Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

சசிகலா நிலைக்குக் காரணம் உறவுகளே... கொதிக்கும் அ.ம.மு.க தொண்டர்கள் -மருத்துவமனையில் என்ன நடக்கிறது?

சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் நான்காண்டு தண்டனைக்காலம் முடிந்துவிட்டது. பரோல் நாள்களுக்காக உள்ளிருந்தவர் ஜனவரி 27-ம் தேதி, `வீறுநடைபோட்டு வெளியில் வரப்போகிறார்’ என்று ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். அதற்குள், சசிகலாவின் உடல்நிலை கவலையுறச் செய்தது. உடல் மெலிந்து... வீங்கிய முகத்துடன் மருத்துவமனைக்கு வீல் சேரில் சென்ற சசிகலாவின் தோற்றம் ஆதரவாளர்களின் நெஞ்சைப் பதறச் செய்தது. `சசிகலாவின் துயரமான இந்த நிலைக்கு மன்னார்குடி உறவுகளே காரணம்’ என்று கொதிக்கிறது, அ.ம.மு.க வட்டாரம்.

பரப்பன அக்ரஹாரா சிறை

ஜனவரி 20-ம்தேதி, பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சசிகலா. ஏற்கெனவே, ஹைப்போ தைராய்டிசம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலா சுவாசப் பிரச்னையாலும், காய்ச்சலாலும் மேலும் அவதிப்பட்டார். காய்ச்சல் நெருப்பாய் கொதித்தது. கொரோனா தொற்று அறிகுறி தெரிந்ததால், 21-ம்தேதி ஆம்புலன்ஸ் மூலம் கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தகவலறிந்தவுடன், சசிகலாவின் குடும்ப உறவினர்களான டி.டி.வி.தினகரன், இளவரசி மகன் விவேக், டாக்டர் வெங்கடேஷ் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு கூடினர். கர்நாடக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட சசிகலா வீல் சேரில் அமரவைக்கப்பட்டார். `சின்னம்மா’ கோஷம் எழுப்பிய ஆதரவாளர்களைப் பார்த்து வலது கையைத் தூக்கி அசைத்தார்.

விக்டோரியா அரசு மருத்துவமனை

சரியாக, அன்று மதியம் 2.30 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன், ரத்தம் மற்றும் இதயப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகள் அன்றிரவே தெரிவிக்கப்பட்டன. அதில், சசிகலாவுக்கு இரண்டாவது வகை சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டுப் பிரச்னையுடன் நுரையீரலில் தீவிர தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவக்குழுவின் 24 மணி நேர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டார் சசிகலா.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ``சசிகலாவைப் பார்க்க அ.ம.மு.க தொண்டர்கள் யாரும் பெங்களூருவுக்கு வரவேண்டாம். அவர் விடுதலையாகும் நாளில் சிறப்பான வரவேற்பைக் கொடுக்கலாம்’’ என்றார். அதையடுத்து, விவேக், வெங்கடேஷ் இருவரைத் தவிர மற்ற அனைவரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து கிளம்பிவிட்டனர். இந்த நிலையில், சசிகலாவைப் பழைய விமான சாலையிலுள்ள மணிபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சிறைத்துறையிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சசிகலா

இந்த முடிவுக்கு, விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. ``எங்கள் மருத்துவமனையில் 7,500-க்கும் அதிமான கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். சசிகலாவுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் எங்களாலேயே அளிக்க முடியும்’’ என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். அதையடுத்து, சசிகலாவுக்கு விக்டோரியாவிலேயே சிகிச்சைத் தொடர்ந்தது. சென்னை அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், `அம்மா இட்லி சாப்பிட்டார். சட்னி தொட்டுக்கொண்டார்’ என்று கூறிய சி.ஆர்.சரஸ்வதி, 22-ம்தேதி பெங்களூரு மருத்துவமனைக்கும் வந்தார்.

சசிகலா அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல முயன்ற அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சிறிது நேரம் போலீஸாருடன் வாக்குவாதம் செய்த சரஸ்வதி, `இனி, என்ன பேசினாலும் உள்ளே விடமாட்டார்கள் போல’ என்று நினைத்துக்கொண்டு மரத்தடியில் சென்று அமர்ந்துகொண்டார். அதே நாளில், பெங்களூருவில் பிரசித்திபெற்ற ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சசிகலாவின் பெயரில் உறவினர் வெங்கடேஷ் சிறப்புப் பிரார்த்தனை செய்து வழிபட்டார். 23-ம்தேதி, ஆறுதல் அளிக்கும் வகையில், மருத்துவமனையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியானது.

சி.ஆர்.சரஸ்வதி

அதில், ``சசிகலாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. மருந்துகளுக்கும் உடல் ஒத்துழைக்கிறது. சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார்’’ என்று கூறப்பட்டிருந்தது. உறவினர்களுக்கு சிறு நிம்மதி ஏற்பட்ட அதே நேரத்தில், சசிகலாவின் அண்ணியும் சிறையில் உடனிருந்தவருமான இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், ஆதரவாளர்கள் மத்தியில் மீண்டும் கவலை தொற்றிக்கொண்டது. சசிகலா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் இளவரசியும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்புக்குப் பின்னர் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள்.

சசிகலா ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்கிறார். திட உணவுகளை எடுத்துக்கொள்கிறார். ரத்த அழுத்தமும் அவருக்கு சீராக உள்ளது. நுரையீரலில் இருந்த தொற்றும் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், சசிகலா விரைவில் குணமடைவார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ``சசிகலாவின் உடல்நிலை பாதிப்புக்கு முழுக்க முழுக்கக் காரணம், அவரின் சொத்துகளை அபகரிக்க நினைக்கும் குடும்ப உறவினர்கள்தான்’’ என்று அ.ம.மு.க நிர்வாகிகள் கொதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இளவரசி மகன் விவேக்

`பெயரை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டு நம்மிடம்பேசிய அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர்,``சிறைத்துறையிடம், வருமானவரி கணக்குக் கொடுத்திருந்தால், சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைத்திருக்கும். உதவியாளர், சமையலர் உதவிக்கு அமர்த்தப்பட்டிருப்பார்கள். கட்டில், ஃபேனும் கொடுத்திருப்பார்கள். இன்கம்டேக்ஸ் ரிட்டெர்ன் கொடுக்காமல் அலைக்கழித்ததே... சாதாரண சிறைக் கைதியைப் போல் சசிகலா துன்பப்படக் காரணம். இன்கம்டேக்ஸ் ரிட்டெர்ன் கொடுத்து அனுப்புமாறு விவேக்கிடம் சசிகலா கூறியிருந்தார்.

மன்னார்குடி உறவுகள் கூட்டாகச் சேர்ந்து சசிகலாவுக்கு துன்பத்தை விளைவிக்கத் திட்டம் போட்டிருப்பது, இப்போது உறுதியாகியுள்ளது. `சசிகலாவின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று கர்நாடக மாநில உளவுத்துறை, சிறைத்துறையிடம் கூறியிருக்கிறது. அதனால், சிறையில் 5 அறைகள் உள்ள தனிக்கட்டடம் சசிகலாவுக்குத் தயார் செய்யப்பட்டது. இரண்டு அறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள மூன்று அறைகளிலும் மற்ற கைதிகளை அடைக்காமல் பாதுகாப்புக் காரணங்களாக மூடி வைத்திருந்தனர்.

சசிகலா

சாதாரணக் கைதியாக சொல்லா துயரத்தை அனுபவித்த சசிகலா விடுதலையாகி வரும் வேளையில் இப்படி துன்பப்படுகிறார். சொந்தக்காரர்கள் சொத்துக்காக உடனிருந்து நாடகமாடுகிறார்கள். நல்லபடியாக குணமடைந்து வந்தாலும் அவருக்கு மேலும் ஓய்வு தேவைப்படுகிறது. கழுத்து வலி, முதுகு வலியுடன் கண்களிலிருந்தும் தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகிற சின்னம்மா விரைவில் நலம்பெற்று வர வேண்டும்’’ என்றனர் கண்ணீருடன்.

விக்டோரியா தலைமை மருத்துவர் ஒருவரை அடிக்கடி தனியாக சந்தித்து சசிகலாவின் உடல்நிலையை கேட்டுத் தெரிந்துகொள்கிறார் உறவினர் வெங்கடேஷ். அந்த மருத்துவரின் உதவியுடன் சசிகலாவை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளும் மற்றொரு மருத்துவருக்கு வீடியோ கால் செய்கிறார். வீடியோ காலில் சசிகலாவிடம் தினமும் நலம் விசாரித்து தேவையானவற்றை வெங்கடேஷ் செய்து கொடுக்கிறார். 23-ம் தேதியன்று வீடியோ காலில் சசிகலாவிடம் பேசிக்கொண்டிருந்த வெங்கடேஷ், ``நல்லா ரெஸ்ட் எடுங்க. நவகிரக பூஜையெல்லாம் நல்லா முடிஞ்சது. சித்ரா, தீபக்னு ரெண்டு டாக்டருங்க உள்ள இருக்காங்க. நம்ம ஆளுங்கதான். எது, வேணுனாலும் அவங்ககிட்ட சொல்லுங்க. செஞ்சு தருவாங்க. சாப்பாடு நல்லா இருக்கா?’’ என்று 3 நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார்.

சசிகலா உறவினர் வெங்கடேஷ்

மருத்துவமனையில் இருந்த சசிகலாவின் உறவினர் வெங்கடேஷைச் சந்தித்து பேசினோம். ``அம்மா நல்லாயிருக்காங்க. அவர் அனுமதிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட நேரத்தில் நான் பிபி கிட் அணிந்துச் சென்று பார்த்தேன். பரிசோதனை குறித்து டாக்டர்களிடம் தினமும் மூன்று வேளை பேசிக்கிட்டிருக்கிறேன். விடுதலை நாள் தள்ளிப்போகலாம். முதலில் நல்லபடியாக குணமடைந்து வரட்டும்’’ என்றார்.

இதனிடையே, சசிகலா நாளை விடுதலை செய்யப்படுவதற்கான நடைமுறைகள் மருத்துவமனையிலிருந்தபடியே மேற்கொள்ளப்பட உள்ளன. சிறைத்துறையினர் மருத்துவமனைக்கே சென்று தண்டனை நிறைவுச் சான்றிதழை வழங்குகிறார்கள். இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை சசிகலாவின் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுவருகிறார்கள். விடுதலையானாலும், உடல்நிலை தேறிய பின்னரே பெங்களூருவிலிருந்து சென்னை திரும்புகிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் வரலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.



source https://www.vikatan.com/news/politics/ammk-cadres-alleges-mannagudi-family-members-reason-for-sasikalas-health

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக