Ad

சனி, 5 ஜூன், 2021

ரிச் ஜுவல் கேக் | சீஸ் மூங் ஃபிங்கர்ஸ் | ரெயின்போ புலாவ்... பார்ட்டி ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

பர்த்டே பார்ட்டி, ஆனிவர்சரி பார்ட்டியெல்லாம் மாறி, புது டிரெஸ் போட்டால் பார்ட்டி, புது மொபைல் வாங்கினால் பார்ட்டி என்ற அளவுக்கு இந்தத் தலைமுறை ரொம்பவே அட்வான்ஸ்டு.

யார் கண் பட்டதோ, கொரோனா வந்து எல்லாவற்றையும் காலிசெய்ய, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பார்ட்டி பண்ண முடியாமல் தவிக்கிறார்கள் பலரும். பார்ட்டிக்குதான் வாய்ப்பில்லையே தவிர பார்ட்டி உணவுகள் சாத்தியம்தான். இந்த வார வீக் எண்டில் `வேர் இஸ் த பார்ட்டி... எங்க வீட்டுல பார்ட்டி' என ஸ்டேட்டஸ் வைத்து, கொண்டாட பார்ட்டி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் உங்களுக்காக...

தேவையானவை:

• மைதா மாவு - 2 கப்
• உப்பு - ஒரு சிட்டிகை
• பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

• சமையல் சோடா - கால் டீஸ்பூன்
• உடைத்த நட்ஸ் கலவை (முந்திரி, வால்நட், பிஸ்தா, பாதாம்) - அரை கப்
• பைன் நட்ஸ் – சிறிதளவு
• டிரை ஃப்ரூட்ஸ் கலவை (பேரீச்சை, திராட்சை, அத்திப்பழம், செர்ரி, பெரிய திராட்சை) - ஒரு கப்
• விரும்பிய பழக்கலவை - ஒரு கப்
• பொடித்த சர்க்கரை - 60 கிராம்
• தேன் - 2 டேபிள்ஸ்பூன்
• கண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்
• வெண்ணெய் - 50 கிராம்
• பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
• பதப்படுத்திய ஆரஞ்சு தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்
• பட்டைத்தூள், லவங்கத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை
• வெனிலா எசன்ஸ், பைனாப்பிள் எசன்ஸ் - தலா கால் டீஸ்பூன்
• பொடித்த சர்க்கரை – கால் கப்
• தண்ணீர் - தேவையான அளவு

ரிச் ஜுவல் கேக்

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து மூன்று முறை நன்கு சலிக்கவும். டிரை ஃப்ரூட்ஸ் கலவை, பழக்கலவையில் சிறிதளவை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். 60 கிராம் பொடித்த சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கி, கரைத்து பழுப்பு நிறத்துக்கு வந்ததும் இறக்கவும். இதுவே, கேரமல். பாத்திரத்தில் வெண்ணெயுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அடிக்கவும். அது நன்கு பொங்கி வரும்போது ஆறவைத்த கேரமல், கால் கப் பொடித்த சர்க்கரை, மைதா கலவையை சிறிது சிறிதாகச் சேர்க்கவும். ஒரே பக்கம் கலக்கவும். நன்கு கலந்தபின் ஆரஞ்சு தோல் துருவல், பால், எசென்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் வகைகள், பட்டைத்தூள், லவங்கத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் தடவிய டிரேயில் சிறிதளவு மாவைத் தூவி, தட்டி அதில் கேக் கலவையை ஊற்றி 40 நிமிடங்கள் பேக் செய்யவும். (வேகும்வரை) கேக் ஆறிய பிறகு தேன் ஊற்றி, மேலே பழங்கள், நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.

தேவையானவை:

• பாசிப்பருப்பு - அரை கப்
• அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
• பிரெட் ஸ்லைஸ் - 8
• பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
• பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
• மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
• கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
• சீஸ் க்யூப் – ஒன்று (துருவவும்)
• உப்பு – தேவையான அளவு
• பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒன்றரை டீஸ்பூன்
• எண்ணெய் - தேவையான அளவு.

சீஸ் மூங் ஃபிங்கர்ஸ்

செய்முறை:

பாசிப்பருப்பைக் கழுவி குழையாமல் வேகவைக்கவும். தண்ணீரை வடியவிட்டு பருப்பைப் பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும். பிரெட்டை ஒவ்வொரு ஸ்லைஸாகத் தண்ணீரில் முக்கி, உடனடியாக எடுத்துப் பிழிந்து பருப்புடன் சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி நீளவாக்கில் குழல்களாகச் செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தயாரித்து வைத்த குழல்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். கொத்தமல்லி சட்னி, சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு: பருப்பையும் பிரெட்டையும் நன்றாகப் பிழியாவிட்டால், பொரிக்கும்போது பிரிந்துவிடும்.

தேவையானவை:

• பாஸ்மதி அரிசி - 3 கப்
• நெய் - 2 டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• நட்ஸ், உலர்ந்த பழங்கள் – தேவையான அளவு

முதல் லேயர் செய்ய:

• பெங்களூரு தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
• கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
• மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
• வெங்காயம் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
• பீட்ரூட் – பாதியளவு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
• மஞ்சள்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை
• கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை
• உப்பு – தேவையான அளவு

இரண்டாவது லேயர் செய்ய:

• வெங்காயம் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
• முந்திரி விழுது - ஒரு டீஸ்பூன்
• கரம் மசலாத்தூள் - சிறிதளவு
• குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
• துருவிய பனீர் - சிறிதளவு
• உப்பு - தேவையான அளவு
• நெய் – 2 டீஸ்பூன்
• முழு மிளகு - 6

மூன்றாவது லேயர் செய்ய:

• வெங்காயம் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
• பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
• நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
• இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
• புதினா இலைகள் - 10
• எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு
• கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
• நெய் – 2 டீஸ்பூன்
• வேகவைத்த பட்டாணி - சிறிதளவு
• உப்பு - தேவையான அளவு

ரெயின்போ புலாவ்

செய்முறை:

பாஸ்மதி அரிசியில் உப்பு சேர்த்து உதிர் உதிராக, சாதமாக வடிக்கவும். சாதத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து வைக்கவும். முதல் லேயர் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு, அரைத்த விழுது சேர்த்து, நெய் பிரிந்துவரும் வரை வதக்கவும். இதனுடன் ஒரு பாகம் சாதம் சேர்த்துக் கலக்கவும்.

இது, சிவப்பு வண்ணம். மற்றொரு வாணலியில் நெய்விட்டு இரண்டாவது லேயர் செய்ய கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஒரு பாகம் சாதத்தைச் சேர்த்துக் கலக்கவும். இது, வெள்ளை வண்ணம். மற்றொரு வாணலியில் நெய்விட்டு மூன்றாவது லேயர் செய்ய கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஒரு பாகம் சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். இது பச்சை வண்ணம். ஒரு பாத்திரத்தில் முதல் லேயரை வைத்து நன்கு அழுத்தவும். அதன் மீது இரண்டாவது லேயரைப் பரத்தி அழுத்தவும். அதன் மீது மூன்றாவது லேயரைப் பரத்தி நன்கு அழுத்தி, பாத்திரத்தை மூடவும். குக்கரில் சூடான தண்ணீர் ஊற்றி, அதனுள் சாதம் அடுக்கிய பாத்திரத்தை வைத்து 10 நிமிடங்கள் தம் செய்யவும். இறுதியாக நெய்விட்டு, நட்ஸ், உலர் பழங்கள் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

தேவையானவை:

• ஸ்பாஞ்ச் கேக் – ஒன்று (சிறிய துண்டுகளாக்கவும்)
• விருப்பமான ஜாம் - அரை கப்
• விரும்பிய பிஸ்கட் (ஓட்ஸ், மேரி) – ஒரு பாக்கெட் (சிறிய துண்டுகளாக்கவும்)
• விரும்பிய பழக்கலவை (கிவி, மாம்பழம், செர்ரி, அன்னாசி, ஆப்பிள், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி) - ஒரு கப்
• ஜெல்லி பாக்கெட் - ஒன்று
• விரும்பிய கஸ்டர்டு பவுடர் (மாம்பழம், சாக்லேட்) - அரை கப்

• பால் - 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)
• சர்க்கரை - அரை கப்

அலங்கரிக்க:
• உடைத்த நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் கலவை – ஒரு கப்
• நன்கு அடித்த ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

ரிச் ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட்

செய்முறை:

ஜெல்லியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கரைக்கவும். ஆறிய பிறகு ஃப்ரீஸரில் வைத்து, செட் செய்து எடுக்கவும். கஸ்டர்டு பவுடருடன் சர்க்கரை, பால் சேர்த்துக் கரைத்து மிதமான தீயில் தோசை மாவுப் பதத்துக்குக் கிளறி இறக்கவும். ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையின் உள்ளே பிரஷ்ஷின் உதவியால் ஜாம் தடவவும். முதல் லேயராக கேக் துண்டுகள் சேர்க்கவும். பிறகு, அதன் மீது பாதி பழக்கலவையைப் பரப்பவும். இதன் மேல் கஸ்டர்டு கலவையை ஊற்றவும். அடுத்த லேயராக மீதிமுள்ள பழங்கள், ஜெல்லித் துண்டுகளைச் சேர்த்து பரப்பவும். இறுதியாக, பிஸ்கட் துண்டுகள், க்ரீம், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் கலவையைச் சேர்த்து அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்து பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/rich-jewel-cake-cheese-moong-fingers-rainbow-pulao-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக