Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

மாஸ்க் அணிவது கொரோனா பாதிப்பை மேலும் மோசமாக்குமா? - பரவும் வாட்ஸ்அப் தகவல்; உண்மை என்ன?

``தொடர்ந்து மாஸ்க் அணிந்தால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது;

தொடர்ந்து மாஸ்க் அணிந்தால் உடலுக்குள் கறுப்பு பூஞ்சை வந்துவிடும்;

நாம் சுவாசித்து வெளிவிடும் கரியமில வாயுவை மீண்டும் மீண்டும் சுவாசிப்பதால் நுரையீரலுக்கு பிரச்னை வரும்;

மூச்சுக்காற்றைத் திரும்ப திரும்ப சுவாசிப்பதால், உடலில் வைரல் லோடு (viral load) அதிகரிக்கும்;

கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மாஸ்க் அணிந்தால் அது நோயைத் தீவிர நிலைக்கு இட்டுச்செல்லும்...

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மாஸ்க், ஆக்ஸிஜன், கறுப்பு பூஞ்சை தொடர்பான இந்தக் கேள்விகள், தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவை தொடர்பான விளக்கங்களை சொல்லுங்கள் என்றோம், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷிடம். அவை பின்வருமாறு...

mask

தொடர்ந்து மாஸ்க் அணிந்தால் கறுப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறதா?

பூஞ்சை என்பது செடி, கொடி, விலங்குகள் போல ஓர் உயிரினம்தான். செடி, கொடி, விலங்குகளில் பல வகைகள் இருப்பதுபோல, பூஞ்சையிலும் பல வகைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, இட்லி மாவைப் புளிக்க வைக்கிற, பிரெட் மற்றும் கேக் தயாரிக்கப் பயன்படுகிற ஈஸ்ட், பூஞ்சை வகையைச் சேர்ந்ததுதான். நாம் சாப்பிடுகிற காளானும் பூஞ்சை வகையைச் சேர்ந்ததுதான்.

ரத்த ஓட்டமில்லாத, உயிரற்ற செல்கள் இருக்கிற தோலின் மேற்புறம், நகங்கள், தலைமுடி போன்ற இடங்களில் தொடர்ந்து ஈரப்பதம் இருந்தால் அங்கெல்லாம் சிலவகை பூஞ்சைகள் வளர வாய்ப்புண்டு. ஆனால், இந்தப் பூஞ்சையால் மனித உடலுக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், நம் உடலின் வெள்ளை அணுக்களில் இருக்கிற நியூட்ரோபில்ஸ், பூஞ்சைகள் மனித உடலில் புகுவதையும் வளர்வதையும் தடுத்துவிடும்.

பொதுநல மருத்துவர் ராஜேஷ்

அடுத்து தற்போது பலரும் பேசிக்கொண்டிருக்கிற கறுப்பு பூஞ்சை பற்றிச் சொல்கிறேன். இதுவும் பூஞ்சை வகைகளில் ஒன்றுதான். நாம் சாப்பிடும் ரொட்டி பல நாள் வெளியில் இருந்தால் அதன்மேல் படர்வது பூஞ்சைதான். இந்தப் பூஞ்சையின் துகள்களை வாரத்துக்கு ஒன்றிரண்டு முறையாவது நாம் அனைவரும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சராசரி எதிர்ப்புசக்தி கொண்டவர்களை இந்தப் பூஞ்சையால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால், இதுவரை இதனால் நமக்கெல்லாம் எந்தப் பிரச்னையும் வரவில்லை. தற்போதுள்ள சூழலில், கொரோனாவால் குறைந்துபோன நோய் எதிர்ப்புசக்தி, கொரோனாவை சரி செய்ய அதிக நாள்கள் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது, கட்டுக்கடங்காத நீரிழிவு பிரச்னை இருப்பது, புற்றுநோய், முடக்குவாதம், எய்ட்ஸ், ஆட்டோ இம்யூன் டிஸார்டர் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்தப் பூஞ்சைத் தொற்று வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல காற்றில் எப்போதும் பூஞ்சையின் துகள்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். மாஸ்க் அணிந்தாலும் சரி, அணியவில்லையென்றாலும் சரி, அதில் சிறிதளவு நம்முடைய சுவாசப்பாதைக்குள் போகவே செய்யும். வழக்கம்போல சராசரி நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலே, பூஞ்சையால் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் நிஜம்.

Mucormycosis Testing

மாஸ்க் அணிந்தால் நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் குறையுமா?

வழக்கமாக சுவாசிப்பதைவிட மாஸ்க் அணிந்தபடி சுவாசிக்கும்போது 10 சதவிகிதம் ஆக்ஸிஜன் குறையும். அதனால், மாசு குறைவாக இருக்கிற காலை நேரங்களில் மாஸ்க் அணியாமல் இருக்கலாம். இதற்குக் காலை நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுதான் வழி.

60 கிலோ எடையுள்ள சராசரி ஆரோக்கியமுள்ள ஒரு நபர், ஒரு முறை சுவாசிக்கும்போது சராசரியாக 500 மி.லி வரை காற்று நுரையீரலுக்குள் செல்லும். ஆனால், நுரையீரலின் கொள்ளளவு இதைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம். இந்த 500 மி.லி. காற்றிலும் 78 சதவிகிதம் நைட்ரஜன்தான் இருக்கும். 21 சதவிகிதம் மட்டுமே ஆக்ஸிஜன் இருக்கும். மாஸ்க் அணிந்துகொண்டு சுவாசிக்கும்போது, இதில் 50 அல்லது 100 மி.லி காற்று குறைவாகவே நுரையீரலுக்குள் செல்லும். விளைவு, நுரையீரலுக்குக் கிடைக்கிற ஆக்ஸிஜன் அளவும் குறையும்.

Lungs

டைடல் வால்யூம் எனப்படும் சுவாசிப்புத் திறனை அதிகரித்தால், அதாவது 600 மி.லி அல்லது 700 மி.லி காற்றை உள்ளிழுக்கிற அளவுக்கு சுவாசித்தால், மாஸ்க் அணியாமல் இருக்கிறபோது நுரையீரலுக்குக் கிடைக்கிற ஆக்ஸிஜன், மாஸ்க் அணியும்போதும் கிடைக்கும். அதனால்தான் இந்த நேரத்தில் சுவாசிப்புத் திறனை அதிகரிக்கும் மூச்சுப்பயிற்சியை அனைவரையும் செய்ய அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

அடுத்து மூச்சுவிடுதலின் எண்ணிக்கை. ஒருதடவை மூச்சை உள்ளே இழுக்கும்போது 400 முதல் 500 மி.லி காற்றை உள்ளிழுப்பவர்கள், ஒரு நிமிடத்துக்கு 12 - 14 முறை மூச்சு விடுவார்கள். இதுவே பிரணயாமம் செய்பவர்கள் ஒரு நிமிடத்துக்கு 6 முதல் 8 முறை மட்டுமே காற்றை உள்ளிழுப்பார்கள். அவர்களுடைய டைடல் வால்யூம் கூடுதலாக இருப்பதால், நிமிடத்துக்கு 6 முதல் 8 முறை மூச்சை இழுத்துவிட்டாலே மற்றவர்கள் 12 - 14 மூச்சு எடுக்கும் அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைத்து விடும்.

Yoga

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். முறையாகவும் தொடர்ந்தும் மூச்சுப்பயிற்சி செய்து வருபவர்களின் மனம் காலப்போக்கில் பதற்றமில்லாமல் அமைதியாக இருக்க ஆரம்பிக்கும். பதற்றத்துடன் இருக்கும்போது மூச்சு விடுவது அதிகரிப்பதைப் பார்த்திருக்கிறோம் இல்லையா? அதே அடிப்படையில்தான் மனமானது தொடர்ந்து பதற்றமில்லாமல் இருக்கும்போது, அவர்களுடைய உடல் இயங்குவதற்கு மற்றவர்களைவிடக் குறைவான ஆக்ஸிஜனே போதுமானதாக இருக்கிறது. இதனால், அவர்களுடைய வளர்சிதை மாற்றத்திலும் சில பாசிட்டிவ்வான மாறுதல்கள் ஏற்படும். மூச்சுப்பயிற்சியின் பலன்கள் இவை. இந்த கொரோனா காலத்திலிருந்து நாம் அனைவரும் மூச்சுப்பயிற்சி செய்வதைப் பல் துலக்குவதைப்போல தினசரி கடமையாக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

மாஸ்க் அணிவதால் வெளியேறும் மூச்சுக்காற்றைத் திரும்பத் திரும்ப சுவாசிப்பதால், உடலில் வைரல் லோடு (viral load) அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

வைரஸ் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, வைரஸ் லோடு என்றால் என்ன; மாஸ்க் அணிவதால் வெளியேறும் மூச்சுக்காற்றைத் திரும்பத் திரும்ப சுவாசிப்பதால், உடலில் viral load அதிகரிக்குமா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். வைரஸ் என்பது பாக்டீரியாவைவிட பல மடங்கு சிறியது. பாக்டீரியாவை போல வைரஸால் தாமாக எண்ணிக்கையில் பெருக முடியாது. ஒரு வைரஸ் இரண்டாக வேண்டுமென்றால், வேறோர் உயிரினத்தின் வாழும் ஒரு செல்லுக்குள் நுழைந்தால்தான் இரண்டாகப் பெருக முடியும். அப்படியே ஒரு வைரஸ் நம் உடலைத் தாக்கினாலும், அந்த வைரஸை நம் உடலிலிருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி உடனே அழித்துவிடும்.

Novel Coronavirus SARS-CoV-2

இனி, வைரஸ்கள் மனித உடல் செல்லுக்குள் எப்படிச் செல்லும் என்று சொல்கிறேன். பொதுவாக வைரஸ்கள் ரெஸப்டார் எனும் புரதங்களில் ஒட்டி, அதன் மூலமே உடலின் செல்லுக்குள் நுழையும். கொரோனா வைரஸோ ACE 2 மூலமாக மூச்சுப்பாதையில் உள்ள செல்களுக்குள் செல்கிறது. அது பின்னர் ஆயிரக்கணக்கான வைரஸ்களாகப் பெருகுகின்றன. பிறகு, அந்த செல்கள் வெடித்தோ, செல்களின் மேற்புறத் தோலின் வழியாகவோ பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் வெளியேறும். இந்த வைரஸ்கள் உடலின் மற்ற செல்களைத் தாக்கிய பிறகு, அவற்றின் எஞ்சிய பகுதிகள் மூச்சுப் பாதையில் உள்ள நீர் மற்றும் சளியுடன் கலந்துவிடுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் இந்த வைரஸ்கள் வெளியேறி காற்றில் கலந்து மற்றவர்களுக்குப் பரவும். இந்த இடத்தில் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மூச்சு விடுதலும் இருமலும் தும்மலும் வைரஸ்களை உடலிலிருந்து வெளியேற்றும் வழி கிடையாது. வெள்ளை அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிக்கள் மூலம்தான் நம் உடல், வைரஸ் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றும். அதனால், கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர், மாஸ்க் அணிவதன் மூலமாக அவருக்குள் இருக்கிற வைரஸ்களைத் திரும்ப திரும்ப சுவாசிப்பதன் மூலம் வைரல் லோடும் ஆகாது, எந்தவித புது பாதிப்பும் ஏற்படாது.

Oxygen cylinder

மாஸ்க் அணிவதால், நாம் சுவாசித்து வெளிவிடும் கரியமிலவாயுவை மீண்டும் மீண்டும் சுவாசிப்பதால் நுரையீரலுக்கு என்ன பிரச்னை வரும்?

நாம் சுவாசிக்கும்போது உள்ளே இழுக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு ஏறத்தாழ 21 சதவிகிதமும், நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆர்கன் (Argon) ஒரு சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.04 சதவிகிதமும் உள்ளன. இயற்கையில் காற்றின் சேர்வை இப்படித்தான் இருக்கும். காற்று நுரையீரலுக்குள் சென்று, ரத்தத்துடன் பரிமாற்றம் நடந்து வெளியே வரும்போது, நைட்ரஜன் ஏறத்தாழ அதே அளவிலும், ஆக்ஸிஜன் அளவு சிறிது குறைவாகவும், கார்பன் டை ஆக்ஸைடு சிறிது கூடுதலாகவும் இருக்கும். உடலானது வளர்சிதை மாற்றம் மூலம் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடையும் சேர்த்து வெளியேற்றுவதுதான் இதற்குக் காரணம்.

சரி, இப்படி வெளியேறும் காற்றை மீண்டும் மீண்டும் சுவாசித்தால் என்ன நடக்கும்?

ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்து, ரெஸ்பிரேட்டரி அசிடோசிஸ் (respiratory acidosis) என்னும் நிலை ஏற்படலாம். இதனால், மூளை உள்பட உடலின் பல உறுப்புகளின் வேலை செய்யும் திறன் பாதிக்கப்படலாம். ஆனால், பயன்பாட்டில் இருக்கிற மாஸ்க்குகள் நன்கு காற்று பரிமாற்றம் நடக்கிற வண்ணம் இருப்பதால், இதைப்பற்றி நாம் பயப்படத் தேவையில்லை. ஒருவேளை ரத்தத்தில் சிறிதளவு கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்தாலும், அந்தத் தகவல் மூளைக்குச் சென்று, அங்கிருக்கும் மூச்சுவிடும் மையத்தை (respiratory centre) உலுக்கி மூச்சை இழுத்துவிடச் செய்யும். இதன் மூலம் ரத்தத்தில் கூடுதலாக இருக்கிற கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி விடும் உடல். அதே நேரம், நீங்கள் அணிந்திருப்பது மிகவும் இறுக்கமான மாஸ்க் என்றாலோ, அதை வெகு நேரம் பயன்படுத்த வேண்டுமென்றாலோ, யாருமற்ற இடங்களுக்குச் சென்று மாஸ்க்கை கழற்றிவிட்டு ஆழமாக மூச்சையெடுத்து வெளிவிடுங்கள். முடிந்தால் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள், போதும்.

face mask

Also Read: Fact Check: `கொரோனா பருவகால நோய்தான்; தனிமைப்படுத்தல் தேவையில்லை!' - பரவும் வாட்ஸ்அப்; உண்மை என்ன?

கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், மாஸ்க் அணிவது நோயைத் தீவிர நிலைக்கு இட்டுச்செல்லுமா?

கொரோனாவின் பல அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று லேசாகத் தென்பட்டாலோ, கொரோனா பாசிட்டிவ் என்றாலோ, நீங்கள் க்வாரன்டீனில்தான் இருக்கப்போகிறீர்கள். அப்படியிருக்கிற பட்சத்தில் நீங்கள் மாஸ்க் அணியப்போவதில்லை. க்வாரன்டீனில் இருக்கிற அறையைவிட்டு சில நொடிகள் வெளியே வர வேண்டுமென்றாலும் மாஸ்க் அணியத்தான் வேண்டும். இப்படிச் செய்வதனால், எந்தப் பிரச்னையும் வராது.



source https://www.vikatan.com/health/healthy/is-it-true-that-mask-wearing-will-make-covid-19-more-severe-doctor-clarifies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக