Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

கரூர்: மண்பானை சமையல்... குழந்தைகளுடன் செல்ஃபி! - ராகுல் காந்தியின் ஒருநாள் விசிட்

ராகுல் காந்தி மூன்றுநாள் தமிழக விசிட்டில், நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சின்னதாராபுரம் தொடங்கி, பள்ளபட்டி வரை அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில், பிரதமர் மோடியையும், தமிழக முதல்வரையும் தாக்கிப் பேசினார்.

மொழிபெயர்க்கும் ஜோதிமணி

அதோடு, குழந்தைகளுடன் செல்ஃபி, பாரம்பர்ய மண்பானை சமையல் உணவக காளான் பிரியாணி, விவசாயிகளுடன் தென்னந்தோப்பில் உரையாடல், மாட்டுவண்டி பயணம் என்று அவரது கரூர் விசிட்டில் பல சம்பவங்கள் அரங்கேறின.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'தமிழகம் மீட்க, விவசாயம் காக்க, வாங்க ஒரு கை பாப்போம்!' என்ற பெயரில், தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இறுதிநாளான நேற்று, கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் நிகழ்வில் கலந்துகொண்டார். காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்ததால், ராகுலை பார்க்கும் ஆவலில் பொதுமக்கள் கூடினர். ஆனால், 11.05 க்கு தான் தாராபுரத்தில் இருந்து சின்னதாராபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இதனால், வெயிலின் தாக்கத்தில் பெரியவரும், ஒரு பள்ளி மாணவனும் மயங்கி விழுந்தனர். பெரியவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மயங்கி விழுந்த முதியவர்

அதன்பிறகு, காங்கிரஸ் கரூர் எம்.பி ஜோதிமணி மற்றும் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில், ராகுலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே, 'மூன்று மாவட்டங்களில், ராகுலின் பேச்சை சரியாக மொழிபெயர்க்கவில்லை' என்று சர்ச்சை எழுந்ததால், இந்த முறை ஜோதிமணியே ராகுலின் பேச்சை மொழிபெயர்த்தார். ஆனால், அவரும் ஒருசில இடத்தில் திணற, அவருக்கு ராகுலே க்ளாஸ் எடுத்தார். ஜோதிமணி பிடித்திருந்த மைக்கையும் சரிசெய்தார்.

Also Read: கரூர்: `பாதிப்புகளை இன்னும் கணக்கெடுக்கவே இல்லை!' - ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய விவசாயிகள்

அங்கே பேசிய ராகுல் காந்தி, "56 இஞ்ச்சில் அகலமான மார்பு எனக்கு என்று தன்னை சொல்லிக்கொள்ளும் மோடி, கடந்த நாலைந்து மாதங்களாக சீனா என்கிற வார்த்தையைகூட உச்சரிக்கவில்லை. மூன்று விவசாய கருப்புச் சட்டங்களை இயற்றி, விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர். ஆனால், நான் டெல்லியில் விவசாயிகளின் பாதுகாவலனாக செயலாற்றுவேன். அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூலம் அ.தி.மு.கவை மிரட்டி, தமிழகத்தை இயக்கும் ரிமோட் கன்ட்ரோலாக மோடி இருந்து வருகிறார்.

செல்ஃபி எடுக்க சிறுமியை தூக்கும் ராகுல்

வரும் தேர்தலில் அந்த ரிமோட் கன்ட்ரோலில் உள்ள பேட்டரிகளை எடுக்கும் வேலையை தமிழக வாக்காளர்கள் செய்ய வேண்டும். வரும் தேர்தலில் அதுபோல் ஆட்சியை அமைக்கவிடாமல், உங்களுக்கு உதவகூடிய ஆட்சியை அமைக்கவே இந்த சுற்றுப்பயணம்' என்றார்.. அதன்பிறகு, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார் ராகுல். அங்கே அவருக்கு ஒயிலாட்டம், பார்வதி, சிவன் வேடம் அணிந்தவர்கள் என நாட்டுப்புறக் கலைஞர்களை கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கேயேயும் அரைமணி நேரம் பேசினார். "இரண்டாயிரம் வருட தொன்மையான திருக்குறளை படிக்க தொடங்கியிருக்கிறேன். அதில் இல்லாத விசயமா?. ஆனா, இதில் ஒரு திருக்குறளை கூட படிக்காத மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுகிறார். திருக்குறளை அவர் உண்மையில் படித்திருந்தால், ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற கோஷத்தை அவர் முன்வைத்திருக்கமாட்டார்" என்றார். தொடர்ந்து, தன்னோடு செல்ஃபி எடுக்க முயற்சித்த சிறுமியை வாகனத்தில் தூக்கி, தன்னோடு நிற்க வைத்து, செஃபி எடுத்தார். அந்த சிறுமியும் தன் கையால், ராகுலோடு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு, வாங்கல் அருகே உள்ள 'உமையாள்' கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஜோதிமணி மாட்டுவண்டியில் பயணிக்க, அவரோடு சேர்ந்து ராகுலும் மாட்டுவண்டியில் ஏறி பயணித்தார். அங்கே 3,000 க்கும் அதிகமான விவசாயிகள் திரண்டிருந்தனர். ஒரு பெண், 'புகளூர் காகித ஆலை கழிவால் பாதிக்கப்பட்ட தங்கள் விவசாயத்தின் நிலையை சொன்னார். அதுகுறித்து, புகார் மனுவையும் விவசாயிகள் ராகுல் காந்தியிடம் அளித்தனர்.

கரூரில் பேசும் ராகுல் காந்தி

அதேபோல், பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், மூன்று புதிய வேளாண் சட்டம், 100 நாள் வேலை வாய்ப்பில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள், கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயத்தை அழிக்க எடுக்கும் முயற்சிகள் என்று பல விசயங்கள் சம்பந்தமாகவும் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "மோடி ஐந்து பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் ஆட்சி நடத்துகிறார். அதை முறியடிப்போம்" என்றார். அதன்பிறகு, கரூர் டு மதுரை பைபாஸில், மலைக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ முருக விலாஸ் மண்பானை பாரம்பர்ய உணவகத்தில், அவருக்கு முதலில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'நீங்களே மெனுவை தயார் செய்யுங்கள்' என்று ஜோதிமணி சொல்லியிருந்ததால், மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி உப்புக்கறி, நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு, நாட்டு சர்க்கரை பருப்பு பாயசம், முட்டை க்ரேவி என்று ஹோட்டல் தரப்பில் மெனு தயாரிக்கப்பட்டது.

ஆனால், ராகுல் காந்தி சைவம் தான் விரும்பி சாப்பிடுவார் என்று தெரிந்ததும், கடைசி நேரத்தில் அவருக்கு மட்டும் காளான் பிரியாணியை தயார் செய்தனர். அந்த ஹோட்டல் முழுக்க மத்திய பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எஃப், மாநில பாதுகாப்பு படை, தமிழ்நாடு காவல்துறையின் கரூர் மாவட்ட போலீஸார் என்று நான்கு பிரிவுகளின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது. மாலை மூன்றரை மணி போல் ஹோட்டல் அருகே வந்த ராகுல் காந்தி, கேரவனுக்குள் ரீஃப்ரெஷ் ஆக சென்றார். அதற்குள், அங்கு கூட்டம் கூடிவிட, மீடியா மற்றும் அங்கு குழுமிய காங்கிரஸ்காரர்களை ஹோட்டலுக்கு பின்னே சாப்பிட அனுப்பினர்.

மண்பானை சமையல் உணவகம்

அவர்கள் சென்றதும், ராகுலை ஒரு காரில் அழைத்துக்கொண்டு, தளவாபாளையம் என்ற கிராமத்துக்குச் சென்றனர். அங்குள்ள கருப்பசாமி என்பவரது தோட்டத்தில், ஸ்ரீ முருக விலாஸ் ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட காளான் பிரியாணியை ராகுல் சாப்பிட்டார். அதன்பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, இறுதி பாயிண்டான பள்ளபட்டிக்குச் சென்றார்.

இடையில், அரவக்குறிச்சி பிரிவு அருகே ஆங்கில சேனல்களுக்கு பேட்டியளித்தார். 'பால்கோட் மிஷன் சம்பந்தப்பட்ட ராணுவ ரகசியம் ஒரு பத்திரிகையாளருக்கு தெரிந்தது எப்படி, ராணுவம் சம்பந்தப்பட்ட ஐந்து உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டிய ரகசியம், பத்திரிகையாளருக்கு தெரிந்தது எப்படி, இதுகுறித்து மோடி விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.

சிறுமியோடு செல்ஃபி எடுக்கும் ராகுல்

பள்ளபட்டியில் நடைபெற்ற நிகழ்வில் கால்மணி நேரம் பேசிவிட்டு, திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் வழியாக மதுரை சென்றார். 'ராகுலின் கரூர் விசிட்டை பொறுத்தவரையில், மருந்துக்கும் கூட தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வரவில்லை' என்று காங்கிரஸ் புள்ளிகள் புலம்பியதைக் கேட்க முடிந்தது. 'ராகுலை நேரில் பார்த்தாகணுமே' என்று பொதுமக்கள் அதிகம் பேர் அவரை பார்க்க வந்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-speech-against-modi-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக