது மிகவும் கடினம். நினைவு வைத்துக்கொண்டு தரிசிக்க முயல வேண்டும். மறந்துவிட்டால் சில நிமிடங்களில் மறைந்துவிடும். மேகம் போன்றவை சூழ்ந்தும் காண முடியாதபடி நேர்ந்துவிடும். ஆனால், நான்காம் பிறையோ நம்மை சங்கடப்படுத்துவதற்கென்றே நீண்ட நேரம் மேற்கில் நிலைத்துக் காணும்படி நிற்கும். எனவே, அதை தரிசிக்காமல் யாரும் இருக்க முடியாது.

விநாயகர்

புராணங்களிலும் நான்காம்பிறையைக் கண்டவர்கள் அவதியுற்றதான நிகழ்வுகளும் உண்டு. ஆனால், யதேச்சையாக மேல் நோக்கினாலே கண்ணில் படும் சந்திரனைக் காணாமல் இருக்க முடியுமா... அப்படிக் கண்டதும் நமக்கு தோஷம் பிடிக்குமா... என்னும் பல கேள்விகள் நம்மிடையே உள்ளன. அவற்றை எல்லாம் ஆராயாமல் அதற்கு நம் சாஸ்திரங்கள் அளித்திருக்கும் தீர்வை நாடுவது மிகவும் நல்லது.

சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே, சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் பல புராண நிகழ்வுகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். வாழ்வில் சங்கடங்கள் தீரும். வழிபாடுகள் செய்யாமல் பயணத்தின்போதோ சாதாரணமாக இருக்கும்போதோ நான்காம்பிறைச் சந்திரனைக் கண்டுவிட்டால் அஞ்சத் தேவையில்லை. உடனடியாக விநாயகப் பெருமானை மனதார நினைத்து ஒரு நிமிடம் அவரின் துதி ஒன்றைச் சொன்னாலே போதும் சந்திர தரிசனத்தால் உண்டான தோஷம் நீங்கிவிடும்.

வெள்ளை விநாயகர்

Also Read: `யோகம் அருளும் ஈச்சனாரி விநாயகர்..!' -இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

வழக்கமான சதுர்த்தி தினங்களில் செய்யும் வழிபாடே சங்கடங்கள் தீர்க்கும் என்றால் மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு பல்வேறு வரங்களை வழங்கும். குறிப்பாகக் கடன் பிரச்னைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை சந்திர உதயநேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து ஒரு மலர் சாத்தி விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்ற வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.



source https://www.vikatan.com/spiritual/gods/significance-of-maha-sankatahara-chaturthi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக