Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

'விவசாயிகள் பெயரில் கனடா நாட்டு கரன்சி?' - பால் தினகரனின் பலே திட்டம்

மதபோதகர் பால் தினகரன், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைப் பயன்படுத்தி, தனக்குச் சாதகமான சில வேலைகளைச் செய்துகொண்டதே அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மூன்று நாள்களாக நடந்த வருமானவரிச் சோதனைகளுக்குக் காரணம் என்கிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.

பால் தினகரன்

தமிழகத்தில் புகழ்பெற்ற 'இயேசு அழைக்கிறார்' சபையின் தலைவராக இருப்பவர் பால் தினகரன். இந்த அமைப்புக்குச் சொந்தமாக சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும், பல லட்சம் மக்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 20-ம் தேதி முதல் இயேசு அழைக்கிறார் அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் 250-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மூன்று நாள்கள் நடந்த சோதனையின் முடிவில் 5 கிலோ தங்கம், 120 கோடிக்கான ஆவணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். தொடர் விசாரணையும் நடந்துவருகிறது. தற்போது கனடாவில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் பால் தினகரன். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் நோட்டீஸ் கொடுக்கப்ட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த ரெய்டு குறித்து மத்திய அரசுத் தரப்பிலிருந்து புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

“கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதி உதவிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், பா.ஜ.க அரசு பதவியேற்றதும் இந்த நிறுவனங்களுக்கு வரும் நிதியை முற்றிலும் தடுத்துவிட்டது. இதனால் பல கிறிஸ்தவ நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இயேசு அழைக்கிறார் அமைப்புக்கும் ஆரம்பத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த நிதியும் இப்போது குறைந்துவிட்டது.

பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு

இந்தநிலையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுப்பது பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளே. பஞ்சாப்பை சேர்ந்த பலரும் கனடா நாட்டில் தொழில் செய்துவருகிறார்கள். அவர்கள் மூலமே இந்த போராட்டத்துக்குப் போதுமான நிதியும் கிடைக்கிறது. பஞ்சாப் மாநிலத்தவர்கள் பலர், கனடாவில் நல்ல நிலையில் இருப்பதும், அந்த அரசுடன் இணைந்து செயல்படுவதாலுமே வேளாண் சட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் எதிர்த்த உடனேயே அந்த சட்டங்களை வெளிப்படையாக எதிர்த்த நாடாக கனடா இருந்தது. இந்த அடிப்படையில் கனடா வாழ் பஞ்சாப் மக்கள் தங்கள் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு உதவிகளை செய்துவந்தனர். இதனை மத்திய அரசும் கண்காணித்து வந்தது.

Also Read: பால் தினகரன்: முடிவுக்கு வந்த மூன்று நாள் ரெய்டு! - 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல்

இந்தநிலையில் விவசாயிகளுக்கு உதவும் சாக்கில், 'இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படுவது சமீபத்தில் மத்திய அரசின் கண்களில் பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தினகரன் தனது அமைப்புக்குத் தேவையான நிதியை அங்கிருந்து திரட்டி, அதை வேளாண்சட்டத்துக்கு எதிராகப் போராடு்ம் விவசாயிகளுக்கு உதவும் சாக்கில் இந்தியாவுக்குள் கொண்டுவரும் வேலையில் இறங்கியுள்ளார். இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மோப்பம் பிடித்தது. உடனடியாக இதுகுறித்து வருமானவரித்துறைக்கும் நோட் அனுப்பியுள்ளனது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

இந்த அடிப்படையிலே கடந்த 20-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் தொடர் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியுள்ளது, 'இயேசு அழைக்கிறார்' சபை. விவசாயிகள் போராட்டத்தை பின்னணியாக வைத்து சத்தமில்லாமல் தனது அமைப்புக்குப் பணத்தை கொண்டுவரும் பால் தினகரன் மீது மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறதாம். அவர் மீது ஏற்கனவே உள்ள சில வில்லங்க விவகாரங்களையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு அழைக்கபட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் தினகரன் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/canadian-currency-in-the-name-of-farmers-reason-behind-it-raid-on-paul-dinakaran-properties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக