அயோத்தி நகரம் - விழாக்கோலம்
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான இடங்களில் வண்ண விளக்குகள், தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாதுகாப்பு குறியீடு அழைப்பிதழ் வழங்கப்பட்ட 175 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 135 பேர் ஆன்மிகத் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி:
பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அவர் அயோத்தியில் சுமார் 3 மணி நேரம் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.35 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் பிரதமர் 10.35 மணிக்கு லக்னோ வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வரவுள்ளார்.

முதலில் அனுமன்கரி கோயிலுக்குச் செல்லும் மோடி அங்கு 10 நிமிடங்கள் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிறகு, ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் இருக்க 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிற்பகல் 1 மணிக்கு மேல், ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்து 2 மணிக்கு லக்னோ செல்லும் அவர், 2.20-க்கு லக்னோவிலிருந்து டெல்லி புறப்படுகிறார்.
அடிக்கல் நாட்டு விழா:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனக் கடந்த வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து அங்கு கோயில் கட்டுவதற்காகப் புதிய அறக்கட்டளை அமைத்து பணிகள் தொடங்கப்பட்டன. ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/ayodhya-ram-temple-bhoomi-pooja-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக