Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

நானும் நீயுமா - 8 : எம்ஜிஆர் Vs சிவாஜி... சத்தமில்லாமல் நடந்த நடிகர் சங்க சண்டைகளின் பின்னணி என்ன?

கணேசமூர்த்தி என்கிற இயற்பெயரைக் கொண்ட நடிகர் வி.சி.கணேசனுக்கு 'சிவாஜி' என்கிற அடைமொழி கிடைத்ததற்கு ஒருவகையில் எம்.ஜி.ஆர்தான் காரணமாக இருந்தார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

இளம் வயதில் பல்வேறு நாடகக்குழுக்களில் நடித்து திறமையான நடிகராக வி.சி.கணேசன் அறியப்பட்டிருந்தார். இந்தச் சமயத்தில் பெரும்பாலும் பெண் வேடத்தில் நடித்து புகழ்பெற்றிருந்தார் என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம். சில காரணங்களால் கணேசன் சார்ந்திருந்த நாடக சபாக்கள் வீழ்ச்சியடைந்தன. இது கணேசனையும் பாதித்தது. எனவே அவர் காஞ்சிபுரத்திற்குச் சென்று அறிஞர் அண்ணாவிடம் பத்திரிகை தொழிலில் உதவியாளராக இருந்தார். அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தின் சுயமரியாதை மாநாட்டிற்காக, அண்ணா எழுதிக் கொண்டிருந்த நாடகம்தான் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்'.

இதில் மாமன்னர் சத்ரபதி சிவாஜியாக நடிப்பதற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் வளரும் நடிகராகவும் பொலிவான தோற்றத்தைக் கொண்டிருந்ததாலும் 'மாமன்னர்' வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அண்ணா எழுதிய அந்த நாடகத்தில் சில மாற்றங்களைச் செய்ய எம்.ஜி.ஆர் விரும்பினார். மாமன்னர் சிவாஜிக்கு பட்டம் சூட்டப்படும் போது குலம் சார்ந்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. இந்த விஷயம் தொடர்பாக தனது நாடகத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஆவேசமான வசனங்களை எழுதியிருந்தார் அண்ணா. இந்த வசனங்களை, மன்னர் தனது தளபதியிடம் சொல்வதாக நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.

எம்ஜிஆர் - சிவாஜி

ஆனால், இதை மக்களிடம் நேரடியாகச் சொல்வது போல் நாடகம் அமைந்திருந்தால் நன்றாக இருக்குமே என்பது எம்.ஜி.ஆரின் யோசனை. ஆனால், அத்தனை பெரிய எழுத்தாளரான அண்ணாவிடம் இதைச் சொன்னால் சரியாக இருக்குமா என்கிற தயக்கம் எம்.ஜி.ஆரிடம் ஏற்பட்டது. இது சார்ந்து எழுந்த குழப்பத்தினால் எம்.ஜி.ஆர் விலகிக் கொள்ள, ‘'வேறு யாரை நடிக்க வைக்கலாம்'’ என்று கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட அப்போதைய பிரபலமான நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், நாடகங்களில் நடித்து சிறப்பான பெயர் வாங்கியிருந்த கணேசனை நடிக்க வைக்கலாம் என்கிற முடிவை அண்ணாவே அழுத்தமாக முன்மொழிந்தார். இதற்கொரு காரணமும் உண்டு.

காலை பதினோரு மணிக்கு அண்ணாவிடமிருந்து நாடகத் தாள்களை வாங்கிய கணேசன், அன்றைய தினமே அதை மனப்பாடம் செய்து மாலை அண்ணா வரும் போது ஏற்ற இறக்கங்களுடன் முழுக்காட்சிகளையும் 'கணீர்' என்ற குரலில் வசனமாக பேசிக் காண்பித்திருக்கிறார். கணேசனின் திறமையையும் அர்ப்பணிப்பையும் கண்டு கொண்ட அண்ணாவிற்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் விலகிப் போனது. சிவாஜியின் ஒல்லியான முகத்தோற்றத்தை மறைக்க தாடி வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்காக தைக்கப்பட்டிருந்த உடைகள் சிவாஜிக்கேற்ப சரி செய்யப்பட்டன.

மாமன்னர் சத்ரபதி சிவாஜி எனும் இத்தனை பெரிய பாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியுமா என்று தயங்கிய கணேசனை, அண்ணா உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். நாடகம் பெருவெற்றி பெற்றது. காகபட்டர் என்கிற வேடத்தில் அண்ணாவும் நடித்திருந்தார். இந்த நாடகத்திற்கு தலைமை தாங்கி சிறப்பு விருந்தினராக வந்திருந்த பெரியார் "சிவாஜியா நடிச்சிருந்த பையன் நல்லா நடிச்சிருந்தான்" என்று பாராட்ட, கணேசன் என்கிற அந்த இளைஞனை மேடைக்கு அழைத்து வந்தனர். '’இனிமே நீ வெறும் கணேசன் இல்ல. 'சிவாஜி’ கணேசன்’’ என்று பெரியார் அன்று தந்த பட்டம்தான் பிறகு கணேசமூர்த்தி என்கிற அந்த இளம் நடிகன், தன் வாழ்நாள் முழுவதும் பெருமிதத்துடன் சூட்டிக் கொள்ளும் அடையாளமாக மாறிப் போனது.

ஒருவேளை, ஏற்கெனவே செய்திருந்த முடிவுகளின் படி எம்.ஜி.ஆரே இந்த நாடகத்தில் நடித்திருந்தால் என்னவாகியிருக்கும்? சிவாஜியின் வெற்றி சற்று தாமதமாகியிருக்கலாமே தவிர, அவரின் பிரமாண்டமான வருகையை யாராலும் தடுத்திருக்க முடியாது. 'பராசக்தி' திரைப்படத்தில் நடிப்பதற்கு சிவாஜியின் தோற்றம் காரணமாக எதிர்ப்பும் தயக்கமும் ஏற்பட்ட சம்பவங்களை முன்னர் பார்த்தோம். 'பராசக்தி' இல்லையென்றாலும் கூட இன்னொரு சந்தர்ப்பத்தின் மூலம் இந்த விதை விருட்சமாக வளர்ந்திருக்கும் என்பது போல் சிவாஜியைப் பாராட்டியவர் வேறு யாருமல்ல. அறிஞர் அண்ணாவேதான்.

எம்ஜிஆர் - சிவாஜி

திமுக-விலிருந்து மனக்கசப்புடன் வெளியேறிய சிவாஜி கணேசன் காங்கிரஸில் இணைந்த கதை நமக்குத் தெரியும். என்றாலும் கட்சி சார்புகளைத் தாண்டி சிவாஜியின் மீது தனிப்பாசம் வைத்திருந்தார் அண்ணா. 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தின் வெற்றி விழாவிற்காக அண்ணா அழைக்கப்பட்ட போது ‘'அந்த விழாவிற்கு போகாதீர்கள். சிவாஜியை வாழ்த்திப் பேசாதீர்கள்’' என்று சிலர் இடைஞ்சல் செய்தாலும் கூட சிவாஜியின் மீதிருந்த அன்பு காரணமாக விழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்த அண்ணா, '’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு'’ என்று சிவாஜியை வாழ்த்திப் பேசினார்.

உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் முக்கால் மணி நேரம் பேசிய அண்ணா "கணேசா... என் அருமைத்தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க! பெருமாள் முதலியார் கூட்டிக் கொண்டு வந்ததால் கணேசன் திரையுலகிற்கு சீக்கிரம் வந்து விட்டான். இல்லையென்றாலும் நிச்சயம் இரண்டு ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசன் வந்திருப்பான். அவனுடைய வரவை யாராலும் தடுத்திருக்க முடியாது" என்று பாராட்டிப் பேசினார். அண்ணா மட்டுமல்ல, இதர அரசியல் தலைவர்களும் சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியிருக்கும் அரிதான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

'சம்பூர்ண ராமாயணம்' திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்பைக் கண்ட ராஜாஜி '’பரதனைக் கண்டேன்’' என்று சுருக்கமாகவும் அதே சமயத்தில் ஆழமாகவும் பாராட்டிச் சென்றார். இத்தனைக்கும் சிவாஜிக்கு அதில் சிறிய பாத்திரம்தான். ராமராக என்.டி.ராமாராவ் நடித்திருந்தார். என்றாலும் சிவாஜியின் தனித்துவமான நடிப்பை அடையாளம் கண்டு கொண்டார் ராஜாஜி. இதைப் போலவே, இன்னொரு சமயத்தில் சிவாஜி நடித்த 'கட்டபொம்மன்' நாடகத்தை பார்த்த ராஜாஜி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றார். நாடகம் முடிந்ததும் கூட்டத்தாரைப் பார்த்து "சிவாஜி கட்டபொம்மனாக நன்றாக நடித்துள்ளான். நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை இந்த நாடகம் மூலம் எடுத்துக் கூறுகிறான். இதையெல்லாம் ஜீரணிப்பதற்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா?" என்று பேசியுள்ளார்.

'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் வ.உ.சியாக நடித்த சிவாஜியின் சிறப்பான நடிப்பை, வ.உ.சியின் மகனே பாராட்டியிருக்கிறார். "என் அப்பாவை அப்படியே திரையில் பார்த்தது போலவே இருக்கிறது" என்கிற பாராட்டு சிவாஜியை மனம் மகிழச் செய்திருக்கிறது. ஆனால் 'இது காங்கிரஸ் படம்' என்று சிலர் செய்த பரப்புரையால் 'கப்பலோட்டிய தமிழன்' அந்த சமயத்தில் வணிகரீதியாக தோல்வியடைந்தது.

எம்ஜிஆர் - சிவாஜி

காமராஜரும் சிவாஜியின் நடிப்பு திறனை பல சமயங்களில் பாராட்டியிருக்கிறார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களுக்கு சினிமா, நாடகம் போன்வற்றைப் பார்க்க நேரமும் விருப்பமும் இருந்ததில்லை. அதிலும் ராஜாஜியெல்லாம் சினிமாவை பயங்கரமாக வெறுத்தவர். ஆனால், இது போன்ற தலைவர்களே சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு சிவாஜி அவர்களை ஈர்த்திருக்கிறார் என்பதை உணர முடியும்.

தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியும் காமராஜரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டவர் சிவாஜி. அவருக்காகவே தான் சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்திலும் கூட காங்கிரஸ் கட்சியின் அரசியல் வளர்ச்சிக்காக பாடுபட்டார். பல கூட்டங்களில் பேசினார். தன்னுடைய ரசிகர் மன்றங்களையும் இந்த அரசியல் பணியில் ஈடுபடுத்தினார். தமிழக காங்கிரஸில் காமராஜருக்கு அடுத்தபடியாக பிரபலமான முகம் என்றால் அது சிவாஜியுடையதாகத்தான் இருந்தது. ஆனால், காமராஜரின் மறைவிற்குப் பின்னால் எல்லாம் தலைகீழானது. 'தான் புறக்கணிக்கப்படுகிறோம்' என்று உணர்கிற இடங்களில் எல்லாம் மனம் கசந்து அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் சிவாஜி.

திரையில் சிறப்பாக நடித்த சிவாஜியால், நிஜ வாழ்க்கையில் அத்தனை சிறப்பாக நடிக்க முடியவில்லையோ... என்னவோ. அவர் சென்ற பல திசைகள் எங்கிலும் துரோகமும் ஏமாற்றமுமே பரிசாக கிடைத்தது.

1971-ம் ஆண்டு முதல் முதல் 1981-ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார் சிவாஜி. '’நீங்கள்தான் தலைவராக இருக்க வேண்டும்’' என்ற பலர் கேட்டுக் கொண்டதாலும், எம்.ஜி.ஆர் விரும்பியதாலும் இந்தப் பொறுப்பை அவர் ஒப்புக் கொண்டார். இவர் தலைவராக இருந்த சமயத்தில்தான் சங்கத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. வங்கியில் கடன் வாங்கியது போதாதென்று, சிவாஜியின் தலைமையில் தமிழ்நாடு முழுக்க பல நாடகங்கள் போடப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது.

இந்தக் கட்டடத்திற்காக தமிழக அரசு கடன் தரும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் கிடைத்தது கொஞ்சம்தான். சிவாஜி தலைவராக இருந்த போது பொருளாளராக இருந்தவர் விகே ராமசாமி. அவர் தனது சுயசரிதையில்சொல்லியிருப்பது இதுதான்.

எம்ஜிஆர் - சிவாஜி

'’அரசு தரவிருக்கும் கடனுக்காக நடையாக நடந்தோம். ஆனால் ‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். மீதியை அடுத்த நிர்வாகம் வந்து அடைத்துக் கொள்ளட்டுமே’’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். ஏனெனில் அப்போது அரசியலில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் எதிரும் புதிருமாக நின்றார்கள். "அப்பனுக்கு சாராயம்... பிள்ளைக்கு சத்துணவா?" என்று அரசியல் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார் சிவாஜி.

இதை தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், தன்னுடைய சதுரங்க ஆட்டத்தை நடிகர் சங்க கடன் விவகாரத்தில் காண்பித்தார். இதனால் அரசு கடன் கிடைக்காமல், வங்கியில் வாங்கப்பட்ட கடன், வட்டி ஏறி பெரும் நிதிச்சுமையில் சங்கம் தள்ளாடியது. இதனால் மனம் வெறுத்துப் போன சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி ஆகியோர் தங்களின் நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அன்றிலிருந்து நடிகர் சங்கத்தின் பக்கமே சிவாஜி சென்றதில்லை. ஏன் அவர் இறந்த போது கூட அவரது உடல் நடிகர் சங்க கட்டடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை.

அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி, தன்னுடைய போட்டியாளர்களின் அசைவுகளை தொடர்ந்து கண்காணித்து அந்தச் சதுரங்க ஆட்டத்திற்கேற்ப காய்களை நகர்த்துவதில் வல்லவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இதை அவரது ஆளுமைத்திறனின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். ஆனால் சிவாஜியிடம் இந்தச் சாமர்த்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்ஜிஆர் - சிவாஜி

சிவாஜி நடித்து சூப்பர் ஹிட் ஆன 'புதிய பறவை' திரைப்படத்திற்கான முன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது நாளிதழில் முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தது. அதில் ‘இயக்கம்: தாதா மிராசி’ என்பதோடு கூடுதலாக ‘இயக்கம் மேற்பார்வை: சிவாஜி கணேசன்’ என்று போட்டிருந்தது. பார்த்தார் எம்.ஜி.ஆர். அடுத்த நாள் அதே நாளிதழில் இன்னொரு முழுப்பக்க விளம்பரம் வந்தது. எம்.ஜி.ஆர் நடித்து வெளிவரவிருக்கும் 'தாழம்பூ' திரைப்பட விளம்பரத்தில், ‘இயக்கம்: ராமதாஸ்’ என்பதோடு கூடுதலாக, ‘இயக்கம் மேற்பார்வை: எம்.ஜி.ஆர்’ என்று பிரசுரம் ஆகியிருந்தது.

இது தனக்கான செக்மேட் என்பதைப் புரிந்து கொண்ட சிவாஜி, அடுத்த விளம்பரத்திலிருந்து மேற்பார்வை என்கிற விஷயத்தை எடுத்து விட, எம்.ஜி,ஆரும் தனது குறும்பை கைவிட்டார். தனது போட்டியாளர்களை மிகவும் சாமர்த்தியாக எம்.ஜி.ஆர் எதிர்கொள்ளும் விஷயத்திற்கு இந்த விஷயம் ஓர் உதாரணம்.

ஆனால் இது போன்ற போட்டிகள், சர்ச்சைகள் போன்றவற்றைத் தாண்டி எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. தான் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த சமயத்தில் தன்னுடைய ராமாபுரம் வீட்டிற்கு சிவாஜியை வரச் சொல்லியிருந்ததாகவும் ஒரு முக்கியமான பொறுப்பை அவரிடம் பகிரவிருந்ததாகவும் அதற்குள் இயற்கை முந்திக் கொண்டு எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்று விட்டதாகவும் தனது சுயசரிதை நூலில் சிவாஜி தெரிவிக்கிறார்.

இன்று இந்த ஆளுமைகள் இருவருமே உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் தொடர்பான ரகசியங்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன.



source https://cinema.vikatan.com/tamil-cinema/why-mgr-and-sivaji-ganesans-fight-over-nadigar-sangam-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக