Ad

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

Covid Questions: கோதுமை, ரவை, மைதா சாப்பிட்டால் அலர்ஜி; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

எனக்கு கோதுமை அலர்ஜி உள்ளது. கோதுமை, ரவை, மற்றும் மைதா எடுத்துக்கொள்வதில்லை. Anaphylactic Reaction ஆகிறது. சருமத்தில் தடிப்பு, குறை ரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுகின்றன. இந்நிலையில் நான் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

- மஞ்சு செந்தில் (விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

``உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பக்க விளைவுகளுக்கும், பலவித மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இப்படிப்பட்ட தேவையில்லாத பயம் காரணமாகவோ, ஆதாரமற்ற தகவல்களைக் கேள்விப்பட்டோ உங்கள் உயிரைக் காக்கக்கூடிய கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது விவேகமான செயல் அல்ல.

ஏற்கெனவே ஏதோ தடுப்பூசி போட்டுக்கொண்டு அதனால் பயங்கரமான பக்க விளைவு ஏற்பட்டு தீவிர காய்ச்சல், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கைகால் செயலிழப்பு, மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவை ஏற்பட்டவர்கள் மட்டும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்த்தால் போதும்.

லட்சத்தில் ஒருவருக்கு எந்தத் தடுப்பூசி போட்டாலும் `அக்யூட் குலியன் பாரி சிண்ட்ரோம் (Acute Guillain-Barré syndrome (GBS) எனும் அபூர்வ பிரச்னை ஏற்படலாம். அதாவது பலவிதமான தசைகள், பலவிதமான நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மூச்சுவிடக்கூட சிரமம் ஏற்படும். சிலருக்கு கால் நரம்புகள் செயலிழந்து, இளம்பிள்ளை வாதம் வந்தவர்கள் போல நடக்கவே முடியாமல் அவதிப்படுவார்கள்.

கொரோனா

Also Read: Covid Questions: வீட்டுக்கு வாங்கி வரும் பொருள்களை இனியும் கிருமிநீக்கம் செய்ய வேண்டுமா?

உதரவிதானம் செயலிழந்து மூச்சுவிட முடியாமல் செய்து, வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு தீவிரநிலைக்கு கொண்டு செல்லலாம். இது கொரோனா தடுப்பூசிக்கு மட்டுமல்ல, எல்லாவித தடுப்பூசிகளாலும் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய தீவிரமான பக்க விளைவு. மிக மிக அரிதானது என்பதையும் மறக்க வேண்டாம்.

எந்த விஷயத்திலும் ரிஸ்க் வெர்சஸ் பெனிஃபிட் என்ற ஒன்றை கவனிக்க வேண்டியது முக்கியம். ஒரு விஷயத்தால் ஏற்படும் நன்மை என்ன, இழப்பு என்ன என யோசிக்கும்போது, லட்சத்தில் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்படுவதை நினைத்து பயந்துகொண்டு, உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசியைத் தவிர்ப்பது ஆபத்தானது. எனவே நீங்கள் எந்த பயமும் இன்றி கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்."

Also Read: ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/my-body-undergoes-anaphylactic-reaction-when-i-take-wheat-can-i-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக