Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

Formula 1 : ஆட்டத்தை மாற்றிய ஆஸ்டன் மார்ட்டின் கேம் பிளானும், அஜர்பெய்ஜான் அதகளங்களும்!

மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண ரேஸாகத்தான் இருக்கும். ஆனால், ஏகப்பட்ட ரணகங்களுக்கு இடையே நடந்திருக்கிறது அஜர்பெய்ஜான் ஃபார்முலா -1 கார் ரேஸ். தகுதிச் சுற்றிலேயே 4 முறை சிவப்புக் கொடி காட்டப்பட்ட ஒரு ரேஸின் முக்கிய சுற்று எப்படி இருக்கும்! ​அந்தக் கூத்துக்களை விரிவாகப் பார்ப்போம்.

Sergio Perez completing the race

மொனாக்கோவில் போல் பொசிஷன் வென்றிருந்தும் ரேஸைத் தொடங்கமுடியாமல் ஏமாற்றமடைந்து வெளியேறினார ஃபெராரி வீரர் சார்ல்ஸ் லெக்லர்க். இருந்தாலும், இம்முறையும் சிறப்பாகச் செயல்பட்டு போல் பொசிஷன் வென்றார். ஆனால், அதை அவரால் போடியமாக மாற்ற முடியவில்லை. இரண்டாவது லேப்பின் 15-வது திருப்பத்தில் லெக்லர்க்கை முந்தினார் நடப்பு சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன். ஏழாவது லேப்பில் வெஸ்டப்பனும் அவரை முந்த மூன்றாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார் லெக்லர்க்.

அட்டகாசமாக ரேஸைத் தொடங்கிய செர்ஜியோ பெரஸ் முதல் லேப்பிலேயே கேஸ்லி, கார்லோஸ் செய்ன்ஸ் இருவரையும் முந்தினார். மூன்றாவது திருப்பத்தின்போதே நான்காவது இடத்துக்கு வந்துவிட்டார். அதே வேகத்தைத் தொடர்ந்தவர், எட்டாவது லேப்பில் லெக்லர்க்கையும் முந்தினார். ஹாமில்ட்டன், வெஸ்டப்பன், பெரஸ் - போட்டாஸ் மிகவும் பின்தங்கி ரேஸைத் தொடங்கியதால் இந்த மூவருமே போடியம் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் ட்விஸ்ட் 11-வது லேப்பில் நடந்தது.

Sergio Perez

அஜர்பெய்ஜானில் போல் பொசிஷன் மிகவும் முக்கியம் என்பதால், இரண்டாவது தகுதிச் சுற்றில் கிட்டத்தட்ட எல்லா டிரைவர்களுமே soft டயர்களைத்தான் பயன்படுத்தினார்கள். அதனால், பெரும்பாலானவர்கள் இந்த ரேஸை soft டயர்களோடு தொடங்கவேண்டியிருந்தது. விரைவில் pit எடுத்து, hard டயர்களுக்கு மாறி, ஒரே பிட் ஸ்டாப்பில் ரேஸை முடிப்பதுதான் பெரும்பாலான அணிகளின் திட்டமாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு ஏற்றதுபோல் 10-வது லேப் முடியும்போதே 9 வீரர்கள் பிட் எடுத்திருந்தார்கள். ஜார்ஜ் ரஸல் முதல் லேப்பிலேயே பிட் ஸ்டாப் எடுத்திருந்தார்.

அந்தத் திட்டத்தின்படி 11-வது லேப்பில் பிட்டுக்குள் நுழைந்தார் லூயிஸ் ஹாமில்டன். டயர்கள் மாற்றப்பட்டு அவர் கிளம்பத் தயாரானபோது, அவரைக் கடந்தார் பிட்டுக்குள் நுழைந்த ஆல்ஃபா டௌரி வீரர் பியர் காஸ்லி. அதனால், அவர் சில நொடிகள் காத்திருக்கவேண்டியிருந்தது. பிட்டில் 4.6 நொடிகள் இருந்து கிளம்பிய ஹாமில்டன், அடுத்த லேப்பில் வெஸ்டப்பன் பிட்டில் இருந்து வெளியேறியபோது (1.9 நொடிகள்) 4-வது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டார். 14-வது லேப்பில் பிட் எடுத்த பெரஸும் 4.3 நொடிகள் பிட்டில் இருக்க நேர்ந்தது. இருந்தாலும், அது அவரைப் பாதிக்கவில்லை. ஒருவழியாக ஹாமில்டனுக்கு முன்னால் வந்துவிட்டார்.

Sebastian Vettel

கிட்டத்தட்ட எல்லோரும் பிட் எடுத்திருந்தாலும் ஆஸ்டன் மார்ட்டின் வீரர்கள் மட்டும் தொடர்ந்து டிராக்கிலேயே நீடித்தனர். முதல் லேப்பிலேயே அசத்தலாக செயல்பட்டு 9-வது இடத்துக்கு முன்னேறினார் (11-வது இடத்தில் தொடங்கி) முன்னாள் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல். இப்போது மற்ற வீரர்கள் பிட் எடுத்ததால் முதலிடத்துக்கு முன்னேறியிருந்தார். அதன்மூலம் தன் வேகத்தை அதிகப்படுத்தியவர், 19-வது லேப்பில் பிட் எடுத்து வெளியேறும்போது ஏழாவது இடம் பிடித்துவிட்டார்!

வெஸ்டப்பன், பெரஸ், ஹாமில்டன் என்ற டாப் 3 எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது. பெரஸை முந்த ஹாமில்டன் பலமுறை முயற்சித்தும் மிகச் சிறப்பாக தன் பொசிஷனை டிஃபண்ட் செய்தார் பெரஸ். மற்ற இடங்களில் ஹாமில்டன் கொஞ்சம் வேகம் காட்டினாலும், மிடில் செக்டாரில் பெரஸின் செயல்பாட்டுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வழக்கம்போல் முதலில் பிட் எடுப்பதில் ரெட்புல், மெர்சீடிஸ் ஏதாவது மேஜிக் காட்டுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் பெரிய சம்பவம் ஒன்று அரங்கேறியது. அதுவரை பிட் எடுக்காமல் இருந்த ஆஸ்டன் மார்ட்டின் வீரர் லான்ஸ் ஸ்டிரோல், 31-வது லேப்பில் இடது பின் டயர் பஞ்சர் ஆகி, தடுப்புகளில் மோதினார். அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லையென்றாலும், கார் பெரிய அளவில் சேதமானது. அதனால், safety car பயன்பாட்டுக்கு வந்தது.

அப்போது ஹாமில்ட்டனைவிட சுமார் 8 நொடி முன்னிலையில் இருந்தார் வெஸ்டப்பன். அது வீணானது. இன்னொருபக்கம், பிட்டுக்குள் நுழையும் இடத்தில் ஸ்டிரோலின் கார் விபத்துக்குள்ளானதால், பிட் நுழைவு மூடப்பட்டது. safety காரின்போது பிட்டுக்குள் நுழைந்து நேரத்தை மிச்சப்படுத்தும் டாப்-3 வீரர்களின் திட்டம் முடிவுக்கு வந்தது. சரி, 34-வது லேப்பில் பிட் திறந்தபிறகு டயரை மாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், வெட்டல் ரூபத்தில் அடுத்த பிரச்னை வந்தது. இருப்பவர்களிலேயே அவர் டயர்தான் குறைவாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், கடைசி லேப் வரை இந்த டயர் தாங்கும். இப்போது அவர் ஆறாவது இடத்துக்கு வேறு முன்னேறிவிட்டார். அதனால், டாப் - 3 வீரர்களின் கூடுதல் பிட் திட்டம் மொத்தமாக முடிவுக்கு வந்தது.

Lance Stroll's car

டாப் 10-க்கு வெளியே இருந்த வீரர்களை முதல் 10 இடங்களுக்குள் கொண்டுவர ஆஸ்டன் மார்ட்டின் செய்த திட்டம், போடியம் பொசிஷனிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 36-வது லேப்பில் ரேஸ் மீண்டும் தொடங்க லெக்லர்க்கை முந்தி ஐந்தாவது இடத்துக்கு வந்தார் வெட்டல். அடுத்த லேப்பில் கேஸ்லியையும் முந்தி நான்காவது இடத்துக்கும் முன்னேறிவிட்டார். வேகமான லேப்பைப் பதிவு செய்த வெஸ்டப்பன் டாப்-10 இடத்துக்குள் முடிக்காததால், அந்த 1 புள்ளியும் தவறியது. சிறப்பாகச் செயல்பட்டு இரண்டாவது இடம்பெற்ற வெட்டல், ரசிகர்களால் சிறந்த டிரைவராக (41% ஓட்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வீரர்கள் பிட் லேனில் அணிவகுக்க, டயர்களும் மாற்றப்பட்டது. கடைசி 2 லேப்களுக்கு எல்லோரும் soft டயர்களுக்கு மாறினார்கள். முதலிரு இடத்தில் இருந்த பெரஸ், ஹாமில்டன் இருவரிடமும் ஏற்கெனெவே பயன்படுத்தப்பட்ட டயர்கள்தான் இருந்தது. ஆனால், வெட்டலிடம் புதிய டயர் இருந்தது. போட்டி, starting grid-ல் இருந்து தொடங்கும் என்பதால், வெட்டல் பெரிய சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஹாமில்டன் வெற்றி பெற்று, டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் முன்னிலை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

Max Verstappen in distress

கார்கள் starting grid வந்து நின்றபோதே ஹாமில்டன் காரில் பயங்கரமாக புகை கிளம்பியது. எப்படியும் பெரஸுக்கு டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட, பெரஸும் மிகமோசமாக ரேஸைத் தொடங்கினார். ஆனால், ஹாமில்டனோ இரண்டாவது திருப்பத்தில் பேலன்ஸ் தவறி நேராகச் சென்று பின்தங்கினார். அதன்பிறகு தன் முன்னிலையைத் தக்கவைத்த பெரஸ், அஜர்பெய்ஜான் கிராண்ட் ப்ரீயை தனதாக்கினார். வெட்டல் இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்துக்கு லெக்லர்க், கேஸ்லி, நாரிஸ் கடும் போட்டிபோட்டனர். லெக்லர்க், கேஸ்லி இருவரும் மாறி மாறி முந்திக்கொண்டனர். கடைசியில் கேஸ்லி இந்த சீசனின் முதல் போடியம் ஏறினார். கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சீனியர் வீரர் கிமி ராய்கோனன் 10-வது இடம் பிடித்தார்.

இந்த ரேஸில் போடியம் ஏறிய மூவருக்குமே இந்த சீசனில் இதுதான் முதல் போடியம். இந்த ரேஸில் வெஸ்டப்பன் வென்றிருந்தால், ஹாமில்டனுக்கும் அவருக்குமான இடைவெளி பெரிதாகியிருக்கும். ரெட்புல், மெர்சீடிஸ் அணிகளுக்கு இடையிலான வித்யாசமும் அதிகமாகியிருக்கும். அது நடக்காமல் போய்விட்டது. இறுதியில் ஹாமில்டனும் சொதப்பியதால், குறைந்தபட்சம் அவர்களின் முன்னிலையாவது காப்பாற்றப்பட்டிருக்கிறது.



source https://sports.vikatan.com/sports-news/azerbaijan-gp-was-full-of-drama-as-sergio-perez-came-victorious

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக