Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்!' -கிறிஸ்துமஸ் விழாவில் தினகரன்

நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடந்தது. இதில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதில் டி.டி.வி தினகரன் பேசுகையில், "தேவன் தன்னுடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அருளி உலகிற்கு தந்தருளினார்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நமது தேசம் மீண்டு வருகின்ற வேளையில் தமிழகத்தின் கடை கோடியான கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இறைவன் மனித குலத்தின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் ஏசு கிறிஸ்து. கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுதான் நினைவுக்கு வரும். இறைவன் உலகுக்கு தந்த அன்பு பரிசு ஏசு. ஏசு அன்பை போதித்தார். 33 ஆண்டு வாழ்ந்து கோடிக்கணக்கான மக்களை ஆட்கொண்டார். தேவனுடைய சொந்த குமாரனாக இருந்தும் தன்னை தாழ்த்திக்கொண்டார் என்று வேதத்தில் கூறப்படுகிறது. ஏசுவின் மலை பிரசங்கம் மிகவும் சிறப்பானது.

கேக் வெட்டிய தினகரன்

கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசுகாவியத்தின் முதல் பிரதியை எம்.ஜி.ஆர் பெற்றுக்கொண்டார். கிறிஸ்தவ மக்களுக்கு காவலராக ஜெயலலிதா திகழ்ந்தார். அ.ம.மு.க பொதுச் செயலாகராக உள்ள எனக்காக ஜெபிக்கும் நல்ல உள்ளங்களை நான் பெற்றது பாக்கியம். மதத்தின் பலம் அதை பின்பற்றும் மக்களால் அறியப்படும். ஏற்றத்தாழ்வுகளால் பிளவுபட்ட கல்வியை, மேடு, பள்ளம் இல்லாமல் கொண்டு வந்தது கிறிஸ்தவ மிஷனரிகள். தாழ்த்தப்பட்டவர்கள், முதியவர்களை அள்ளி அணைத்து ஆதரவு அளிப்பவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்.

கிறிஸ்தவர்கள் உலகுக்கு ஆற்றிய சேவை மகத்தானது. தன் சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு கட்டிய பென்னிகுயிக்கை மறக்க முடியுமா. குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்ஷல் நேசமணி போன்றவர்கள் நமக்கு சேவை செய்துள்ளனர். சோதனையில் சோர்ந்து போனவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்க அ.ம.மு.க முன்னால் வந்து நிற்கும் சிறுபான்மை மக்களுக்கு உற்ற உறவாகவும், அரணாகவும் திகழும். பிறக்கும் புத்தாண்டு நல்ல வளத்தையும், நன்மையையும் அளிக்கட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்" என்றார்.

விழாவில் கலந்துகொண்டவர்கள்

இந்த விழாவில் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமாக அ.தி.மு.க-வை சாடினார் டி.டி.வி தினகரன். "ஏசு கோபப்பட்ட இடம் என்று பைபிளில் ஒரே ஒரு சம்பவம் வருகிறது. என் பிதாவின் வீட்டை திருடர்களின் குகை ஆக்கிவிட்டார்களே என்று அவர்களை சாட்டை எடுத்து விரட்டிய சம்பவம் கூறப்பட்டுள்ளது. நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார் என வேதத்தில கூறப்பட்டுள்ளது" என டி.டி.வி தினகரன் கூறியதும் தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ttv-dinakaran-in-kanniyakumari-christmas-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக