Ad

செவ்வாய், 20 ஜூலை, 2021

`அரசுப் பதவியுடன் திமுக-வுக்கு தாவும் குமரி அதிமுக நிர்வாகிகள்!’ - கொதிக்கும் தளவாய் சுந்தரம்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் மாடசாமி, நிர்வாகிகள் மோசஸ் ராமச்சந்திரன், தென்கரை மகாராஜன், பாலசுப்ரமணியன், ஜெயந்தி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த வரதராஜன், அ.தி.மு.க மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டொமினிக் ஆகியோரை ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இவர்கள் கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும்விதத்தில் செயல்பட்ட காரணங்களுக்காவும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நீக்கபட்டதாக’வும், `கட்சியினர் இவர்களோடு எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க-வில் இணையவிருக்கும் நாஞ்சில் டொமினிக்

இந்தநிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் நீக்கப்படாத நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணையவிருக்கின்றனர். இது குறித்து அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட மாநில இலக்கிய அணி துணைச் செயலாளார் நாஞ்சில் டொமினிக்கிடம் பேசினோம். ``நாங்கள் இன்று மாலை தி.மு.க-வில் சேரப்போகிறோம். அது தெரிந்துதான் அ.தி.மு.க-விலிருந்து எங்களை நீக்கியிருக்கிறார்கள். மேற்கு மாவட்டத்திலிருந்து ஐந்து வண்டிகளில் வந்திருக்கிறோம்.

அ.தி.மு.க தலைமை எனக்குப் பிடிக்கவில்லை. பா.ஜ.க பிடியில் இருக்கிறார்கள். நான் அம்மாவால் ஈர்க்கப்பட்டுத்தான் அ.தி.மு.க-வுக்கு வந்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நான் ஓ.பி.எஸ்-ஐ நம்பி அந்த இயக்கத்தில் பயணித்தேன். ஓ.பி.எஸ் மண் குதிரையாக மாறிவிட்டார். `நீ ஓ.பி.எஸ் ஆள் என்று இ.பி.எஸ்-ஸிடம் சொன்னால் உன்னை க்ளோஸ் பண்ணிடுவார்’ என்று என்னை தளவாய் சுந்தரம் மிரட்டுகிறார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ற இரண்டு மண் குதிரைகளை நம்பி நான் வரவில்லை. இவங்க கட்சியை மோடியின் காலடியிலவெக்கிறாங்க. அடுத்ததா சசிகலா வர்றாங்க. அதெல்லாம் எனக்கு பிடிக்கலை. திராவிட கலாசாரத்தின் கொள்கை, கோட்பாடுகளை டெல்லியில் அடகுவெக்கிறாங்க. திராவிட கொள்கை, பாதுகாக்கப்பட தி.மு.க-தான் ஒரே சாய்ஸ்" என்றார். மேலும், தி.மு.க-வில் இணையவிருக்கும் மற்றவர்களும் `தளவாய் சுந்தரம் கட்சியில் எங்களை வளரவிடவில்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தளவாய் சுந்தரம்

இது குறித்து தளவாய் சுந்தரத்திடம் பேசினோம். ``இங்கருந்து தி.மு.க-வுக்குப் போறவங்க எல்லாம் கட்சிப் பதவி, அரசாங்க பதவியோடத்தான் போறாங்க. நாஞ்சில் டொமினிக் கட்சியில் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர், கல்குளம், விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனை சங்க தலைவராகவும் இருக்கிறார். ராஜனுக்கு கட்சிரீதியாக மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்புலயும், அரசாங்கரீதியா கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் தலைவராகவும் இருக்கிறார்.

Also Read: குமரி: `துறைமுகத் திட்டம் வராது என்று நான் சொல்லவே இல்லை!’ - அடித்துச் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகுமார் கூட்டுறவு சங்க யூனியன் தலைவர். இந்தப் பதவிகளையெல்லாம் யாரை வைத்து வாங்கினார்கள்... இதில் எந்தவிதத்துல என்மேல குற்றச்சாட்டு கூற முடியும்... தி.மு.க-வுக்குப் போக ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக என்மீது குற்றம் சொல்கிறார்கள். அவர்கள் தி.மு.க-வுக்குப் போகிறார்கள் என்றால், அரசுப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும்" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/few-kanniyakumari-admk-cadres-moving-to-dmk-this-evening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக