Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

அபியிடம் விசாரணை நடத்தும் குடும்பம்... என்ன செய்யப்போகிறான் சித்தார்த்? #VallamaiTharayo

மருத்துவமனை... என்ன செய்வதென்று அபி, கெளதம், ஹர்ஷிதா மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அபியின் போன் ஒலிக்கிறது.

``என்னடி என்ன செஞ்சிட்டிருக்கே? உனக்கு உடம்பு சரியில்லைன்னாங்க. மாப்பிள்ளை குழந்தைகளோட இங்கே வந்துட்டார். என்ன நடக்குது? என்னிக்கு பேக் மாட்டிக்கிட்டு ஆபிஸுக்குப் போனியோ அன்னிக்கே பிரச்னை ஆரம்பிச்சிருச்சு. புருஷனுக்கு அடங்கி வீட்டில் இருக்க உனக்கு வலிக்குதா? என்ன செய்வியோ தெரியாது. நாளைக்கு காலையில் இங்க இருக்கணும். உன் காலை ஒடிக்கிறேன்; அப்புறம் நீ என்ன செய்வேன்னு பார்க்கலாம்” என்று படபடவென பொரிந்துவிட்டு போனை வைக்கிறார் அபியின் அம்மா.

Vallamai Tharayo

மகள் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்டுவிட்டு, பிறகு ஒரு முடிவுக்கு வரக் கூடாதா? மாப்பிள்ளை மீது இருக்கும் நல்ல அபிப்ராயமோ அல்லது மகள் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயமோ சிலரை இப்படிப் பேச வைத்துவிடுகிறது.

உடனே கெளதம், ``நாம எல்லோரும் ஊருக்குப் போகலாம். நான் வரலைன்னா சித்தார்த் சொல்றது நிஜம்கிற மாதிரி ஆயிரும். அபி விஷயத்தில் மட்டும் நான் செஞ்சதெல்லாம் எப்படி தப்பாவே போகுதுன்னு தெரியல. நான் பேசிப் புரிய வைக்கிறேன்” என்கிறான்.

``இல்ல, வேண்டாம் கெளதம். இதை நான் பார்த்துக்கறேன். அது கிராமம். நீங்க வந்தா இன்னும் சிக்கலாயிரும்” என்கிறாள் அபி.

ஹர்ஷிதா காரில் அபியை அழைத்துச் செல்கிறாள். வீட்டில் அபியின் பெரியப்பாவும் பெரியம்மாவும் இல்லை. சித்தார்த் தன் அக்கா குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறான்.

அபியின் உடல்நிலை பற்றிக்கூட கேட்க அங்கு யாருக்கும் மனமில்லை. ஒவ்வொருவரும் அபியை மோசமாகப் பேசுகிறார்கள். இதைத் தாங்க முடியாத ஹர்ஷிதா, ``அபியை இந்தப் பனிக்காலத்தில் நைட் முழுக்க வெளியில நிற்க வச்சிருக்கார். அவரைக் கேள்வி கேட்காம, பாதிக்கப்பட்ட அபியைக் கேட்கறீங்களே, என்ன நியாயம்?” என்கிறாள்.

``எதுக்காக நிக்க வச்சான்? தன் பொண்டாட்டிகிட்ட இன்னொருத்தன் புரபோஸ் பண்ற வீடியோவைப் பார்த்துட்டு, எந்த ஆம்பளை பேசாம இருப்பான்? நைட் முழுவதும் நிக்க வச்சது தப்புதான். அதையும் அவ திருந்தறதுக்காகத்தான் செஞ்சிருப்பான்” என்கிறார் கெளசல்யா.

``நீங்களும் ஐடியில் வேலை செய்றவங்கதானே? இப்படி அவுட்டிங் போயிருப்பீங்கதானே? ஆணும் பெண்ணும் சகஜமா பேசிருப்பீங்கதானே?” என்று கேட்கிறார் சேதுராமன்.

Vallamai Tharayo

``நான் அந்த டாஸ்க் பண்ண முடியாதுன்னு சொல்லிருப்பேன். இந்த மேடம் மாதிரி பல் இளிச்சிட்டு வந்து நிக்க மாட்டேன்.”

உடனே வீடியோவை முழுவதும் பார்க்கச் சொல்கிறார் சேதுராமன். எல்லோரும் பார்க்கிறார்கள்.

``டாஸ்க் கேவலமா இருந்தாலும் அதை கெளதம் எவ்வளவு நல்லா ஹேண்டில் பண்ணிருக்கார். இதில் தப்பு என்ன இருக்கு?” என்று சேதுராமன் கேட்க, ``இதை அபி முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா?” என்கிறார் கெளசல்யா.

``உங்க தம்பி சொல்றதுக்கு எங்கே ஸ்பேஸ் கொடுக்கிறார்? எப்பவும் பயந்து பயந்து வாழ்ந்துட்டு இருக்கேன்” என்கிறாள் அபி.

``என் தம்பி கோபத்தில் நிக்க வச்சுட்டான். காலையில ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போறதுக்குள்ளே ஒரு கால் வந்துருச்சு. அதுக்குள்ளே அவனுக்கு போனைப் போட்டு, மாய்மாலம் பண்ணி, ஹாஸ்பிட்டலுக்குப் போனா ஒரு புருஷனால எப்படிப் பார்த்துட்டு இருக்க முடியும்?” என்று கேட்கிறார் கெளசல்யா.

``நிறுத்துங்க. அபி நிலைமையைப் பார்த்து ஹாஸ்பிட்டல் போகச் சொன்னதுக்கு உங்க தம்பி என்ன செஞ்சார்? `நான் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, கண்டுக்கவே இல்ல. நான்தான் கெளதமைக் கூப்பிட்டு உதவி கேட்டேன். அபி வீட்டுக்கும் என் வீட்டுக்கும் இருபது மீட்டர் தூரம்தான். நைட் அவங்க என் வீட்டுக்கு வந்திருக்கலாம். அவர் கோபப்படுவார்னு அதைக்கூடச் செய்யல. அபியை விசாரிக்கிறதை விட்டுட்டு, அவரைக் கேளுங்க”

Vallamai Tharayo

``போதும். மாப்பிள்ளை நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்கிறார் அபியின் அப்பா.

என்ன சொல்லப் போறான் சித்தார்த்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-66

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக