Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி ; விஜயகாந்த் முதல் ரஜினி வரை... எம்.ஜி.ஆரை முன்னிறுத்துவது ஏன்?

``எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’’ என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான ஜனவரி 17-ல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், ``எம்.ஜி.ஆரின் நீட்சி நான்'' என்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். நடிகர் விஜயகாந்தும் `கறுப்பு எம்.ஜி.ஆர்' என்கிற அடையாளத்துடன்தான் அரசியலுக்கே வந்தார். ஏற்கெனவே நடிகர் பாக்யராஜில் தொடங்கி ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், ஜெ.தீபா வரையிலும் எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கின்றனர்.

ஜெ.தீபா

எம்.ஜி.ஆரின் விசுவாசியாக அவருக்கு நெருக்கமாக இருந்து கட்சி தொடங்கியவர்கள், அவர் பெயரை வைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், கட்சி தொடங்குவதற்கு முன்னால் பெரிய அளவில் எம்.ஜி.ஆர் ஆதரவாளராக, விசுவாசியாகக் காட்டிக்கொள்ளாத பலரும்கூட அரசியல், கட்சி என்று வந்த பிறகு எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்துவது ஏன்? குறிப்பாக நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்.ஜி.ஆரைத் தங்களின் அடையாளமாக முன்னிறுத்துவது ஏன்?

என்ட்ரி கார்டு!

`நடிகர்கள் நாடாளத் துடிக்கலாமா?' எனும் கேள்விக்கு ஆரம்பத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆரைத் தங்களின் அடையாளமாகக் காட்ட முனைகிறார்கள். எம்.ஜி.ஆரின் மீது எதிர்க்கட்சியினர் மற்றும் சிலருக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவருக்கென்று ஒரு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. திரைத்துறையிலிருந்து வந்து ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தவர் என்கிற பிம்பம் இருக்கிறது. அதனால், வரும்போதே அவர் பெயரைப் பயன்படுத்திவிட்டால் கணிசமான ஆதரவைப் பெற முடியும் என நினைக்கிறார்கள். தவிர, தேவையில்லாமல் எழும் விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான யுக்தியாகவும் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தி.மு.க - அ.தி.மு.க

அசைக்க முடியாத வாக்குவங்கி!

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்குமே நிலையான வாக்குவங்கி உண்டு. ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் அதன் தாக்கம், கட்சியின் வாக்குவங்கியிலும் எதிரொலிக்கும். அதேபோல், தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரின் நிறை, குறையும் தி.மு.க வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, `எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை' என விசுவாசமாக வாக்களிக்கும் வாக்காளர்கள் கணிசமாக உண்டு. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதலில் கைப்பற்றத் துடிப்பது இந்த வாக்கு வங்கியைத்தான். காரணம்... இந்த வாக்காளர்களிடம் எந்தக் கொள்கை, கோட்பாடுகள், திட்டங்கள் குறித்தும் விளக்கங்கள் கொடுக்கத் தேவையில்லை. அது திரை பிம்பம், ஆளுமை மயக்கத்தின் காரணமாகக் கட்டமைக்கப்பட்டது. கூடவே கொஞ்சம் எம்.ஜி.ஆர் விசுவாசியாகக் காட்டிக்கொண்டால் போதும்... எம்.ஜி.ஆர் வாக்குவங்கியை தனதாக மடைமாற்றிவிட முடியும் என நினைக்கிறார்கள். அது விஜயகாந்தில் தொடங்கி ரஜினி, கமல் வரைக்கும் வந்து நிற்கிறது.

ஆனால், எம்.ஜி.ஆர் என்ற திரை பிம்பத்தின் மீதான விசுவாசம் அரசியல் அரங்கில், இரட்டை இலைச் சின்னத்தின்மீது படிந்திருக்கிறது. அதனால்தான், எம்.ஜி.ஆரே `இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள்' எனச் சொன்ன பிறகும், மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த சம்பவம் 1977 தேர்தலில், தாராபுரத்தில் அரங்கேறியது. தவிர, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டபோது, அ.தி.மு.க ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும், அ.தி.மு.க ஜெ. அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டன. அப்போது ஜெ. அணி 21 சதவிகித வாக்குகளையும் ஜா. அணி 9 சதவிகித வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது. ஆனால், இரண்டு அணிகளும் இணைந்து 91-ம் ஆண்டுத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டபோது அந்தக் கட்சி, 45 சதவிகித வாக்குகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது. (ராஜீவ் காந்தி மரணத்துக்கான அனுதாப அலையையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்) அதேபோல, 91-96 ஜெயலலிதாவின் ஆட்சி கடுமையான விமர்சனத்துக்கு, மக்களின் வெறுப்புக்கு ஆளானபோதும்கூட 96-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அந்தக் கட்சி 22 சதவிகித வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏன்... ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இரட்டை இலைச் சின்னத்துக்கு நடந்த களேபரங்களை நாம் கண்கூடாகப் பார்த்தோம்.

இரட்டை இலை

ஏற்கெனவே இரட்டை இலைச் சின்னத்தை (2017) முடக்கியதுபோல மீண்டும் முடக்கி அ.தி.மு.க-விலிருந்து ஓர் அணியைப் பிரித்து ரஜினியோடு கூட்டணி சேர்க்கும் திட்டமும் மத்திய பா.ஜ.க வசம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு இரட்டை இலைச் சின்னத்துக்கான மவுசு அ.தி.மு.க வாக்காளர்களிடம் இருக்கிறது.

கொள்கை... நோ ப்ராப்ளம்!

இந்த இரண்டு காரணங்கள் மட்டுமல்ல... தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அடிப்படையான சில கொள்கைகளோட தொடங்கப்பட்ட கட்சிகள். ஆனால், அ.தி.மு.க-வை ஆரம்பிக்கும்போது `அண்ணாயிசம்தான் என் கொள்கை' என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், அப்படியென்றால் என்னவென்பதை கடைசிவரை அவர் விளக்கவே இல்லை. திராவிடக் கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க., நெருக்கடிநிலை காலகட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது. மாநில சுயாட்சியைக் கொள்கையாகக்கொண்டிருந்த அண்ணாவைப் பின்பற்றுகிறேன் எனச் சொன்னவர், எமெர்ஜென்சியை ஆதரித்தார். திராவிட இயக்கங்களின் அடிநாதமான சமூகநீதிக்கு எதிராக, பொருளாதாரரீதியான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சூடுபட்டு, பிறகு மாற்றிக்கொண்டார். இப்படித் தனக்குச் சாதகமான முடிவுகளை அவ்வப்போது எடுத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர்.

கருணாநிதியும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் கொள்கை, கோட்பாட்டைப் பின்பற்றினார் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் மீறும்போதெல்லாம் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், எம்.ஜி.ஆருக்கு அத்தகைய சிக்கலெல்லாம் இல்லை.

கமல்ஹாசன் - விஜயகாந்த்

விஜயகாந்தைப் பொறுத்தவரைக்கும்கூட அப்படித்தான். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் அவரின் கட்சிப் பெயரே குழப்பமானது. `வறுமையை ஒழிப்பதுதான் என் கொள்கை' என்று அறிவித்தார். நிர்வாகரீதியாக செய்ய வேண்டிய விஷயம் எப்படிக் கொள்கை முழக்கமாகும். காமராஜருக்கும்கூட வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்திருக்கும். ஆனால், அதை எப்படி செய்யப்போகிறார், எதன் வழி அடையப்போகிறார் என்பதே கொள்கை. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட, பத்திரிகையாளர் சந்திப்பில் கொள்கை குறித்துப் பேச்சு எழுந்தபோது, `எங்க கட்சிக்கு கொள்கை இல்லைனு தெரியுமா... தெரியுமா?' என பிரேமலதா கொந்தளித்தாரே தவிர... இதுதான் தங்களின் கொள்கை என அந்தக் கட்சி இதுவரை அறிவித்ததில்லை.

Also Read: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா? - ஒரு விரிவான அலசல்!

அவர் மட்டும்தான் அப்படியா என்றால், நிச்சயமாக இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி தொடங்கிய கமலும், `இதுதான் என் கட்சியின் கொள்கை’ என இதுவரை அறிவித்ததில்லை. கோவில்பட்டி பிரசாரத்தில் கொள்கை குறித்துக் கேள்வியெழ, ``கொள்கையை வெளியே சொன்னால், காப்பியடித்துவிடுவார்கள்'' எனச் சொல்ல கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, 'நேர்மைதான் எங்கள் கொள்கை' என்று புதுவிளக்கம் கொடுத்தார் கமல். விஜயகாந்துக்கு வறுமை எப்படியோ, கமலுக்கு நேர்மை அப்படி. ஆனால், அவரது கட்சியின் வலைப் பக்கத்தில் `மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை' என்பதில் ஆரம்பித்து, `தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்போம்' என ஏழு விஷயங்கள் கொள்கைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போராட்டம் நடத்தினால் பிரசுரிக்கும் துண்டறிக்கைபோல ஒரே பக்கத்தில் அடங்கிவிடுகிறது அவரின் கட்சிக் கொள்கை.

ரஜினி - கமல்

அடுத்த மாதம் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கும் ரஜினி கதையோ இன்னும் சுத்தம்... ஏற்கெனவே அவரிடம் அவரது கட்சிக் கொள்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, `கொள்கையா...' என்று `ஷாக்' ஆனவர், `அப்படியே எனக்குத் தலை சுத்தியிருச்சு' என வெளிப்படையாகப் போட்டுடைத்தார். 'இப்போது இல்லைன்னா எப்போதுமே இல்லை' என்பது மட்டும்தான் அவரது தற்போதைய கட்சிக் கொள்கையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு `தி.மு.க எதிர்ப்பு' கொள்கை என்றால், விஜயகாந்த், கமல், ரஜினிக்கு `தி.மு.க கூடவே அ.தி.மு.க எதிர்ப்பு'தான் கொள்கை. விஜயகாந்த் முதல் கமல், ரஜினி வரை அனைவருமே திராவிடக் கட்சிகளின் மீது `ஊழல் புகார்'களை மட்டுமே வாசித்துவருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, அவருக்கு விசுவாசமான வாக்குவங்கியைத் தனதாக்கிக்கொள்வது என்பதையெல்லாம் தாண்டி இந்தக் கொள்கை விஷயம்தான் இம்மூவரையும், எம்.ஜி.ஆரின் வழிவந்தவர்களாகக் காட்டிக்கொள்வதற்கு வசதியாக இருக்கிறது. தேவைப்படும்போது தேசியவாதிகளாகவும் அடையாளப்படுத்திக்கொள்ள எம்.ஜி.ஆரே இவர்களுக்குப் முன்மாதிரியாகவும் நிற்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/from-vijaykanth-to-kamal-why-they-are-promoting-mgr-in-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக