Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

வாகன ஆய்வாளர் பணித் தேர்வு குளறுபடி? - 2 ஆண்டுகளாக தொடரும் டி.என்.பி.எஸ்.சி சர்ச்சை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாதது. சமீபகாலமாக நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

நீண்டகாலம் காலியாக இருந்த 112 இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு 2018 ஜூன் 6-ம் தேதி நடந்தது. 2018 ஜூலை 15-ல் தேர்வு முடிவுகள் வெளியானது. 1,328 பேர் எழுதியதில் 33 பேர் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

33 பேர் மட்டும் தேர்வானதில் முறைகேடு நடந்துள்ளது என்று, தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம், `` 33பேர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது, தகுதியான நபர்களை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று 2020 ஆகஸ்ட் 18-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகு ஏற்கனவே தேர்வு எழுதியவர்களில் இருந்து 226 பேரை டி.என்.பி.எஸ்.சி தற்போது தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 8 முதல் 11 வரை நேர்காணல் நடத்தப்படும் என அறிவித்த நிலையில் தற்போது நேர்காணல் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் (பைல் படம்)

ஏற்கனவே இவர்கள் எந்த அளவுகோலில் நிராகரிக்கப்பட்டர்கள்? தற்போது எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காதது பல்வேறு சந்தேகங்களை உண்டாக்குகிறது என்று புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ள சமூகஆர்வலர் காசிமாயனிடம் பேசினேன், ``வாகன ஆய்வாளர் பணிக்கு 33 பேர் தேர்வானதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என்ற குழப்பத்தை டி.என்.பி.எஸ்.சி இப்போது வரை தீர்க்கவில்லை. 33 பேர் தேர்வு செல்லாது என்றும், மீண்டும் சரியான முறையில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்றும், 2020 ஆகஸ்ட் 18-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவையடுத்து ஏற்கனவே தேர்வு எழுதியவர்களிலிருந்து 226 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது. வரும் ஜூன் 8-லிருந்து நேர்காணல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இந்த 226 பேரும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

காசி மாயன். ஆர்.டி.ஐ ஆர்வலர்

ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் தேர்வு செல்லாது என உத்தரவிடப்பட்ட 33 பேரில், 6-க்கும் மேற்பட்டவர்கள் இந்த 226 பேர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளதும் வியப்பைத் தருகிறது. தேர்வு விதிமுறைகளின்படி அப்ரென்டிஷிப் (apprenticeship) மட்டும் முடித்தவர்களை தேர்வு செய்யக்கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் ஓராண்டு அனுபவம் இருக்கவேண்டும். ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் சிலர், வெறும் அப்ரென்டிஷிப் மட்டுமே முடித்தவர்கள் என்பது ஆர்.டி.ஐ மூலம் தெரிகிறது. இதனால் இந்தத் தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே போக்குவரத்துத்துறை பணியில் அதிக ஊதியம் வாங்கி வரும் சிலர், அதைவிட 50 சதவிகிதம் ஊதியக்குறைவான இந்தப் பதவிக்குத் தேர்வெழுதி, தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் இடம் பெற்றுள்ளனர். அப்படி என்றால் இப்பதவியில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பது தெரிகிறது. மக்கள் பாதுகாப்பு சம்மந்தமான பணியில் இப்படி தேர்வு நடந்தால் 'இந்தியன்' படத்தில் வரும் வாகன ஆய்வாளர்கள் போலத்தான் இருப்பார்கள். நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் இத்தேர்வில் குளறுபடி தொடர்கிறது. இதை புதிய அரசு விசாரணை நடத்தி முறைகேடு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.'' என்றார்.

ஆர்.டி.ஓ அலுவலகம். (பைல் படம்)

உயர்நீதிமன்றத்தால் பணி நியமனஆணை ரத்து செய்யப்பட்ட 32 பேரில் சிலரிடம் பேசினோம்,``டிஎன்பிஎஸ்சி விதிகளின்படி கல்வி, அனுபவம் அடிப்படையில் 33 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டோம். அழைக்கப்படாதவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்கால தீர்ப்புக்கு எதிராக டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்ததில் 33 பேரைத்தவிர மற்றவர்களுக்கு தகுதிகள் சரியாக இல்லை என்று தெரிவித்தார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டதால் 32 பேருக்கு 11.4.19-ல் பணி ஆணை வழங்கப்பட்டது.

அரசுப்பணியில் இருந்தவர்களைத்தவிர மீதி 24 பேரும் பார்த்த வேலையை விட்டுவிட்டு காத்திருந்தோம். அந்த நேரத்தில்தான், தேர்வான 33 பேரையும் ரெஸ்பான்டண்டாக சேர்த்து சிங்கிள் பெஞ்ச் வழக்கில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வந்தது.

பணி ஆணை வந்துவிட்டதால் அந்த வழக்கை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டிஎன்பிஎஸ்சியின் நோட்டிஃபிகேஷனில் பல மாற்றங்களை செய்து அளித்த தீர்ப்பு, எங்களுக்கு எதிராக வந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி விதிகளில் பெட்ரோல்,டீசல் எஞ்சின் கனரக, இலகுரக வாகனங்களை பழுது பார்த்த அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் என்றிருந்தது. அதுபோல், வேலை பார்த்த இடத்தில் வருகைப்பதிவேடு இருக்கவேண்டும், தினமும் பயிற்சி எடுத்திருக்கிறோமா என்பதை அறிய வருகைப்பதிவேடு கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. ஆனால், தீர்ப்பிலோ வேலைபார்த்த நிறுவனத்தில் ஆவணம் எழுதி வாங்கினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி விதிகளின்படி எங்களிடம் எல்லாம் சரியாக இருந்தது.

பொதுவாக டிஎன்பிஎஸ்சி-யின் நோட்டிஃபிகேஷனை மாற்றியமைப்பது சாதாரணமானதல்ல. ஆனால், டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்யவில்லை. நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். இது சம்மந்தமாக தேர்வாணையம் அரசாங்கத்துடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும், என்று உத்தரவிட்டது எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை எதிரணியினர் உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். எங்களிடம் வசதி இல்லாததாலும் அரசின் மீதான நம்பிக்கையிலும் அமைதியாக இருந்தோம். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர்கள் தாக்கல் செய்ததால், டிஎன்பிஎஸ்சி தற்போது ரிசல்ட் வெளியிட்டுள்ளனர். இதில் எந்த தவறும் செய்யாத எங்கள் 32 பேரின் பணி நியமன ஆணையை ரத்து செய்துவிட்டார்கள். இதனால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தேர்வான எங்கள் 33 பேரில் ஒருவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்ததால் அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அந்தளவுக்கு உன்னிப்பாக செயல்பட்ட சமயமூர்த்தி IAS, முறைகேடு செய்துவிட்டார், லஞ்சம் வாங்கி போஸ்டிங் போட்டு விட்டார் என்று சிலர் புரளியைக் கிளப்பினார்கள். அப்படி பணம் வாங்கி அவர் போஸ்டிங் போடுவதாக இருந்தால் 113 பணியிடத்துக்கும் பணம் வாங்கிக் கொண்டு போஸ்டிங் போட்டிருக்கலாமே.

தேர்வு முறைகேடு

இந்த பிரச்னையில் முக்கியமான விஷயம், எப்போதும் போக்குவரத்து துறை பணியிடங்களில் கொங்கு பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகம் வருவார்கள். நிராகரிக்கப்பட்டவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால், போக்குவரத்துத்துறையில் துணை ஆணையராக இருந்தவர் மூலம் இந்த விஷயத்தை அப்போதைய முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களின் வழிகாட்டுதலில் நியாயமாக நடந்த தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். நீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கொடுத்து அதற்கு தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார்கள்.

தகுதியுள்ள நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களுக்கு நீதி வழங்கவேண்டும்.’’ என்றனர். இது சம்பந்தமாக கோரிக்கை மனுவை தமிழக முதல்வருக்கும், நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன்

பரபரப்பை ஏற்படுத்தி வரும் இப்பிரச்சினை தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் விளக்கம் கேட்க தொடர்ந்து முயற்சித்தும் அவர் தொடர்பில் வரவில்லை. அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vehicle-inspector-job-tnpsc-selection-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக