சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அ.தி.மு.க தலைவர்களுக்குள் பனிப்போர் வெடித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் தனித்தனி அணியாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
Also Read: ’எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்’ - நெல்லை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் விளக்கம்!
இந்த களேபரத்துக்கு மத்தியில், சசிகலா அ.தி.மு.க தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே உள்கட்சிக் குழப்பங்களால் தேர்தல் தோல்வியைச் சந்தித்ததாகத் தொண்டர்கள் பலரும் வேதனைப்பட்டு வரும் நிலையில் தற்போது நிலவும் குழப்பங்களால் அ.தி.மு.க தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 9-ம் தேதி) ’அ.தி,மு.க மானூர் ஒன்றிய தொண்டர்கள்’ பெயரில் ஜெயலலிதா படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெயலலிதா படத்துடனான அந்த போஸ்டரில், ‘அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீசெல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டதால் தேர்தலில் தோல்வியடைந்தோம். இனியும் தொடர்ந்தால் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களை பார்த்து கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தொண்டர்களும் குழப்பம் அடைந்தார்கள். அ.தி.மு.க-வில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவது நடைமுறைப் பழக்கம் இல்லை என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 10-ம் தேடி) நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கட்சியின் இணை ஒருங்கிணைப்பளரான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி-கள், எம்.எல்.ஏ-கள் சிலரின் படத்துடன் அவை ஒட்டப்பட்டிருந்தன.
அதில், “தமிழ்நாடு சட்டமன்றத்தின் வலுவான எதிர்க்கட்சித் தலைவராக தமிழகத்தின் தனிப்பெரும் ஆளூமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை தேர்வுசெய்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக நெல்லை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் யுத்தம் காரணமாக அ.தி.மு.க-வினரிடம் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து கட்சியினரிடம் பேசுகையில், “சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு கட்சிக்குள் நிலவிய கோஷ்டிபூசலே முக்கிய காரணம்.
தற்போது மீண்டும் கோஷ்டி சண்டை வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. நெல்லை மாவட்டத்துக்குள் இருக்கும் கோஷ்டியினர் தங்களை ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு போஸ்டர் மூலம் தங்களின் சண்டையைத் தொடருகிறார்கள். இதனால் கட்சிக்குள் குழப்பம் அதிகரிக்குமே தவிர கட்சிக்கு எந்த விதத்திலும் பயன் ஏற்படாது” என்று வருத்தப்படுகிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/posters-war-in-between-supporters-of-edappadi-palanisamy-and-panneerselvam-in-nellai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக