3 நாள் சுற்றுப்பயணமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகம் வந்திருந்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்த அவர், கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு, நேற்று மாலை வந்தார். உடன், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இருந்தார். ராகுல்காந்தியின் பேச்சை, ஜோதிமணி மொழிபெயர்த்தார். ராகுல்காந்தி பேசுகையில், ``ரிமோட் கண்ட்ரோல் மூலம் அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்துவது போல, தமிழக மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதனை மோடி புரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள் என அனைவரையுமே பாதுகாக்கும் அரசை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, 1978-ம் ஆண்டு வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவாக, வைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்தார் ராகுல் காந்தி. தொடர்ந்து மதுரை விமான நிலையம் சென்று, தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ராகுல்காந்தியின் கொங்கு மண்டலத் தேர்தல் பிரசாரத்தின் நிறைவான இடமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அமைந்திருந்தது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தங்களுடய பலம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர். பேனர்கள், போஸ்டர்கள், சாலையோரத்தில் கட்சிக் கொடிகள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் என ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.
ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டமும், திண்டுக்கல், வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்டமுமாக, திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ், இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில், 3 தொகுதிகளை காங்கிரஸ் குறிவைக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், ``திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதனால், மூன்று தொகுதிகள் கேட்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எங்கள் பலத்தை நிரூபிக்க அமைந்த வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்பதற்காகத்தான், ராகுல் காந்தியின் விசிட்டை பெரிய டாஸ்க்காக நினைத்து வேலை பார்த்தோம். அனைத்தும் நல்லபடியாக முடிந்திருக்கிறது. இனி மாநிலத் தலைமையின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பதில் கிடைத்தவுடன், களத்தில் இறங்க வேண்டியது தான்” என்றார் உற்சாகமாக.
source https://www.vikatan.com/news/politics/rahul-gandhi-visit-to-dindigul-district-gives-hope-to-cadres
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக