Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

புதுக்கோட்டை: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்! -அறுவை சிகிச்சையில் பலியான சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரன். இவரது இரண்டாவது மகள் ராணி. ராணிக்கும், கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2018-ல் தான் இவர்களுக்குப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே ஒரு மகள் உள்ள நிலையில், அப்போது மகனும் பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சம்மதித்ததன் பேரில் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டைக்கு வந்திருந்த ராணிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் குடும்பக்கட்டுப்பாடு செய்த ராணிக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் உருவாகிய கருவை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எங்குக் குழந்தையை அகற்றாமல் விட்டால், உயிருக்கு ஆபத்தாகிவிடுவோ என்று சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ராணி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். 2018-ல் குடும்பக்கட்டுப்பாடு அலட்சியமாகச் செய்த மருத்துவக் குழு மீதும், தற்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த விவகாரம் - போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

இதுபற்றி ராணியின் உறவினர்களிடம் கேட்டபோது, "பையன் பிறந்தப்பவே, அதாவது 3 வருஷத்துக்கு முன்னாலேயே குடும்பக்கட்டுப்பாடு பண்ணியாச்சு. குடும்பக் கட்டுப்பாடு பண்ணியும் எப்படி ராணிக்குக் குழந்தை உண்டாச்சுன்னு மருத்துவர்கள்கிட்ட கேட்டப்ப, `பயப்படத் தேவையில்லை. கருவை அகற்றிவிடலாம்னு’ சொல்லி எங்க வாயை அடைச்சிட்டாங்க. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி மருத்துவர்கள், செவிலியர்கள் ராணி விஷயத்தில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு இருக்காங்க. அலட்சியா செயல்பட்ட அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "ராணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, ஆக்ஸிஜன், பிபி ரொம்பவே குறைய தொடங்கியிருக்கிறது. மருத்துவர்கள் ராணியைக் காப்பாற்ற எவ்வளவோ போராடிப் பார்த்திருக்கிறார்கள். முடியாமல் போனது. ஆனாலும், இதுகுறித்தெல்லாம் துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/pudukottai-women-who-had-done-family-planning-got-pregnant-died-in-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக