Ad

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

ஈரோடு: `ப்ளீச்சிங் பவுடர் ரூ.5 லட்சம்; சாக்கடை டு சுடுகாடு ஊழல்!’ - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் புகார்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கொத்தமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியினுடைய தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவரும் கூட்டுசேர்ந்து ஊராட்சியில் நடக்காத பல வேலைகளுக்கு, கூடுதலாக செலவானதாக பொய்க் கணக்கு எழுதி அரசுப் பணத்தை ஊழல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியான நிலையில் சம்பந்தப்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் 6 பேர், ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஊராட்சியில் நடந்து வரும் ஊழல் குறித்து புகார் மனுவினைக் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக புகாரளிக்க வந்த கவுன்சிலர்கள்

அந்தப் புகார் மனுவில் ‘கொத்தமங்கலம் ஊராட்சித் தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் சண்முகம் (எ) செல்வம் ஆகிய இருவரும் சேர்த்து, ஊராட்சியில் செய்யாத பல வேலைகளுக்கு பொய்க்கணக்கு எழுதி ஊழல் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் குடிநீர்க் குழாய் பழுது பார்க்காமல், பழுது பார்க்கப்பட்டதாகச் சொல்லி ரூ. 70,900 பில் போட்டிருக்கின்றனர். ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது பார்க்கப்பட்டதாகச் சொல்லி ரூ.23,090 கணக்கு எழுதி வைத்துள்ளனர். சாக்கடையில் குப்பைகள் அள்ளிய வகையில் என்று ரூ. 32,300 பில் போட்டுள்ளனர். அதேபோல கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சுடுகாடுகளில் சிறிதளவு வேலை செய்துவிட்டு ரூ.81,500 பில் போட்டு தொகை எடுத்துள்ளனர்.

குறைந்த அளவு பிளீச்சிங் பவுடர் மட்டுமே வாங்கிய நிலையில், 5 லட்ச ரூபாய்க்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதாக கணக்கு எழுதியிருக்கின்றனர். இதுபோக, ஊராட்சிக்கு மரக்கன்றுகள் நடுவதற்கு குழி தோண்டும் மெஷின் வாங்கியதற்கு ரூ. 34,200, மற்றும் அலுவலக செலவுகளான ஜெராக்ஸ், ஸ்டேஷனரி என தனித்தனி பில் போடப்பட்டு ரூ.1,08,450 பணத்தை எடுத்துள்ளனர்’ என ஊராட்சியில் நடந்த பல ஊழல்களை பட்டியலிட்டிருந்தனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் புகாரளித்த கொத்தமங்கலம் ஊராட்சியின் 9-வது வார்டு உறுப்பினர் சேசுராஜ், ``வார்டுல இருந்துபோய் தலைவர்கிட்ட ப்ளீச்சிங் பவுடர் வேணுமுன்னு கேட்டப்ப எல்லாம், இல்லைன்னு தான் சொல்லி அனுப்புனாங்க. இப்போ என்னன்னா 5 லட்ச ரூபாய்க்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியிருப்பதா கணக்கு எழுதி வச்சிருக்காங்க. தூய்மைக் காவலர்களை வெச்சி சாக்கடைகளை தூர்வாரி சுத்தம் செஞ்சிட்டு, அதுக்கு 32 ஆயிரம் பில் போட்ருக்காங்க. நெரிஞ்சுப்பேட்டை 9-வது வார்டுல சுப்பன் என்று ஒரு ஆளே கிடையாது. அவர் வீட்டுக்குப் பக்கத்துல உடைஞ்ச பைப்பை சரிசெஞ்சதா 4,900 ரூபாய் கணக்குல எழுதியிருக்காங்க. அதேமாதிரி அந்த வார்டுல விநாயகர் கோயிலே கிடையாது. அங்க உடைஞ்ச பைப்லைனை பராமரிச்சதா கணக்கு காட்டி பணம் எடுத்துருக்காங்க. இப்படி ஊராட்சியில ஏராளமான ஊழல்களை தலைவரும், துணைத் தலைவரும் செஞ்சிட்டு இருக்காங்க. ஒவ்வொரு கூட்டத்தின் போது இதையெல்லாம் கணக்கு கேட்டு எதிர்த்து சண்டை போட்ருக்கோம். பஞ்சாயத்து தீர்மானத்துல வரவு - செலவு கணக்கை அங்கீகரிக்க மாட்டோம்ன்னு எழுதி கையெழுத்தும் போட்ருக்கோம். ஊராட்சி நிர்வாகத்தோட ஊழலைக் கண்டிச்சி 6 போராட்டங்களை இதுவரை நடத்தியிருக்கோம். இருந்தும் ஊழல் நடைபெறுவது நின்றபாடில்லை. கலெக்டர்கிட்ட மனு கொடுத்துருக்கோம். அவர் அதிகாரிகளை அனுப்பி விசாரித்து நடந்துள்ள ஊழல்களை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

கொத்தமங்கலம் ஊராட்சி

இதுசம்பந்தமாக கொத்தமங்கலம் ஊராட்சியின் துணைத் தலைவர் சண்முகம் அவர்களிடம் பேசினோம். “ஊராட்சி நிர்வாகத்துல இதுவரை எந்த கையாடலோ, முறைகேடோ நடக்கலை. தலைவர், துணைத்தலைவர் என ஊராட்சியில அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாங்க 6 பேர் கவுன்சிலரா இருக்கோம். அதேமாதிரி கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த 6 பேர் இந்த ஊராட்சியில கவுன்சிலரா இருக்காங்க. ரெண்டு கட்சிகளுக்கும் இடையிலான பாகுபாடு, பிரச்னை ஆரம்பத்துல இருந்தே இருக்குது. குறிப்பா கம்யூனின்ஸ்ட் காரவங்க வேணுமுன்னு திட்டமிட்டு இந்தமாதிரி பிரச்னை பண்ணிட்டு இருக்காங்க” என்றார்.

Also Read: கரூர்: தரம் குறைந்த நிலக்கரி; பல கோடி ரூபாய் ஊழல்?! - டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்



source https://www.vikatan.com/government-and-politics/controversy/ward-councilors-complaint-against-panchayat-office-for-corruption

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக