Ad

வியாழன், 22 ஜூலை, 2021

தி.மு.க-வின் மக்களைக் கவர்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து 80 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், ‘ஆட்சி அமைத்ததும் செய்வதாகச் சொன்ன தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை தி.மு.க நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன’ எனப் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலிலும் ‘தி.மு.க வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்ற கோஷத்தையே எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால், ‘தி.மு.க அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது, கொரோனா பேரிடரை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது, திறம்படச் செயல்பட்டதால் இந்தியாவிலேயே நன்றாகச் செயல்பட்ட முதல்வர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நிதி தொடர்பாக அ.தி.மு.க கொடுத்த தகவல்கள் வேறு. ஆனால், ஆராய்ந்து பார்த்ததில் உண்மை நிலைப்படு பாதாளத்தில் இருக்கிறது. அதைச் சரிசெய்வதற்கே எங்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்’ என தி.மு.க- வினர் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

மேலும், ‘தி.மு.க அரசு மக்களுக்கான நல்லாட்சியைக் கொடுப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறோம்’ எனவும் ஆளும் தரப்பிலிருந்து விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கப்படுகிறது. உண்மையில், தி.மு.க-வின் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளும் தரப்பில் இருக்கும் பதில்கள் என்ன?

Also Read: பெகாசஸ் விவகாரம்: அதிரவைக்கும் உண்மைகளும் ஆட்டம் காணும் பா.ஜ.க அரசும்!

தி.மு.க நிறைவேற்றாமல் விட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம் “தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதை நிறைவேற்ற முடியவில்லை என்றதும் கடந்த ஆட்சியாளர்கள் மீது பழி சுமத்துவது தவறானது. கடந்த ஆட்சியில் பல்வேறு குழுவில் இடம்பெற்றிருந்த தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் வரவு, செலவு குறித்து நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என நீட்டி முழக்கிவிட்டுத் தற்போது நிதி இல்லை என்று காரணம் சொல்வது அவர்களின் நிர்வாகத் திறன் இல்லாததைத்தான் காட்டுகிறது. தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியிருக்கும்போது அ.தி.மு.க ஆட்சியில் அதிக நிதி இருந்ததாகச் சொன்னது போலவும், இவர்கள் வந்துதான் தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக இருக்கிறது என்று கண்டறிந்தது போலச் சொல்வது தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்து மக்களை ஏமாற்றும் செயல்தானே தவிர வேறில்லை. பெட்ரோல், டீசல் விலையில் வாட் வரியைக் குறைக்கிறோம் என்றார்கள். காஸ் சிலிண்டருக்கான விலையைக் குறைப்பதாகச் சொல்லவில்லை. மானியம் தருகிறேன் என்றார்கள். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றார்கள். கல்விக் கடனை ரத்து செய்கிறேன் என்றார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால், எதையும் செய்யலாம் எல்லாவற்றுக்கும் மத்திய அரசைக் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தேதான் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அதைத்தான் தி.மு.க அமைச்சர்கள் அவர்களின் பேச்சு மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நாராயணன் திருப்பதி

நீண்டநாள் எடுக்கும் வாக்குறுதிகளை ஏன் செய்யவில்லை என்று யாரும் கேட்கவில்லை. அடிப்படைத் தேவை, அவசியத் தேவை என இரண்டு வகை இருக்கிறது. அவற்றை ஏன் செய்யவில்லை என்றுதான் கேட்கிறோம். தமிழ்நாடு குறித்த அடிப்படைப் புரிதலே இல்லாமல் ஆட்சி அமைத்து மக்கள் ஏமாற்றி வருகிறார்கள் என்பது மட்டும் தற்போது மக்களுக்குப் புரிந்திருக்கிறது” என தி.மு.க அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேள்விகளை முன்வைத்தோம் “பத்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க., ஒன்றிய அரசு இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். முதல் நூறு நாட்கள், முதல் ஐந்து ஆண்டுகள், அதற்கடுத்த ஐந்தாண்டுகள் எனத் திட்டமிட்டுத்தான் தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அதன்படி ஆட்சி அமைத்த முதல் நாளே பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு எனச் சிறப்பு அதிகாரிகள் நியமன உத்தரவு என அனைத்தையும் செய்தார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளித்து கொரோனா தொற்றைச் சிறப்பாகக் கையாண்டது, அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தியது என எல்லாவற்றிலும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு, அந்தச் சம்பவத்திற்கு எதிராகத் தொடர்பாகப் போராடியவர்கள், அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள், எட்டுவழிச்சாலைக்கு எதிராக, ஹைட்ரோகார்பனுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகளை மட்டுமல்லாமல் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறோம்” என்றவர்

Also Read: `ஒன்றிய அரசு விவகாரம்'- பாஜக-வுக்கு ஆதரவாக திமுக-வுடன் ஓ.பி.எஸ் மோதுவது ஏன்?'

“புதிதாக 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமித்தது, அரசுத் தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியம், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு அரசுப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை, 85 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகக் கிட்டத்தட்ட 28 ஆயிரம் கோடியில் தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், என 20-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். கொரோனா தடுப்பிற்குப் பயன்படுத்தும் பிபிஇ கிட், தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, மின்சார கணக்கீடு, பால் என அனைத்திலும் ஊழல் செய்துவிட்டு 4.56 லட்சம் கோடிதான் கடன் இருக்கிறது எனப் பொய் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 9 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறோம். இது ஒரு கணக்கிற்காகத்தான் சொல்கிறோமே தவிர இந்த நிதிச் சுமையைக் காரணம் காட்டி எங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மாட்டோம். அதைச் சமாளித்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். எனவே, எங்களைப் பற்றி விமர்சனம் செய்யும் அருகதையே அ.தி.மு.க-வினருக்கு இல்லை.

2000 ரூபாய் வழங்கும் திட்டம்

ஆனால், எதிர்க்கட்சியினர் ‘மின்சாரத்தை ஏன் மாதம் ஒரு முறை கணக்கிடவில்லை, பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை, கேஸ் சிலிண்டருக்கான மானியம் ஏன் தரவில்லை, நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை’ என இவற்றை மட்டும்தான் தேய்ந்த ரெக்கார்டு போல மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்வதற்கான பாதையில் வெளிப்படைத்தன்மையோடு தி.மு.க அரசு சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் எல்லாம் சரியாகும்” எனப் பதிலளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-dmk-government-take-much-time-to-do-their-election-promises

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக