அஸ்ஸாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சூழலின் தன்மையைச் சரிவர புரிந்துகொள்ளாத அந்த நோயாளியின் உறவினர்கள், ஆத்திரத்தில் மருத்துவமனையைத் துவம்சம் செய்தனர். ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேறி, தங்களைத் தற்காத்துக்கொண்டனர். பாதுகாப்புக்காக ஓர் அறைக்குள் தஞ்சமடைந்த இளம் மருத்துவர் சிவுஜ் குமார் சேனாபதியை, அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியது. அந்தக் கொலைவெறித் தாக்குதலில் பலத்த காயமடைந்த சேனாபதி, தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் இருக்கிறார். அந்த மருத்துவர் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் பதைபதைப்புக்கு உள்ளாக்கியது.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி, மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கின்றன. அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ... தங்களை நாடிவரும் நோயாளிகளைக் குணப்படுத்துவதுதான் டாக்டர்கள் உட்பட மருத்துவக்குழுவினர்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒருசில இடங்களில் பணத்துக்காகவும் கவனக்குறைவாகவும் தவறாக நடந்துகொள்ளும் டாக்டர்களும் மருத்துவமனை நிர்வாகிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்காக, ஒட்டுமொத்த டாக்டர்களையும் எந்தச் சூழலிலும் தவறான கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த சிலர், நிதானத்தை இழந்து மருத்துவர்களையும் மருத்துவமனையையும் தாக்குவதால்தான், இக்கட்டான நேரங்களில்கூட பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கின்றனர்.
அஸ்ஸாம் மருத்துவர் சேனாபதியைப் போன்ற கொடுமையான பாதிப்பை, பல ஆண்டுகளுக்கு முன்பு எதிர்கொண்ட சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
``அந்தச் சம்பவத்தை மறக்க நினைக்கிறேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என்னோட வாழ்க்கையே முற்றிலுமா திசைமாறிப்போச்சு. முன்ன மாதிரி என்னால எந்த வேலையும் செய்ய முடியல. தினமும் கொஞ்ச நேரம்தான் பிராக்டிஸ் வேலைகளைக் கவனிக்கிறேன். எனக்கு நிகழ்ந்த சம்பவம், வேறு எந்த மருத்துவருக்கும் நடக்கக் கூடாது. இன்னும் பயமும் அச்சமும் எனக்கு இருக்குது. இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்..." - மனதில் இருந்து நீங்காத அந்த நிகழ்வின் தாக்கமும், அதனால் எதிர்கொண்ட வேதனையும் இவரது பேச்சில் அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகள் நிகழ்வதற்கான காரணத்துடன், பயம் கலந்த மனநிலையிலேயே பணியாற்றும் நடைமுறைச் சிக்கலை முன்வைத்துப் பேசுகிறார் பொது மருத்துவரான அருணாசலம். ``படிப்பை முடித்து மருத்துவராகப் பணியைத் தொடங்கும்போது,`'நீங்கள் அணுகும் நோயாளிகளை, உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வைத்தியம் பார்த்தாலே போதும். அவரைக் காப்பதற்கான அதிகபட்ச முயற்சியாக அது அமையும்' என்றுதான் இளம் மருத்துவர்களுக்கு வழிகாட்டிகள் அறிவுறுத்துவார்கள். அதன்படிதான் பெரும்பாலான மருத்துவர்களும் பணியாற்றுகிறோம். ஆனால், படித்தவர்கள், படிக்காதவர்கள் பலருமே தனக்கு வேண்டப்பட்ட நோயாளியின் உடல்நிலை சிக்கல்கள், அவை சார்ந்த சூழலின் தன்மையை சில நேரங்களில் உணர மறுக்கின்றனர். நோயாளியின் இழப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. அதிலும், இளம் வயது மரணங்களில்தான் அதிகம் கொந்தளிப்படைகின்றனர்.
ஏற்கெனவே நன்கு பழக்கமுள்ள மருத்துவராக இருந்தாலும் சரி, புதிதாக அணுகிய மருத்துவராக இருந்தாலும் சரி, அந்த மருத்துவர் அளித்த சிகிச்சை முறையால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகச் சிலர் நினைக்கின்றனர். வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றவர்கள், அடுத்த சில தினங்களில் வேறு ஏதாவது காரணத்தால் உயிரிழந்தாலும்கூட, சில தினங்களுக்கு முன்பு வைத்தியம் பார்த்த மருத்துவரும், அவர் கொடுத்த சிகிச்சையும்தான் பிரச்னைக்குக் காரணம் என்றே கருதுவார்கள். மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே சில நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில்தான் இருப்பார்கள். ஆனால், முதலுதவி சிகிச்சை செய்த பிறகு, அவர்களில் சிலர் இறக்க நேரிடலாம். `நீங்கள் கொடுத்த சிகிசையால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது' என்று எங்கள்மீது பழி திரும்பும்.
பெரிய அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகள் சிலவற்றில்தான் கட்டமைப்பு வசதிகளும், பெருவாரியான நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளும் அதிகம் இருக்கும். உதாரணத்துக்கு, நான் நிர்வகிக்கும் தனியார் மருத்துவனைக்கு ஒரு நோயாளி அழைத்து வரப்படுகிறார். அவருக்கு இருக்கும் பாதிப்புக்கு, என்னுடைய மருத்துவமனையில் சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் இல்லையெனில், உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்துவோம். சிலநேரம், நோயாளியின் உயிரைக் காக்க, முதலுதவி சிகிச்சை கொடுத்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தால், நாங்கள் கொடுத்த சிகிச்சையால்தான் நோயாளி இறந்தார் என்று சொல்வார்கள்.
அந்த நேரங்களில் நாங்கள் மிக நிதானத்துடன், நோயாளியின் உறவினரிடம் பேசிப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் திட்டினாலும், சில நேரம் கை நீட்டினாலும்கூட, சமயோஜிதமாக சூழலைக் கையாள வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். நாங்கள் பொறுமை இழந்து சற்றே கோபப்பட்டாலும், நிலைமை எல்லை மீறி கைகலப்பாக மாறும். இன்றைய சோஷியல் மீடியா காலகட்டத்தில், ஒரு விஷயத்தை உறுதிசெய்யாமல் ஒருவரின் பெயரை சில நிமிடங்களிலேயே சுக்குநூறாக சீரழித்து விடுகின்றனர். அதனால், நாங்கள் அணுகும் ஒவ்வொரு நோயாளியாலும், எங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற பயம் மனதுக்குள் இயல்பாகவே ஏற்படுகிறது. அதனால், இக்கட்டான நேரங்களில் சில நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் குற்ற உணர்வில் தவிப்போம்.
என்னை நாடிவரும் நோயாளியின் உடல்நிலை பாதிப்பை அவரின் உறவினர்களுக்குப் பக்குவமாக எடுத்துக்கூறி, அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகும், மேற்கொண்டு என்னால் சிகிச்சையளிக்க முடிந்தால் மட்டுமே அவரை உள்நோயாளியாக அனுமதிப்பேன். அதேசமயம் ஒவ்வொரு நோயாளியும் எங்களிடம் கொண்டுவரப்படும்போது அவருடைய உடல்நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அறிக்கையாக முதலில் தயார் செய்துகொள்வோம். இது, எங்கள்மீது குற்றச்சாட்டுகள் வரும்பட்சத்தில் ஆதாரமாக முன்வைக்க எங்களுக்கு உதவும்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது ஒருவருக்கு மரணமே நிகழக் கூடாதா? அப்படி நடந்தால், அதற்கும் மருத்துவரைக் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்? இதுபோன்ற காரணங்களுக்காகவே, ஆபத்தான கட்டத்தில் எங்களிடம் வரும் நோயாளிகளுக்கும், பிரச்னையை எழுப்ப வாய்ப்பிருக்கும் குறிப்பிட்ட சில துறையினருக்கும் சிகிச்சையளிக்க மிகவும் யோசிக்க வேண்டிய தர்ம சங்கடத்துக்கு நடுத்தர தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தள்ளப்படுகிறோம். முழு சுதந்திரத்துடன் பணியாற்ற முடியாத சிக்கலில்தான் பெருவாரியான மருத்துவர்கள் பணியாற்றுகிறோம். நாடிவரும் மக்களில் 80 சதவிகிதத்தினர் எங்களை முழுமையாக நம்புவதில்லை. அதனாலேயே, ஒருவித பயம் கலந்த உணர்வில்தான் தினம்தோறும் பணியாற்றுகிறோம்.
Also Read: Covid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா?
கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருப்பதால், அங்கு நோயாளியைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதை நோயாளியின் உறவினர்களுக்கு உணர்த்திவிடுவார்கள். அதனால், அங்கு உயிரிழப்பு நிகழ்ந்தாலும்கூட, அதிக அளவில் கட்டணம் கேட்பதாக மட்டுமே புலம்புவார்கள். அரசு மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, அங்கு பணியாற்றும் மருத்துவக்குழுவினருக்குப் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். இதுபோன்ற உயிரிழப்பு சிக்கல்கள் அங்கு நேரிடும்போது, இறந்தவரின் உறவினர்களுக்கு மருத்துவக்குழுவினர் எங்களைப்போல பொறுமையுடன் பதிலளிக்க கால அவகாசம் இருக்காது. அதனால்தான், சில நேரங்களில் புரிந்துகொள்ளாமல் அரசு மருத்துவர்களையும் பொதுமக்கள் தாக்குகின்றனர். அரசு மற்றும் நடுத்தர தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்குத்தான் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் சிலர், மருத்துவ வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்" என்று வருத்தத்துடன் முடித்தார் மருத்துவர் அருணாசலம்.
இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வுகளை முன்வைத்துப் பேசுகிறார், மருத்துவச் செயற்பாட்டாளரும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத். ``நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகளும், மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் இல்லை. அதனால், சிக்கலான நேரங்களில் உயிரிழப்பு ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஆற்றாமையையும் கோபத்தையும் அந்தச் சூழலில் தங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள்மீது மக்கள் வெளிப்படுத்துகின்றனர். தனியார் மருத்துவமனையில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது மற்றும் அங்கு சில நேரங்களில் சிலரின் தவறான செயல்பாடுகள் ஆகியவற்றால் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதும் மக்களுக்குக் கோபம் அதிகரிக்கிறது. போதிய படுக்கை இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, வெளிப்படைத்தன்மை அதிகம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள், இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் மருத்துவத்துறைமீது மக்களுக்கு வெறுப்புணர்வைக் கூட்டுகின்றன. அதனால், வழக்கமான காலங்களைவிடவும், கொரோனா காலகட்டத்தில்தான் மருத்துவர்கள் மீதான வன்முறை அதிகம் நடைபெறுகிறது.
Also Read: இப்படித்தான் மறைக்கப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சி நிலவரம்; அரசின் பதில் என்ன?
ஒரு நோயாளியைக் காப்பாற்றுவதில், `கோல்டன் ஹவர்ஸ்' எனப்படும் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவதற்கான குறிப்பிட்ட சில மணிநேரம் மிகவும் முக்கியமானது. தொலைதூரத்தில் மருத்துவமனை இருப்பது, போக்குவரத்துச் சிக்கல், ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், அந்த கோல்டன் ஹவர்ஸ் வீணடிக்கப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில், மருத்துவமனையில் உயிரிழப்பு நிகழ்ந்தால், அதற்கான நியாயமான மருத்துவ காரணங்களை மக்களுக்கு விளக்கி புரியவைக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு இருக்கிறது. அதேசமயம், மருத்துவம் பற்றிய அடிப்படையான புரிந்துணர்வுடன், உயிரழப்பு நேரிடும்போது அதற்கான காரணத்தை அறிந்து தெளிவுடன் நடந்துகொள்ளும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு அதிகம் இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி, ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளையும் தரமான முறையில் மேம்படுத்தினாலே பாதி பிரச்னைகள் குறையும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ நடைமுறைகளை மக்களிடம் புரியவைக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்கலாம். மருத்துவர்களை நண்பர்களாகப் பார்க்கும் மனநிலை மக்களுக்கு வர வேண்டும். மருத்துவர்களை தாக்குவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று முடித்தார்.
தற்போதைய கொரோனா பேரிடர் சூழலிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் பணியாற்றிவருகின்றனர். சிலர் செய்யும் தவறுகளுக்காக, ஒட்டுமொத்த மருத்துவர்களையும் குற்றம் சுமத்துவதுடன், அவர்கள் மீதான தாக்குதல்களை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிப்பின் காரணம் அறிந்து செயல்படுவோம், மருத்துவர்களை நண்பர்களாகப் போற்றுவோம்.
source https://www.vikatan.com/news/healthy/how-attacks-against-doctors-damaging-their-mental-health-severely
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக