Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

மேற்கு வங்கம் : திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த மனைவி! - அதிர்ச்சியில் பா.ஜ.க எம்.பி

மேற்கு வங்கதின் பிஷ்ணுபூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி-யாக இருப்பவர் சௌமித்ரா கான். 2019-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிஷ்ணுபூர் தொகுதியில் தேர்தலில் களம் கண்டு வெற்றியும் பெற்றார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்க பா.ஜ.க இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஒரு குற்ற வழக்கின் காரணமாக சௌமித்ரா கான் பிஷ்ணுபூர் தொகுதியில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவரின் மனைவி சுஜாதா மொண்டல் கான் பிரசாரம் செய்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கொல்கத்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்.பி சௌமித்ரா கான், "நான் உங்களுக்கு முழு சுதந்திரத்தையும் தந்திருக்கிறேன். பத்துவருட உறவு முடிவுக்கு வருகிறது. எனது வீட்டின் லட்சுமி திருடப்பட்டிருக்கிறாள். பரஸ்பர விவாகரத்துக்கான ஆவணங்களை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். அவற்றில் கையெழுத்திட்டு அனுப்புங்கள். இன்று முதல் எனது குடும்ப பெயரான 'கான்'னை இனி பயன்படுத்தாதீர்கள்" என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

Also Read: மம்தா Vs பா.ஜ.க...உச்சகட்ட மோதலில் மேற்கு வங்க அரசியல் களம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சுஜாதா மொண்டல் கான், "எனது குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக அவரை திருமணம் செய்துகொண்டேன். அவரை நான் நேசிக்கிறேன். எப்போதும் அப்படியே தான் செய்வேன். எனது நெத்தியில் குங்குமம் அப்படியே தான் இருக்கிறது. அரசியல் காரணமாக குடும்ப உறவு விவகாரத்தில் முடியுமா? நான் இந்த கட்சியில் சேரவேண்டும் என்பதற்காக யாரும் என்னை விவாகரத்து செய்துவிட்டு வரச் சொல்லவில்லை" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சுஜாதா, ''என் கணவர் வெற்றிபெற பல்வேறு தாக்குதல்களை நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ தியாகங்களைச் செய்த பின்னரும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு மரியாதை வேண்டும். நான் சுதந்திரமாக சுவாசிக்க விரும்புகிறேன். எனது அக்காவுடன் (மம்தா) சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். ஒருநாள் அவர் என்னைப் புரிந்து கொள்வார், யாருக்குத் தெரியும் அவரும் இந்த கட்சிக்கு வரக் கூட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா

கடந்த சனிக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஒரு மோசமான நிகழ்வைச் சந்தித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி உட்பட 30-க்கும் அதிகமானவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் பா.ஜ.க.-வில் உறுப்பினர்களாக இணைத்த சம்பவம் நடந்த இரண்டு தினத்தில், மேற்கு வங்க பா.ஜ.க இளைஞரணித் தலைவரின் மனைவி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/wife-of-bjp-mp-joined-tmc-party-in-west-bengal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக