ஆடி மாதம் பிறந்துவிட்டது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மன் கோயில்கள் எல்லாம் பெண்கள் கூட்டம் அலைமோதும். அண்டசராசரத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆதி சக்தியை ஆடி மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களுக்கு எல்லாம் தலைமை பீடம் என்றால் அது சமயபுரம் மாரியம்மன் கோயில்தான் எனலாம்.
சமயத்தில் வந்து காக்கும் மாரியம்மன் பெண்களின் தாயாக விளங்குகிறாள். இந்த ஊர் கண்ணபுரம் என்றும் இங்கு வீற்றிருக்கும் மகமாயி கண்ணபுர ஆத்தாள் என்றும் வணங்கப்படுகிறாள். விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்றும் இந்த ஊருக்கு பெயர்கள் உண்டு.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்னை சக்தியின் ஆதிவடிவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ‘வைஷ்ணவி’ என்ற பெயரில் குடி கொண்டிருந்தாளாம். துடியான இந்த சக்தியின் உக்கிரம் தாங்காத அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், அந்த ஸ்ரீசக்கர வடிவிலான அன்னையை கண்ணபுரம் என்ற தலத்தில் பிரதிஷ்டை செய்தாராம்.
ஆண்டுகள் பல ஓடின. கண்ணபுரத்தில் குடி கொண்டிருந்த அன்னை புற்று வடிவில் வேப்பமரம் சூழ காத்திருந்தாள். அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் காலமும் ஒருநாள் வந்தது.
தென்பாண்டி நாட்டில் திருமணம் முடித்துக் கொண்ட தம்பதி இருவர் தங்களது உறவினர்களோடு காவிரியைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்கள். மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. இருட்டுவதற்குள் அடுத்த ஊரை அடைந்துவிட வேண்டும் என்று கூட்டம் வேகமாக நடைபோட்டது. முதியவர்களும் குழந்தைகளும் மட்டும் மூடப்பட்ட வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இருள் சூழத் தொடங்கியது. அது அடர்ந்த வனம். தீப்பந்தங்களின் உதவியோடு அவர்களின் பயணம் தொடர்ந்தது.
அந்த வேளையில் பெரும் கள்வர் கூட்டம் ஒன்று அவர்களை வழி மறித்தது. திடீரென தாக்குதல் நடத்தி, பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டது. மூவர் கொல்லப்பட்டனர். புது மாப்பிள்ளை உள்ளிட்ட சில வாலிபர்கள் கள்வர்களால் கொண்டு செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் மானம் காக்க வேண்டி மணமகளும் அவளுடைய தோழி ஒருத்தியும் அங்கிருந்து தப்பி காட்டுக்குள் மறைந்தனர்.
இடையில் தோழியும் வழி மாறி சென்றுவிட, மணப்பெண் மட்டும் அழுதபடி ஓரிடத்தில் இளைப்பாறினாள். வெகு தூரத்தில் வெளிச்சம் ஒன்று மினுக்கிட்டு கொண்டிருந்தது. அதை நோக்கிச் சென்றாள். அது சமயபுரத்தாள் எனும் மகமாயி குடி கொண்டிருந்த இடம். அந்த இடத்தை அடைந்ததுமே மணப்பெண் வெடித்து அழுதாள்.
"அம்மா, என் குல தேவியே, இது நியாயமா! காலையில் ஏறிய திருமாங்கல்யம் இரவுக்குள்ளாகவே இறங்கிவிட்டதே, என் உறவுகளும் சுற்றங்களும் என்னை விட்டுப் போய்விட்டார்களே, காலமெல்லாம் உன்னையே நம்பி இருந்த என்னை கைவிட்டு விட்டாயே! ஆயிரம் கண்ணுடையாள் என்று உன்னை சொல்கிறார்களே, அதில் ஒரு கண் கூடவா எனக்காகத் திறக்கவில்லை. அத்தனை கண்ணும் அழிந்து போனதா, தெய்வம் என்று உன்னை நம்பியவளுக்கு இதுதான் நீ காட்டும் நியாயமா! சத்தியமாகச் சொல்கிறேன். இன்று இரவுக்குள் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால், என் உறவுகள் வந்து சேராவிட்டால், இதோ நீ குடி கொண்டிருக்கும் இதே மரத்தில் தூக்கிட்டு தூங்குவேன். என் சாவுக்கு காரணம் நீயே என்று மண்ணில் எழுதி வைத்துவிட்டு செத்துப் போவேன். இது உன் மீது ஆணை. என் திருமாங்கல்யம் மீது ஆணை" என்று வெஞ்சினம் கூறி சபதம் இட்டால் அந்த மணமகள்.
Also Read: திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை!
இரவு நீண்டது. நள்ளிரவில் தனித்து அந்த மரத்தடியே அமர்ந்திருந்தாள் மணமகள். ஓடி வந்த களைப்பும் சோகமும் அவளை உறக்கத்தில் ஆழ்த்தியது. எனினும் வலுக்கட்டாயமாக விழித்திருந்தாள். தொலைவில் ஒரு சலங்கை சத்தம் கேட்டது. மத்திம வயதுள்ள ஒரு பெண் அவளை நெருங்கினாள். புதிதாக வந்த பெண்ணின் அழகும் தேஜசும் அந்த மணமகளைக் கவனம் கொள்ளச் செய்தது. "நீ யாரம்மா?" என்று அந்த மத்திம வயது பெண் கேட்கவும், எல்லா கதையையும் மணப்பெண் கூறினாள். எந்த உணர்வுமின்றி அந்தக் கதையை கேட்ட அந்த மஞ்சள் புடவைக்காரி, "நிச்சயம் உனக்கு நீதி கிடைக்கும் கவலைப்படாதே" என்று சொல்லி விட்டு, "தலையெல்லாம் அரிக்கிறது, கொஞ்சம் தலையைப் பார்த்துவிடேன்" என்றாள். எந்த காலத்திலும் பெண்களுக்கு தலை பார்த்து விடுவது என்பது விருப்பமான செயல் என்பதால் மணப்பெண்ணும் அவள் தலையைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினாள். அவ்வளவுதான், அலறிவிட்டாள் அந்த மணமகள்.
ஆம், அந்த மஞ்சள் புடவைக்காரியின் ரோமக்கால்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது! "தாயே" என்று அவள் கதறியதும், "எனக்கா கண் அழிந்து விட்டது என்றாய், நான் ஆயிரமாயிரம் கண் உடையவள்! அதனால்தான் இந்த இடமே கண்ணபுரம் என்றானது. உனக்கான நீதி காலையில் கிடைக்கும். பொறுத்திரு! நான் நீதியை வழங்குவதில் எத்தனை பெரிய நீதிபதி என்று நீயே எனக்கு சாட்சியாவாய்!" என்று கூறிய அந்த மஞ்சள் புடவைக்காரி மகமாயியாக, மாரியம்மனாக உருமாறி மறைந்து போனாள். வெலவெலத்துப்போன மணமகளோ அம்மனைக் கண்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
Also Read: ஸ்ரீரங்கம் கோபுரம், மறுபுறம் மலைக்கோட்டை, அந்த நெய் புட்டு! திருச்சி காவிரி பாலத்தில் என்ன ஸ்பெஷல்?
பொழுது விடிந்தது. விஜயநகர ஆட்சியைச் சேர்ந்த காவலர்கள் பலர், அந்தக் கள்வர்களையும் அவர்கள் கடத்திக்கொண்டு போன சிலரையும் கூட்டிக்கொண்டு அங்கே வந்தனர். இறந்துபோன மூவர் தவிர அந்த பெண்ணின் உறவுகள் எல்லாம் அவளைக் கண்டு அணைத்துக் கொண்டனர். கள்வர்களுக்குத் தண்டனை கிடைத்தது. மணமகளுக்கும் திரும்பவும் ஓர் இனிமையான வாழ்வு கிடைத்தது. எல்லாம் சமயபுரத்தாளின் பேரருளின் விளைவாக நடந்தது. அந்த பெண் தன்னாலான பொருளுதவியை கண்ணபுரத்து ஆலயத்துக்கு அளித்தாள். விஜயநகர ஆட்சியில் கோயில் சிறியதாகக் கட்டப்பட்டது. பிறகு கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் தற்போதைய ஆலயம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரம் ஆயிரம் கண்கள் கொண்ட மகமாயி எல்லோரையும் கவனித்து ஆட்சி செய்யும் தாயாக விளங்கி வருகிறாள்.
திருச்சியின் மாபெரும் சக்தி பீடம் சமயபுரமே!
திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம்.
source https://www.vikatan.com/spiritual/temples/aadi-festival-trichy-samayapuram-amman-temple-history
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக