Ad

வியாழன், 22 ஜூலை, 2021

குட்கா விவகாரம்: `இனி அபராதம் கிடையாது; சீல் தான்!'- மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களான குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடைக்குச் சீல் வைக்கப்படும் .அத்தோடு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை ஒரு லட்சம் அபராதம் எனக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறர் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்.

குட்கா

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ``கமிஷன் வாங்கிக்கொண்டு, அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள்.

இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது” என்று அ.தி.மு.க அரசின் அவலத்தைச் சுட்டிக்காட்டி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போதைய எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின். ஆனால் இன்று தி.மு.க ஆட்சி அமர்ந்தும் குட்கா விவகாரம் படுஜோராக நடந்துகொண்டிருப்பதாக ஜூனியர் விகடனில் அட்டை படக் கட்டுரையாகச் செய்தி வெளிவந்துள்ளது.

மா.சுப்ரமணியன்

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், ”கடந்த இரண்டு மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான். கொரோனா தடுப்புப் பணியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தினோம், நாளை முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விற்கப்படுகிறதா எனச் சோதனை செய்ய என உத்தரவிட்டுள்ளோம்.

எந்த கடைகளில் விற்கப்படுகிறதோ, அந்த கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்கிற நிலை ஓரிரு மாதங்களில் உருவாக்கிய தீர வேண்டும். இதனால் ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறதா? கெட்ட பெயர் வருகிறதா? என்பது முக்கியமல்ல.

முன்பு குட்கா விவகாரத்தில் அதிமு- வை ஸ்டாலின் விமர்சித்த புகைப்படம்

குட்காவை ஒழிப்பதால் 4 பேர் சபித்தாலும்,400 பேர் வாழ்த்துவர். 400 பேரின் வாழ்த்தே பெரிது. குட்கா விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுங்கள்” என்று காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

குட்கா வேண்டுமா முதல்வரே?

அதன் பெயரில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். ”தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களான குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. அதே போல் 18 வயதிற்குக் குறைவான சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தால் சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டப் பிரிவு 77ன் படி பிணையில் வர முடியாத படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் செலுத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்

எனவே வணிகர் சங்க நிர்வாகிகள் தங்களது சங்கத்தில் பதிவு பெற்று இயங்குகின்ற சிறு கடை மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு இது குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவீர்கள்" என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Also Read: ஜூ.வி செய்தி எதிரொலி: ``இரண்டு மாதங்களில் குட்கா இல்லாத தமிழ்நாடு!'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!



source https://www.vikatan.com/news/crime/no-more-fines-seal-the-stores-central-zone-ig-balakrishnan-warning-on-gutka-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக