Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

"குடும்பப் பொண்ணு மாதிரி லட்சணமா இருக்கீங்க?!" - மேடம் ஷகிலா - 1

அம்மாக்களின் உலகம் ஆச்சர்யங்களால் நிறைந்தது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா என்கிற மாடல், மெட்டி போட்டிருந்ததை வியந்து, சிலாகித்து என் அம்மா பேசிக்கொண்டிருந்தார். சம்யுக்தா போன்று மாடலாக, மாடர்னாக இருப்பவர்கள் மத/பண்பாட்டு அடையாளங்களுடன் இருப்பது அவருக்கு வியப்பூட்டியது.

முன்பு `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நடிகை ரம்பா ஸ்லோகம் சொல்வதைக் கண்டபோதும் இதேபோல் ஆச்சர்ய எமோஜிக்களை அள்ளித்தூவினார்.

அம்மா மட்டுமல்ல... பலரும் ஆச்சர்யம் அடைந்ததைப் பார்க்க முடிந்தது. "தொடையழகி என 'கொண்டாடப்படும்' கவர்ச்சி நடிகை ஒருவருக்கு இவ்வளவு கடவுள் பக்தி இருக்கிறதா" என வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். இன்றும் ரம்பா தனது மூன்று குழந்தைகளுடன் பண்டிகைகள் கொண்டாடும் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும்போது நம் மக்கள் "குடும்பப் பொண்ணு மாதிரி லட்சணமா இருக்கீங்க" என கமென்ட் செய்வதைக் காணலாம்.

ரம்பா
நடிகை சௌகார் ஜானகி பிஸியான நடிகையாக இருந்த காலத்தில், குஜராத்தில் இருந்த தன் மகளுக்கு தானே மிளகாய்ப்பொடி தயாரித்துக் கொடுத்தனுப்பியது முதல் 'குக்கு வித் கோமாளி'யில் ஷகிலா சமைப்பது வரை 'நடிகைகளும் நம்மைப் போன்ற உயிரினங்கள்தானா' என வியப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்னைப் போன்ற சிறுநகரத்துப் பெண்களுக்கு சில்க் ஸ்மிதாவின் அழகை ரசித்து வெளிப்படையாகப் பேச இடம் தந்ததே ஃபேஸ்புக்தான். அதையே என் வீட்டுப் பெண்களிடம் நேரடியாகப் பேச முடிகிற சூழல் இன்றும் இல்லை. ஒன்று வெட்கப்படுவார்கள், இல்லை முகத்தை சுளித்துக்கொண்டு என்னை 'வெட்கமில்லாதவள்' என்பார்கள்.

இந்தியாவில் பார்ன் படங்கள் மாதிரியான 'சாஃப்ட்கோர்' படங்கள் பிரத்யேகமாக ஆண்களுக்காக மட்டுமே திரையிட உருவாக்கப்படுகின்றன. கையில் ஆண்ட்ராய்ட் போன்களும், இன்டர்நெட்டும் இல்லாத 90-களின் இறுதியிலும், 2000-த்தின் துவக்கத்திலும் தென்னிந்தியாவில் அந்த மாதிரியான படங்களின் உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஷகிலா. இன்றைக்கும் அந்த வகை படங்களை 'ஷகிலா படங்கள்' என்றுதான் அழைக்கிறார்கள்.

நான் ஷகிலாவின் ரசிகன் என்று ஒரு ஆண் பொதுவெளியிலோ, தன் காதலி/மனைவியிடமோ கூறிக்கொள்ள முடியும். ஆனால் ஷகிலாவின் பெயரை ஒரு பெண், தன் சொந்த வீட்டில்கூட சொல்ல முடியாது.

படம் எடுப்பவர்கள், விநியோகிப்பவர்கள், ரசிகர்கள் என அப்படிப்பட்ட சினிமாத்துறையை முழுக்க ஆக்கிரமித்திருப்பது ஆண்களே. ஆனால், இவர்கள் யாரையுமே இந்த சமூகம் கேவலமாகப் பார்ப்பதில்லை. தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் முதற்கொண்டு, ஷகிலா போன்ற நாயகிகள்வரை பெண்களை மட்டும் சக மனுஷியாக, மரியாதையுடன் நடத்தும் சமூகமாக இன்னமும் நம் தமிழ்ச்சமூகம் மாறவில்லை.

ஷகிலா

பெண்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவும், வீட்டுக்குள் முடக்கவும் சமூகம் மிக அழகான, மறுத்து பேசிவிடக் கூடாத சில வரையறைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதில் ஒன்று, அடக்க ஒடுக்கமான குடும்பப்பெண். அப்படி இருக்கும் பெண்களுக்கு மட்டும் சகலவிதமான மரியாதைகளும் பொதுவெளியில் கிடைக்கும். ஆனால், அதற்காக ஒரு பெண் தான் உடுத்தும் உடை முதல் கல்வி, வேலை, வாழ்க்கைத்துணை என பலவற்றிலும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும். எதிர்த்தால், வகைதொகையின்றி ஒழுக்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

சாதாரணமாகத் தான் விரும்பிய அடிப்படை உரிமைகளை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கே இந்த நிலை என்றால், ஷகிலா போன்ற நாயகிகளை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்ளும் என்று விளக்கத் தேவையில்லை.

அப்படிப்பட்ட சமூகத்தில், சாஃப்ட்கோர் சினிமா நாயகி ஒருவர் விஜய் டிவி போன்ற ஒரு வெகுஜன தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது இங்கே மிகப்பெரிய சமுக மாற்றம்.

விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஷகிலா கவன ஈர்ப்பாளராக மட்டும் இல்லை. மற்ற பங்கேற்பாளர்களுக்கு நிகரான சமைக்கும் திறமை உள்ளவர். தன் திறமையால் அடுத்தடுத்த வாரங்களுக்கு முன்னேறுகிறார். அதுமட்டுமல்ல... சமையல் கலையில் அவருடைய ஆர்வம் நிகழ்ச்சியின் எல்லா எபிசோடுகளிலும் வெளிப்படுகிறது.

முழு நிகழ்ச்சியையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவராக முந்தைய சீசனில் வனிதா இருந்தார். அந்த இடத்தை தற்போது ஷகிலா பிடித்துள்ளார். வித்தியாசம் என்னவென்றால், ஷகிலா அந்தக் குழுவின் தலைவராக மட்டும் அல்லாமல், திடீரென்று தன்னை ’ஆன்ட்டி’ என மாற்றி அழைக்கும் புகழிடம், ”இவ்வளவு நாளா மம்மின்னு தான கூப்பிட்ட, இப்போ எதுக்கு ஆன்ட்டின்னு சொல்ற” என்று உரிமையாகக் கடிந்து கொள்ளும், வீட்டின் மூத்த உறுப்பினராகவும் இருக்கிறார்.

போட்டிதான் என்றாலும் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்துவது, எல்லோரிடமும் இலகுவாகப் பழகுவது, சரியாக சமைக்கும் கோமாளிகளைப் பாராட்டுவது என அந்த இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்தாமலே தனக்கான மரியாதையுடன் முன்னிலையில் இருக்கிறார் ஷகிலா. அதேபோல் தன்னை கேலி செய்யும் கோமாளிகளான பாலா மற்றும் புகழ் இருவரிடத்திலும் கோபப்படாமல் அவர்களை ரசித்து சிரிக்கும் ஷகிலா அத்தனை அழகு.

குக்கு வித் கோமாளி - ஷகிலா

குக்குகள் கோமாளிகளைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், "உங்களுக்கு எந்த கோமாளி வேண்டாம்” என்று கேட்கும் செஃப்களிடம் "யார் வந்தாலும் பரவாயில்லை” என சொல்லும் ஷகிலாவின் ஆட்டிட்யூட் செம கெத்து.

சமீபத்திய ஒரு பேட்டியில், "ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "ஆண்கள் இல்லாமல் நானில்லை" என்று சொல்லி அவர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே சமயம் தன் சொந்த அக்காவிடமே ஏமாந்துவிட்டதாக வெளிப்படையாகச் சொன்னார். "பெண்கள் யாரிடமும் ஏமாறாமல் தனக்கென சிறு சேமிப்பை வைத்துக்கொள்ள வேண்டும்" என்று தன் அனுபவத்தின்மூலம் சொன்ன ஷகிலாவை ரொம்பவே பிடித்திருக்கிறது.

இப்போதும் தான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக ஷகிலா கூறுவதைக் கேட்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஏனென்றால், ஷகிலாவின் வாழ்க்கைக் கதை நம்மில் பலருக்குமே தெரிந்தது!

ஷகிலா பற்றி பேசுவதையே ஒழுக்கக்கேடு என நினைக்கும் மனங்களின் மத்தியில் ஷகிலா மிகுந்த கடவுள் பக்தி உள்ளவராகவும், எல்லாவற்றுக்கும் கடவுளை நினைத்துக் கொள்பவராகவும் அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயல்பாக வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

பெண்களுக்கு அன்பை விடவும் மரியாதை முக்கியம். ஒரு பெண் தன்னுடைய சுயமரியாதையை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதற்கும் ஷகிலா ஓர் உதாரணம்.

குக்கு வித் கோமாளி ஷகிலா

எல்லாவற்றுக்கும் மேலாக, இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் செஃப் தாமு. ஷகிலாவை அவர் மிகுந்த மரியாதையுடன் 'ஷகிலா மேடம்’ என்று அழைத்ததுதான் ஷகிலாவைப் பற்றி எழுதுவதற்கான தொடக்கப்புள்ளி.

விளம்பர நோக்கத்திற்காக இந்த நிகழ்வில் ஷகிலா சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பதாகவே இருந்தாலும், இங்கு காலங்காலமாக பெண்களுக்கு மட்டுமே நிகழ்த்தப்படும் மிகப்பெரிய அநீதி ஒன்றை கட்டுடைக்க முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி.

ஷகிலாவின் பெயரை நம் வீட்டு வரவேற்பறையில், 'மேடம் ஷகிலா' என மிக இயல்பாக உரக்க ஒலிக்கச் செய்தவர்களுக்கு நன்றி... செஃப் தாமு அவர்களுக்கு நிறைய அன்பு!

- Don't Take Diversion



source https://cinema.vikatan.com/women/madam-shakeela-a-new-series-on-women-empowerment-part-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக