Ad

செவ்வாய், 20 ஜூலை, 2021

சென்னை: கிழக்குக் கடற்கரை சாலை பண்ணை வீட்டில் வீக் எண்ட் பார்ட்டி! - நள்ளிரவில் சிக்கிய துணை நடிகை

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ எல்.ஆர்.பார்ம் சாலையில் சுகுனா கார்டன் உள்ளது. இங்கு கடந்த 17.7.2021-ம் தேதி (சனிக்கிழமை) இரவு, மது விருந்து நடப்பதாக கானத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரநாயரின் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு பண்ணை வீட்டில் ஒன்றில் ஆட்டம், பாட்டம் என மது விருந்து நடந்துக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற 15 ஆண்களும் 11 பெண்களும் என மொத்தம் 26 பேர் மது போதையில் இருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

பண்ணை வீட்டுக்கு சீல் வைக்கும் விஏஓ கலைச்செல்வி

விசாரணையில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் துணை நடிகை கவிதா ஸ்ரீ, அவரின் நண்பர் ஸ்ரீஜித்குமார் எனத் தெரியவந்தது. இதையடுத்து துணை நடிகை உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மது போதையிலிருந்த பெண்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களையும் ஜாமீனில் விடுவித்தனர். பின்னர் கொரோனா ஊரடங்கு விதி அமலில் இருக்கும் போது அதை மீறி இதுபோன்ற பார்ட்டிகளை நடத்தியதற்காக வழக்குப் பதிவு செய்திருப்பதாக கானத்தூர் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டுக்கு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி சீல் வைத்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``துணை நடிகை கவிதா ஸ்ரீ, அவரின் நண்பர் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் சேர்ந்து வீக் எண்ட் பார்ட்டியை நடத்தியிருக்கின்றனர். இருவரும் தங்களின் சமூகவலை தள பக்கத்தில் பெண்களுக்கு என்ட்ரி ஃப்ரி என்ற அறிவிப்போடு பார்ட்டில் கலந்து கொள்ள 1,599 ரூபாய் நுழைவு கட்டணம் என அறிவித்திருக்கின்றனர். மேலும் இந்தப் பார்ட்டில் விரும்பும் பெண்களுடன் நடனமாடலாம் என கூறியிருக்கின்றனர். கட்டணத்தை கூகுள் பே மூலம் வசூலித்திருக்கின்றனர். அதனால் இந்தப் பார்ட்டியில் இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வமாக கலந்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: சென்னை: 'பிறந்தநாள் பார்ட்டி;சிறை வைக்கப்பட்ட ஃபைனான்ஸியர்?! விசாரணையில் சினிமாவை விஞ்சிய ட்விஸ்ட்!'

துணை நடிகை கவிதா ஸ்ரீ

பண்ணை வீட்டின் நுழைவு வாசல் உள்பக்கமாக பூட்டப்பட்டு, சினிமா இசையில் மது விருந்து தொடங்கியிருக்கிறது. விடிய விடிய பார்ட்டியை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். பார்ட்டி தொடங்கியதும் இளம்பெண்களுடன் இளைஞர்கள் ஆட்டம் போட்டிருக்கின்றனர். அந்தச் சமயத்தில்தான் எங்களுக்கு பார்ட்டி குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேற்கண்ட பண்ணை வீடு, சினிமா சூட்டிங்கிற்காக வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. வாடகை எடுத்தவரிடமிருந்து உள் வாடகைக்குதான் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் என இவர்கள் எடுத்து பார்ட்டியை நடத்தியிருக்கின்றனர்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-filed-case-against-supporting-actress-and-15-youth-in-kanathur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக