Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ரஜினி, விசிக, கம்யூ... மக்கள் நலக் கூட்டணி 2.0-க்கு தயாராகிறதா மக்கள் நீதி மய்யம்? #2021TNElection

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாததற்கு அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சொன்ன காரணம்தான் மேலே நீங்கள் படித்தது. ஆனால், கமலின் இந்த முடிவு அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ``தோல்வி பயத்தால்தான் கமல் பின்வாங்கிவிட்டார். ஒரு மாதத்துக்கு முன்புவரை கண்டிப்பாகத் தேர்தலில் போட்டியிடுவேன் எனச் சொல்லிவந்த கமல், `யாருக்கும் ஆதரவில்லை' என ரஜினிகாந்த்தின் அறிக்கைக்குப் பிறகு போட்டியிடவில்லை என்கிறார். அவரின் கட்சிக்கு கிராமப்புறங்களில் வலுவான கட்சிக் கட்டமைப்பு இல்லை. தன் பயத்தை மறைக்கவே மற்றவர்களின் மீது குற்றம் சாட்டுகிறார்'' என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

கமல்

ஆனால், ``2021-ல் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்களுடைய உழைப்பை கவனத்தை நாங்கள் சட்டமன்றத் தேர்தலின் மீதுதான் வைக்க விரும்புகிறோம். இன்னும் மீதமிருக்கும் 50 வாரங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவுள்ளோம். எங்கள் கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தவுள்ளோம். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறோம். எங்கள் தலைவர் எடுத்திருக்கும் இந்த முடிவு மிகவும் ஆரோக்கியமான முடிவு'' என்றார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்.

ஒருவேளை கொரோனா காரணமாக, 2021 சட்டமன்றத் தேர்தல் தள்ளி வைக்கப்படாமல் இருந்தால் இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. மக்கள் நீதி மய்யத்தினரின் கணக்கின்படிச் சொன்னால் இன்னும் 36 வாரங்களே இருக்கின்றன.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறது. 2019 பாராளுமன்றத் தேர்தலைப் போல, தனித்துப் போட்டியா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போகிறதா என்பதைப் பார்க்கும் முன்பாக மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பலம் குறித்துப் பார்ப்போம்.

கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் தேதி, மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். கட்சி தொடங்கி ஏறக்குறைய ஒரு வருடத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியிடனும் கூட்டணியில்லாது தேர்தலைச் சந்தித்தது மக்கள் நீதி மய்யம். பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய இரு தொகுதிகளைத் தவிர்த்து, 37 இடங்களில் போட்டியிட்டு 15,73,620 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 3.77 சதவிகிதம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

அதுமட்டுமல்லாமல் சென்னையிலுள்ள வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் பத்து சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சென்னையைத் தவிர கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பூர் என 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நீதி மய்யம் அப்போது பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த உள்ளாட்சித் தேர்தல், டிசம்பர் மாத இறுதியில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தொடர்ச்சியாக கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டும், `மாநில சுயாட்சி' போன்று உள்ளாட்சி அமைப்புகளும் தனிச்சையான அதிகாரம் பெற மெனக்கெடுவோம், ``திட்டங்கள் சென்னையில் இருந்துவராமல், உள்ளாட்சி அமைப்புகளே முடிவெடுக்கும் அதிகாரத்தை உருவாக்கப் போராடுவோம்'' என்று முழங்கியும் வந்த மக்கள் நீதி மய்யம், திடீரென கடைசி கட்டத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை எனப் பின்வாங்கியது. இந்தநிலையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறது என்பது குறித்து ம.நீ.ம நிர்வாகிகள் சிலரை நேரில் சந்தித்துப் பேசினோம். அவர்களுடன் பேசியதில் பல விஷயங்கள் புலப்பட்டன.

கடந்தவாரம், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் 400 பேரை வைத்து ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. நிர்வாகிகள் சிலர் புரிதல் இல்லாமல் நடந்துகொள்வதாக வந்த புகாரையொட்டியே இந்த மீட்டிங்கை கமல் ஏற்பாடு செய்திருந்தார். அதில் 40 கேள்விகள் தயார் செய்யப்பட்டு, அதற்கு கமல் பதிலளித்திருக்கிறார். அதில், ஆளும்கட்சியை எந்த இடத்தில் ஆதரிக்கவேண்டும், எந்த இடத்தில் விலகி நிற்கவேண்டும் போன்ற விளக்கங்களை அவர் அளித்துள்ளார். ``தி.மு.க அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நம் கட்சி உருவாகியிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அதனால் தேர்தல் வெற்றிக்காக, இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பது குறித்தெல்லாம் யாரும் சிந்திக்கவேண்டாம். நான் உங்களுக்குக் கொடுத்த பொறுப்புகளைச் சரியாகச் செய்யுங்கள் மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நிர்வாகிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கமல்.

நிர்வாகிகள் மீட்டிங்கில் கமல்

ம.நீ.ம-வும் வழக்கமான ஒரு கட்சியாக, வரும் தேர்தலைச் சந்திக்காமல், மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் ஒரு மாற்று அணியாக உருவாக வேண்டும் என்பதே கமலின் விருப்பம். தவிர ஊடகத்தினருக்கு நம் கொள்கை புரிந்து அவர்களும் ஏற்றுக் கொண்டால்தான் கட்சியின் நோக்கம் மக்களிடம் சென்று சேரும் என்பதையும் கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த 3 மணி நேர மீட்டிங் பல நிர்வாகிகளுக்கு தெளிவான புரிதலையும் உற்சாகத்தையும் தெம்பையும் அளித்ததாக நம்மிடம் பேசியவர்கள் கூறினார்கள்.

``இப்போதே தலைவருடன் பல கட்சியினர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை விரும்பி, தேர்தலில் போட்டியிட்ட, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த தேர்தல் முடிவால் அவர்கள் இழந்த நம்பிக்கையைக் கொடுக்கும் வியூகங்களை நாங்கள் கைவசம் வைத்திருக்கிறோம். பினராயி விஜயன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்களுடனும் எங்கள் தலைவர் மிக நெருக்கமாக இருக்கிறார். அதனால், கண்டிப்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்கள் அணிக்கு வருவார்கள். அவர்கள் வந்துவிட்டால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எங்கள் அணிக்கு நிச்சயம் வரும். அதற்கான வேலைகளை எங்கள் தலைவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்'' என்றார் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த கட்சிகள் எந்த நம்பிக்கையில் மாற்று அணிக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால் நிர்வாகிகள் சொல்லும் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது.

``ரஜினி கண்டிப்பாக கட்சி ஆரம்பிப்பார். தேவைப்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக இணைவோம் என ரஜினி, கமல் இருவருமே சொல்லியிருக்கிறார்கள். அது வெறும் வாய் வார்த்தைகள் இல்லை. நிச்சயமாக அது நடக்கும். கண்டிப்பாக பா.ஜ.கவுடன் ரஜினி கூட்டணி சேரமாட்டார். அப்படி ரஜினியும் கமலும் ஒன்றிணையும்போது, மற்ற கட்சிகள் கூடுதல் நம்பிக்கையுடன் எங்களுடன் வருவார்கள். நாங்கள் அனைவரும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம். இப்போதே கட்சி ஆரம்பித்தால் மக்களின் எதிர்பார்ப்பு, உற்சாகம் நீர்த்துப்போய்விடும் என்பதற்காகவே ரஜினி இப்போது கட்சி ஆரம்பிக்காமல் இருக்கிறார். தேர்தலையொட்டி கட்சி ஆரம்பிப்பார். அப்போது மக்களுக்கு உடனடியாக முடிவெடுக்க வேண்டிய சூழல் வரும். நிச்சயமாக எங்களை ஆதரிப்பார்கள்.

ரஜினி - கமல்

கமலும் ரஜினியும் இணைந்தால் யார் முதல்வர் என்கிற விவாதம் கண்டிப்பாக எழாது. ரஜினியும், கமலும் தேவையா என்கிற விவாதம்தான் எழும். அப்போது தமிழக மக்களும் சரி ஊடகங்களும் சரி நிச்சயமாக எங்களை மாற்றாக மட்டுமல்ல வலுவான மாற்றாக ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் இலக்கு இந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பிடிக்கவேண்டும் என்பது அல்ல ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதே. அது நிச்சயம் நடக்கும்'' என்பது அவர்கள் தரப்பு வாதம்.

2016 சட்டமன்றத் தேர்தலில், இதே போன்று ஏற்படுத்தப்பட்ட மூன்றாவது அணியான மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது. மீண்டும் ஒரு மூன்றாவது அணி எந்த அளவுக்குச் சாத்தியம்?

``விஜயகாந்த் 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்காமல் 2016 தேர்தலில் புதிய அணியை உருவாக்கியிருந்தால் நிச்சயமாக மக்கள் அவரை, அந்தக் கூட்டணியை ஆதரித்திருப்பார்கள். ஆனால், கட்சியைத் தக்கவைக்க 2011 தேர்தலில் கூட்டணி வைத்தார். அப்போது கட்சி தப்பித்தது; ஆனால் அந்தக் கட்சி தன் எதிர்காலத்தை இழந்துவிட்டது. ஆனால், எங்களுக்கோ, ரஜினிக்கோ அந்தப் பிரச்னை இல்லை. அதனால் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம்.” என்று உறுதிபடக் கூறினார் ம.நீ.ம நிர்வாகி ஒருவர் .

மக்கள் நலக்கூட்டணி

வேறு எந்தக் கட்சியாவது ம.நீ.ம-வுடன் கூட்டணி சேருமா?

``இல்லை. பா.ம.கவும், தே.மு.தி.கவும் அவர்களை முன்னிறுத்தித்தான் தேர்தலைச் சந்திப்பார்கள். வைகோ கடைசி நேரத்தில்கூட தனது முடிவை மாற்றிக்கொள்ளக் கூடியவர். அவர் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியாது. அடுத்ததாக, சீமான் இருக்கிறார், ஆனால் அவருடன் கொள்கை ரீதியாக எங்களால் ஒத்துப்போக முடியாது. அவர் தமிழர்களுக்காக போராடுகிறேன் என்கிறார். நாங்கள் தமிழக மக்களுக்காகப் போராடுகிறோம். அதேபோல நாங்கள் திராவிடக் கட்சிகளைத்தான் எதிர்க்கிறோமே ஒழிய திராவிடம் என்கிற கருத்தியலை இல்லை. அந்தவகையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே எங்களுடன் அனைத்து வழியிலும் ஒத்துவரும் கட்சிகளாக இருப்பார்கள். அவர்களும் ரஜினி, பா.ஜ.கவை ஆதரிப்பத்தைத்தான் எதிர்க்கிறார்களே தவிர ரஜினியை எதிர்க்கவில்லை. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்கள் ம.நீ.ம வட்டாரத்தினர்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், கடைசிவரை போட்டியிடுவோம் எனச் சொல்லிவந்த கமல், ``தேர்தலைச் சந்திக்கவில்லை. யாருக்கும் ஆதரவில்லை. மக்கள் மன்றத்தின் பெயரையோ, கொடியையோ, படத்தையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிக்கை வெளிவர, தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார். பயந்துவிட்டார் கமல் என அப்போதே எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால், அது பயமா, இல்லை ரஜினிக்காகக் காத்திருந்த தேர்தல் யுக்தியா என்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-rajinikanth-and-kamal-haasan-pair-up-for-upcoming-tn-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக