Ad

திங்கள், 21 ஜூன், 2021

புத்தம் புது காலை : ஒரு கிலோ 2.70 லட்சம்... மியசாகி மாம்பழத்துக்கு ஏன் இவ்வளவு மவுசு?!

''என்னது... மாம்பழம் கிலோ 2.70 லட்சமா? பழம் வேணாம் பாஸு. அந்த விதை மட்டும் கிடைக்குமான்னு பாருங்களேன்!" என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள் மக்கள்.

ஆம்... கடந்த நான்கு நாட்களாக மத்தியப்பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி - சங்கல்ப் பரிஹார் தம்பதிகள்தான் திரும்பியபக்கமெல்லாம் ட்ரெண்டிங். ஜப்பானியர் ஒருவர் பரிசாக அளித்த மியசாகி(Miyazaki) மாமரம், அதன் பழத்தின் அதிரவைக்கும் லட்சக்கணக்கிலான விலை, அந்த மியசாகி மாமரத்தையும், அதன் விதைகளையும் திருடர்களிலிருந்து பாதுகாக்க நாய்கள் வாட்ச்மேன் என்று தனது தோட்டத்திற்கு பரிஹார் மேற்கொண்டிருக்கும் காவல் நடவடிக்கைகள் எல்லாமே செய்திகளாகியிருக்கின்றன.

ஒரு மாம்பழத்திற்கு இவ்வளவு அலப்பறையா?

மாம்பழத்துக்கு பாதுகாப்பு

விநாயகரும் முருகனும் சண்டை போட்டுக்கொண்ட ஞானப்பழத்துக்குப் பிறகு, உண்மையில் இந்த ஜப்பானிய மாம்பழத்தைப் பற்றித்தான் இவ்வளவு பேசப்படுவதுபோல் இருக்கிறது.

அப்படி என்னதான் உள்ளது மியசாகி மாம்பழத்தில்... இதன் அடர்சிவப்பு நிறத்தையும், அதீத சுவையையும், தனி மணத்தையும் தாண்டி, அதிக சதைப்பற்று, குறைந்த நார்ச்சத்து, அதிக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடென்டுகள், பீட்டா கரோட்டீன், பெக்டின், காலெக்டின் போன்ற தாவரச்சத்துகளும் என எல்லாமே நிறைந்து நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அதிசயப் பழமாக இது இருக்கிறது.

எல்லாம் சரி... மற்ற மாம்பழங்களைப் போலவே சாதாரணமாக மரத்தில் காய்த்துப் பழுக்கும் மாம்பழங்களில் இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை என்று ஒரு கேள்வி எழுகிறதல்லவா?

உண்மையில் இந்த மியசாகி மாம்பழங்களின் பிறப்பிடம் ஜப்பான் அல்ல, அமெரிக்கா.

மியசாகி

1939-ம் ஆண்டு, அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த எஃப்.டி. இர்வின் என்ற இயற்கை விஞ்ஞானி ஒரு சுவையான மாம்பழத்தை உருவாக்க முயற்சித்தபோது வந்த ஒரு கலப்பின மாம்பழம்தான் இந்த மியசாகி மாம்பழம். அதன் பிரத்தியேக நிறம், சுவை மற்றும் மணம் காரணமாக அப்போது அது அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற, அதனை தென் கொரியா, தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 1960களில் அறிமுகப்படுத்தப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. அப்படி உலகமெங்கும் 'இர்வின் மாம்பழம்' என்ற பெயருடன் பரவிய இந்த மாம்பழம் பிற்பாடு மியசாகி மாம்பழம் என்ற பெயர் பெறக் காரணம் ஜப்பானியர்களின் விவசாய முறைதான் என்கிறது வேளாண் அறிவியல்.

கிழக்கு ஜப்பானின் க்கியூஷூ தீவுகளில் ஒன்றான மியசாகியில் முதன்முதலில் விளைவிக்கப்பட்ட இந்த அரியவகை மாம்பழங்களின் சிறப்பைக் கண்ட ஜப்பானியர்கள் அவற்றை 'Taiyo no Tamago' அதாவது சூரியனின் வாரிசு என்று அழைத்ததுடன், அவற்றை இன்னும் சுவையாக விளைவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.


மரங்களுக்கு முறையான ஊட்டம் தந்து வளர்ப்பதில் ஆரம்பிக்கும் இவர்களது பராமரிப்பும், கடின உழைப்பும், அந்த மியசாகி மாமரம் காய்க்கத் தொடங்கியவுடன் பல மடங்காகிறது. மற்ற மாம்பழங்கள் போலவே இந்த மாம்பழங்களும் காய்க்கும்போது கிளைகளில் கொத்துக் கொத்தாக காய்க்கும் என்றாலும், இவற்றில் ஒன்றே ஒன்று மட்டும் தனியாக வளர்ந்தால் சத்துகள் அனைத்தும் அதற்கு முழுமையாகச் சென்றடையும் என ஜப்பானியர்கள் கருதினார்கள். அதனால் இந்த மரத்தின் ஒரு கிளையில் இருக்கும் அதிக அரும்புகள், மொக்குகள் ஆகியவற்றை முளைக்கும்போதே கிள்ளியெறிந்துவிட்டு, ஒற்றைப் பழத்தில் முழுகவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

காய் பச்சையாய் இருக்கும்போது, அதற்கென பிரத்தியேக வலை ஒன்றைக் கட்டி பறவைகளிடமிருந்து காத்து, தனி வலைகளில் தொங்கும் மியசாகி காய்க்கு சூரிய ஒளி, ஆக்சிஜன், நீர் மற்றும் கனிம வளங்கள் முழுமையாகக் கிடைப்பதை வளரும்போதே உறுதிபடுத்திக் கொள்கிறார்கள்.


பச்சை நிறம் மெதுவாக ஊதா நிறத்திலும், பிறகு அடர் சிவப்பு நிறத்திலும் மாறுவதையும், ஒவ்வொரு கனியும் 350-400 கிராம் எடையுடன், கரும்புள்ளிகள் அற்ற சிவப்புத் தோலுடன் நாளுக்கு நாள் அழகாக வளர்வதை தினமும் ரசிக்கும் ஜப்பானியர்கள், மியசாகி மாங்கனி முழுமையாக வளர்ந்தபின்பும் அவற்றைக் கைகளால் பறிக்காமல் கனிந்து வலையில் விழும் நாளுக்குக் காத்திருக்கின்றனர்.

அப்படி விழும் பழம்தான் முழுமையான சுவையைத் தரும் என்று நம்பும் இவர்கள், "நீங்கள் கொடுக்கும் கிலோ இரண்டே முக்கால் லட்சம் என்ற அந்த விலை அந்த மாம்பழத்துக்கானது அல்ல, அதனை அவ்வளவு சுவையுடன் உங்களுக்கு அளிக்கப் பாடுபடும் எங்கள் உழைப்பிற்கானது" என்கிறார்கள்.

அதேசமயம், அனைத்து மியசாகி மாம்பழங்களும் இவ்வளவு விலையைப் பெறுவதில்லை என்று கூறும் ஜப்பானியர்கள், இப்படி மாம்பழங்களை வளர்த்து தங்களுக்கு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்கும்போதுதான் இன்னும் மதிப்படைகிறது என்கிறார்கள்.

அதுபோன்ற ஒரு தருணத்தில், 2019-ம் ஆண்டில் ஒரு ஏலத்தில் மியசாகி மாம்பழத்திற்கு கிடைத்த விலைதான், அந்த இரண்டே முக்கால் லட்சம் என்ற ஐயாயிரம் டாலர்கள். "என்னதான் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், எங்களது அதீத கவனிப்பால் இன்று இது, ஜப்பானிய மியசாகி மாம்பழம் ஆகிவிட்டது பாருங்கள்" என்று புன்னகைக்கிறார்கள் ஜப்பானியர்கள்.


தனது சுவையை உயர்த்தியபடி ஜப்பானின் பொருளாதாரத்தையும் மியசாகி மாம்பழம் உயர்த்தியது போலவே, இதனைப் பயிர்செய்து உயர்ந்த இன்னொரு நாடும் உள்ளது.
தைவான் நாடு கடும்பஞ்சத்தில் இருந்த 1962-ம் ஆண்டு காலத்தில் அந்நாட்டின் யூஜிங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி (செங்-ஹான்) இந்த அரியவகை மாமரங்களைப் பயிரிட்டு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, ஐந்தாண்டுகள் கழித்து வென்றிருக்கிறார்.


1967-ம் ஆண்டு அந்த டௌலிசாய் கிராமத்தின் மூலமாக தைவான் நாட்டிற்கு இந்த மாம்பழம் மூலமாக கிடைத்த வருமானம், 300 மில்லியன் டாலர்களாம். இன்றைக்கும் தைவானில் இருக்கும் பெரும்பான்மை வீடுகளுக்கு 'இர்வின் மேன்ஷன்' என்ற பெயர் இருப்பதற்குக் காரணம், இந்த மாம்பழம் தங்களுக்கு வாழ்வளித்த நன்றிதான் என்கின்றனர் தைவான் மக்கள்.


தற்போது ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கல்ப் பரிஹார் கூட "இந்த மாம்பழங்களை நான் விற்கப் போவதில்லை... அதன் விதைகளைக் கொண்டு அதிக மரங்களை உற்பத்திதான் செய்யப் போகிறேன்!" என்று கூறியிருப்பது, தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்க்காத ஒரு தீர்க்கமான நல்ல முடிவல்லவா!

முக்கனிகளில் முதல்கனியான நமது மாங்கனியின் ஒருவகைப் பழம், ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் கலைநயத்துடன் வளர்க்கப்பட்டு அவர்களுக்குப் புகழைச் சேர்த்திருக்கிறது. மற்றொரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைத்திருக்கிறது. அதேபோல, நமக்கும் நன்மையையே பயக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது இந்த ஞானப்பழம்!

அத்துடன் "Study nature... love nature... stay close to nature, it will never fail you" என்ற வரிகளின் உண்மையையும் புரிய வைக்கிறது மியசாகி என்ற பிரியசகி!

#இயற்கை



source https://www.vikatan.com/health/healthy/why-miyazaki-mangoes-are-worlds-costliest-mangoes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக