கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (கர்ப்பிணி). கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பிரசவத்திற்காக இன்று (10.06.2021) அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கர்ப்பிணியுடன் செல்வி, அம்பிகா என்ற இரு உறவினர்களும்; ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரும் உதவிக்காக உடன் சென்றுள்ளனர். மேலும், ஆம்புலன்சில் டிரைவர் உட்பட பெண் உதவியாளர் ஒருவரும் உடன் இருந்துள்ளார். ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, ஆம்புலன்ஸின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், கர்ப்பிணி ஜெயலட்சுமியின் உறவினர்களான செல்வி, அம்பிகா என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிருக்கு போராடியபடி இருந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியை, மற்றொரு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தையை பிரசவிக்காமல் அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்று நபர்களின் உடல்களும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உட்பட மற்ற இரண்டு பெண் உதவியாளர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் மணிகண்டனிடம் பேசினோம்.
"சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து கர்ப்பிணியை பிரசவத்திற்காக ஆம்புலன்சில் அழைத்து வருகின்றனர். அந்த ஆம்புலன்ஸில், டிரைவர் உட்பட மொத்தம் ஆறு நபர்கள் இருந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி வந்தபோது டயர் வெடித்ததா... என தெரியவில்லை. ஆனால், சாலையின் இடப்புறம் உள்ள மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இந்த விபத்தில், கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
Also Read: `கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?' - விளக்கும் மருத்துவர்
டிரைவர் உட்பட ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் என மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் தெரிவிக்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/accident/108-ambulance-crashes-into-a-tree-tragically-death-of-three-woman-including-a-pregnant-woman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக