Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

நீலகிரி: `மாயமான 8 வயது சிறுமி; உறவினரிடம் விசாரணை!’ - 3வது நாளாக தொடரும் தேடுதல் பணி

நீலகிரி மாவட்டம் குன்னூர், தூதூர்மட்டம் பகுதியில் உள்ளது கிரேக்மோர் தனியார் தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் தொழிலாளர்களாக வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், சுமன் குமாரி தம்பதியர் வேலை செய்து வருகின்றனர்.

இதே தேயிலைத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் இவர்களுக்கு, பிரீத்தி குமாரி என்ற 8 வயது மகள் உள்ளார்.

கடந்த 21-ம் தேதி வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த பிரீத்தி குமாரியை காணவில்லை. பதறிய பெற்றோர், அருகில் உள்ள கொலக்கொம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு தேடுதல் பணியைத் துவக்கினர்.

சிறுமியைத் தேடும் பணியில் 10 தீயணைப்பு வீரர்கள், 7 வனத்துறையினர், 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு கடந்த மூன்று நாள்களாக தேயிலைத் தோட்டங்களில் தேடி வருகின்றனர். சிறுமியை வனவிங்கு தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதலை துவக்கினர்.

ஆனால் சிறுமியின் சித்தப்பாவிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்க, அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில், "8 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், சிறுமியின் உறவினரான வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வருகிறார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

சிறுமி குறித்து பெண் தோட்ட தொழிலாளி ஒருவரிடம் நாம் பேசினோம், "காணாமல் போன ஜார்க்கண்ட் பாப்பா, பக்கத்து ஸ்கூல்ல நாலாவது வகுப்பு படிக்கிறா. இவங்க அம்மா அப்பா வேலைக்கு போனதும் குழந்தைகளோட வீட்டு முன்னாடி விளையாடுவா. அப்படித்தான் அன்னைக்கு வெளையாடிட்டு இருந்தா. திடீர்னு காணால. எல்லா இடத்துலையும் தேடி பாத்துட்டோம் கிடைக்கல. போலீஸும் மூணு நாளா தேடிக்கிட்டு இருக்காங்க. இதுவரை இப்படி ஒரு சம்பவம் இங்க நடந்ததில்ல. பயமா இருக்கு" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/8-year-old-girl-missing-near-coonoor-tea-estate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக