Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

நெல்லை: அணு உலைகளுக்கு அருகில் கல்குவாரி.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சட்ட விரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இடிந்தகரை ஊர்நல கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை

அந்த மனுவில், “நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அணு உலைகளுக்கு அருகில், 5 கி.மீ சுற்றளவுக்கு சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்கச் செய்யக் கூடாது எனச் சட்டம் உள்ளது.

சட்ட விதிகளுக்கு மாறாக அணு உலைக்கு அருகில் உள்ள விஜயாபதி கிராமத்தில் கல்குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்த குவாரியில் சக்தி வாய்ந்த வெடி வைக்கிறார்கள். அதனால் அணு உலைக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

Also Read: அடிக்கடி சுவரேறிக் குதிக்கும் நபர்... அச்சத்தில் மக்கள்... இது கூடங்குளம் அணு உலை சர்ச்சை!

வெடி வெடிப்பதால் கல்குவாரி செயல்படும் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள வீடுகளில் கீறல் விழுகின்றன. வெடிச் சத்தத்தில் வீடுகள் இடியும் ஆபத்து இருப்பதால் கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மனுவை ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து, ஊர்நல கமிட்டியின் பிரதிநிதிகள் அளித்ததுடன், இது பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். கீறல் விழுந்த வீடுகளின் புகைப்படத்தையும் அப்போது ஆட்சியரிடம் அளித்தார்கள்.

ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை கவனமாகக் கேட்டுக் கொண்ட ஆட்சியர், இது பற்றி உரிய விசாரணை நடத்தி பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தங்களின் கோரிக்கைக்கு உடனடித் தீர்வு கிடைக்காவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/general-news/local-people-asks-to-stop-mining-near-residential-area-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக