Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

பாலாஜி தந்திரங்கள், கேபி கண்டுபிடிப்புகள்... ஆரி ஃபேன்ஸ் அட்ராசிட்டீஸ்! பிக்பாஸ் – நாள் 79

இந்த வார லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க். மறுபடியும் அதேதான். ஒரு விளையாட்டுப் போட்டி என்பது ஆடுபவர்களுக்கும் சரி, பார்ப்பவர்களுக்கும் சரி, சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் தர வேண்டும். ரேஷன் கடை க்யூவில் ‘யார் முன்னாடி வந்தது?' என்று ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்ளும் அளவிற்கு ரொம்பவும் சுமாரான டாஸ்க்குளாகவே இவை இருக்கின்றன. இந்த லட்சணத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போல் நீளநீளமான பைப் எல்லாம் போட்ட செட்டப் வேறு. ‘வானம் பார்த்த பூமி’ பிழைப்பு போல மேலே பார்த்து கையேந்திக் கொண்டிருந்த போட்டியாளர்களைப் பார்க்க பாவமாக இருந்தது.

போட்டியாளர்கள் செய்ததைப் போல் நானும் அந்த பைப் வழியாக கத்திச் சொல்கிறேன். ‘'பிக்பாஸ் டீம்... இன்னமும் பெட்டரா யோசிக்கலாமே?!’'

நாள் 79-ல் என்ன நடந்தது?!

ரஹ்மானின் இசையில் ரகளையான பாடலான ‘முக்காபுலா’ காலையில் ஒலித்தது. நல்ல தரத்திலான ஸ்பீக்கரில் சற்று சவுண்ட் ஏத்தி இந்தப் பாடலைக் கேட்டால் தன்னாலேயே உற்சாகம் வந்து விடும். அப்படியொரு இசை. இத்தனை நாட்களில் இன்றுதான் கேபியின் நடனத்திறமையின் சிறப்பை ஓரளவிற்காவது காண முடிந்தது.

பிக்பாஸ் – நாள் 79

நடனப்பயிற்சியில்லாதவர்கள் ஆடுவதற்கும் பயிற்சி எடுத்தவர்கள் ஆடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உடனே கண்டுபிடித்து விட முடியும். பயிற்சியில்லாதவர்கள் தாளத்தைப் பின்பற்றாமல் தத்தக்கா பித்தக்கா என்று இஷ்டத்திற்கு காலை அழுத்தமாக வைத்து குதிப்பார்கள். ஆனால் முறையாக நடனம் பயின்றவர்கள், effortless ஆகவும் ரிதமை கச்சிதமாகப் பின்பற்றியும் ஆடுவதைக் கவனிக்க முடியும். கேபியிடம் இந்தத் திறமை வெளிப்பட்டது. வெல்டன்!

நிஷாவின் வெற்றிடத்தை ஷிவானி நிரப்ப முயல்கிறார் போலிருக்கிறது. ‘சட்ட... தட்ட...’ என்று மழலைமொழி ரைமிங்கில் அவர் ஆஜித்தை தொடர்ந்து டார்ச்சர் செய்ய அவரோ ‘எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி... அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்று பதிலுக்கு அலறிக் கொண்டிருந்தார்.
இந்த வார லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். இதில் அத்தியாயம் 1, 2 என்று பல பகுதிகள் உள்ளனவாம். வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். பைப் வழியாக மூன்று அளவுகள் கொண்ட பந்துகள் வரும். அதற்கேற்ப மதிப்பெண்கள். பந்து கீழே விழுந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது.

அணிபிரிப்பது தொடர்பாக ஓஎம்ஆர் காவல்நிலையத்தில் ஏற்கெனவே ஒரு வழக்கு பாலாஜி மேல் இருப்பதால் இம்முறை அவர் ஜாக்கிரதையாக இருந்தார் அல்லது அப்படியொரு பாவனையை மேற்கொண்டார். அவர் சொன்ன யோசனையை சக போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ஏதாவது ஒரு முடிவிற்கு வாங்க’ என்று சலித்துக் கொண்ட பாலாஜி, ஓர் அணிக்கு சோமை பொறுப்பாளராக ஏற்றுக் கொள்ள அழைத்தார்.

சோமிற்கும் பாலாஜிக்கும் இடையே நட்பும் புரிதலும் உள்ளது. எனவே பல முக்கியமான பொறுப்புகளுக்கு எதிர் டீமில் சோமையே பாலாஜி அழைக்கிறார். ரியோவை டீலில் விட்டு விடுகிறார். வீட்டின் வைஸ் கேப்டனாக சோமையே பாலாஜி நியமித்தது நினைவுகூரத்தக்கது.

பிக்பாஸ் – நாள் 79

இன்னொரு அணியின் பொறுப்பாளர் யார் என்று யோசிக்கும் போது ரம்யாவின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. ஆனால் ‘கேபி’ என்று பாலாஜி சொன்னவுடன் ரம்யாவின் முகத்தில் இருந்த பிரகாசம் அணைந்தது. ஆனால் கேபி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். ஏனெனில் வீடு ஏற்கெனவே இரண்டு அணிகளாக பிரிந்திருக்கும் போது ‘ஒரே அணியில்’ இரு தலைவர்கள் இருப்பதை பாலாஜியின் தந்திரமாக கேபி பார்க்கிறார். எனவே இன்னொரு அணிக்கு ஆரியைப் பொறுப்பாளராக ஆக்கினார் பாலாஜி.

வீட்டில் ஒன்பது பேர் இருப்பதால் ஒரு அணியில் தலா நாலு பேர் போக எக்ஸ்ட்ரா ஒரு ஆள் இருந்தார். அது பாலாஜி. பாட்டிலைக் குலுக்கி தேர்ந்தெடுத்ததில் ஆரி அணிக்கு பாலாஜி ஏலம் விடப்பட்டார்.

கோழி டாஸ்க் போலவே இதிலும் சின்னச் சின்ன குடுமிப்பிடி சண்டைகள் நிறைய நடந்தன. பைப்பின் அருகே எல்லைக்கோட்டை வரைந்தார் பாலாஜி, முன்னணியில் இரண்டு பேர் மட்டுமே நிற்க வேண்டும். அவர்களுக்கு உதவ செய்ய பக்கத்தில் அவரது அணியினர் நிற்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். இந்தப் பேச்சு வார்த்தையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் போட்டி பஸ்ஸர் ஒலி வந்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறி ரயிலில் இடம்பிடிக்க ஓடுபவர்கள் போல் ஆவேசமாகி விடுகிறார்கள்.

பந்து வருவதற்கான முதல் ஒலி வந்தது. ஆரியும் ரியோவும் நின்று கொண்டிருந்தார்கள். பாதாம் பருப்பு நழுவி பாலில் விழுந்தது போல் பந்து அலேக்காக ரியோவின் கையில் வந்து விழுந்தது. ஆக இந்த டாஸ்க்கின் முதல் பந்தைப் பிடித்த பெருமையை ரியோ அடைந்தார். 20 மதிப்பெண்கள் பெறுமான பந்து அது. "மரமண்டைகளா... இப்பவாவது ஆட்டம் புரிஞ்சுதா?” என்று பிக்பாஸ் நக்கலடிக்க, ‘ஹிஹி’ என்றனர் போட்டியாளர்கள்.

பிக்பாஸ் – நாள் 79

‘இரண்டு பேர் மட்டுமே பந்து பிடிக்க முன்னணியில் நிற்க வேண்டும்’ என்று இவர்களாக பேசிக் கொண்டதால், பாலாஜி, ஆஜித், ஷிவானி ஆகியோர் நிழலில் அமர்ந்து சொகுசாக பேசிக் கொண்டிருக்க, "என்ன டீம் B... பந்தைப் பிடிக்கற ஐடியால இல்லையா?” என்று உசுப்பேற்றினார் பிக்பாஸ். கூட்டமாக நின்றால்தானே சண்டை வரும்... சண்டை வந்தால்தானே ஃபுட்டேஜ் கிடைக்கும்?

எனவே லைன் ஆஃப் கன்ட்ரோலை ஒரு துண்டு பிளாஸ்டிக் தாளை வைத்து ஒட்டினார் பாலாஜி. அடுத்தது மூன்று பந்துகள் வந்து விழுந்தன. இவர்களின் தள்ளுமுள்ளு சண்டையில் அனைத்துமே கீழே விழுந்தன. "உங்க பக்கம் ஆளுங்க எக்ஸ்ட்ராவா நின்னாங்க” என்று கேபி வாக்குவாதம் செய்ய, ஆரி இதற்கு நேர்மையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். (ஆரி பற்றி இப்படி நேர்மறையாக எழுதும் வாக்கியங்களை எல்லாம் அண்டர்லைன் செய்யலாமா என்று பார்க்கிறேன். அப்படியாவது அவருடைய ஆதரவாளர்களின் கண்ணில் இவை படுகிறதா என்று பார்க்கலாம். முடியல). எதிரணியிடம் ஆரி மன்னிப்பு கேட்டும் அதே அணியைச் சேர்ந்த பாலாஜி தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

'‘நீ வேண்டுமென்றே வந்து என்னைத் தடுத்தாய்'’ என்று ரியோ சொன்னதை பாலாஜி ஏற்கவில்லை. பாலாஜி உயரமும் திடகாத்திரமும் கொண்டவராக இருப்பதால் இந்த விஷயங்கள் அவருக்கு சாதகமாக இருக்கின்றன. “நீங்களும் தட்டி விட்டீங்கன்னு சொன்னா ஒத்துப்பீங்களா?” என்று பதிலுக்கு பாலாஜி மல்லுக்கட்டினார்.

இந்த டாஸ்க்கில் எப்போது பந்து வரும், எத்தனை பந்துகள் வரும் என்று ஒன்றுமே தெரியாது. எனவே மக்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் கும்பலாக அமர்ந்திருந்தார்கள். ஆரி உணவு அருந்திக் கொண்டிருந்தார். பாலாஜி உண்ட மயக்கத்தில் சாய்ந்திருந்தார். திடீரென பஸ்ஸர் ஒலி கேட்கவே அனைவரும் பதறியடித்துக் கொண்டு ஓடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. இம்முறை பாலாஜிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பத்து மதிப்புள்ள ஒரு பந்து மட்டும். "இன்னமும் கால் குடம் தண்ணீர் கிடைக்காதா?” என்று நீர்க்குழாயை ஏக்கமாக பார்ப்பது போல் பைப்பை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதுவோ உம்மென்று அமைதியாக இருந்தது.

பிக்பாஸ் – நாள் 79

பாலாஜி செய்த அழிச்சாட்டியத்தை சோமிடம் ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ. அடுத்த முறை சிறிய பந்து ஒன்றும் பெரிய பந்து ஒன்றும் வந்தது. சிறியதை ஆரி பிடித்து விட, மக்கள் தட்டிவிட்ட பெரிய பந்தை பின்னால் நின்ற ரியோ லாகவமாக பிடித்து விட்டு ‘விராட் கோலி’ போல மிகையாக உணர்ச்சிவசப்பட்டு வெற்றிக்குறி காட்டினார். அவரது அணியைச் சேர்ந்தவர்களும் அவரைப் பாராட்டினார்கள். இதற்கிடையில் எல்லைக்கோட்டில் நிற்பது தொடர்பாக சோமிற்கும் பாலாஜிக்கும் இடையில் வாக்குவாதம் நீண்டது.

‘'நாம என்னதான் பிளான் பண்ணாலும் பந்து வர்ற சமயத்துல அப்படித்தான் தள்ளுமுள்ளு ஆயிடும்.. என்ன பண்றது'’ என்று நடைமுறை லாஜிக்கை பாலாஜி சொல்ல மற்றவர்கள் அரைமனதாக சமாதானம் ஆகினார்கள். '‘நாங்க முன்னாடி நின்னது போதும்... மத்தவங்க நில்லுங்க’' என்று சக போட்டியாளர்களுக்கு வழி விடுவது போல் பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘பாலை எப்படி பிடிக்கணும்’ என்று விதம் விதமாக கைகளை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் சோம். (இதெல்லாம் ஓவர் குமாரு!).

‘எதிரணியில் பெண் போட்டியாளர்கள் முன்னே நின்றால் நாமும் பெண்களை நிற்க வைப்போம்’ என்று இரண்டு அணிகளும் ரகசியம் பேசிக் கொண்டார்கள். இம்முறை அனிதாவும் கேபியும் முன்னணியில் நிற்க அதிர்ஷ்டம் ரம்யாவிற்கு அடித்தது. எல்லைக்கோட்டில் நிற்பது தொடர்பாக சோமிற்கும் பாலாஜிக்கும் மறுபடியும் முட்டிக் கொண்டது. பாலாஜியிடம் கேபி தொடர்ந்து கேள்விகள் கேட்க ‘நான் சோம் கிட்ட பேசிட்டு இருக்கேன்’ என்று பாலாஜி சொல்ல, “நான் இந்த கேம்ல இல்லையா... கேள்வி கேக்கக்கூடாதா?” என்று ஓவர்ரியாக்ட் செய்தார் கேபி.

முதல் சுற்றின் முடிவில் சோம் அணி 90 மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் இருந்தது. ஆரி அணி 50 மதிப்பெண்கள் பெற்றிருந்தது. ‘நான் நேர்மையா விளையாடணும்னுதான் சொல்லிட்டு இருக்கேன். ஆனா, பந்து வரும்போது உற்சாகத்துல முன்ன பின்னதான் ஆயிடும்... ஆனா இவிய்ங்க ஒத்துக்க மாட்றாங்க. ஏண்டா விளையாடறோம்னு இருக்கு" என்று பிறகு ஆரியிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 79

இரண்டாம் சுற்றில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார் பிக்பாஸ். கீழே விழுந்த பந்துகளையும் எடுக்கலாமாம். அதற்கும் மதிப்பெண் உண்டாம். "யாரும் தட்டிவிட வேண்டாம். எந்த அணி பக்கம் பந்து விழுகிறதோ. அந்த அணி எடுத்துக் கொள்ளட்டும்... நேர்மையாக விளையாடலாம்" என்று சுற்று துவங்குவதற்கு முன்பே விதிகளை தெளிவுப்படுத்தினார் பாலாஜி. (கேப்டன்ற பொறுப்பு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வருது!).

மக்கள் கிச்சன் ஏரியாவில் நின்று கொண்டிருந்த போது பஸ்ஸர் சத்தம் கேட்க, அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள். இம்முறை சோமு அணிக்கே அதிர்ஷ்டம் அடித்தது. ‘அய்யோ.. சப்பாத்தி தீயுது’ என்று அலறியடித்துக் கொண்டு மீண்டும் உள்ளே ஓடினார் ரம்யா.

இந்த ரணகளத்திற்கு இடையேயும் சோம் அணி சாப்பிடுவதிலும் தூங்குவதிலும் குறை வைக்கவில்லை. அணிக்கு ஒருவராக சென்று சாப்பிடுவோம் என்றில்லாமல் ஒட்டுமொத்த அணியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பஸ்ஸர் அடித்ததால் உணவை அப்படியே வைத்து விட்டு வெளியே பாய்ந்தார்கள். இம்முறை அனிதாவிற்கு அதிர்ஷ்டம் அடிக்க பேச்சுப்போட்டியில் சோப்பு டப்பா பரிசு வாங்கிய சந்தோஷம் அவரது முகத்தில் பிரகாசித்தது.

"நாங்க பத்து பத்தாதான் எடுக்குறோம். நீங்க இருபது இருபதா தூக்கறீங்களே...” என்று ரம்யாவை ஜாலியாக கலாய்த்தார் ஆரி. "இந்த ஒரு சாண் வயித்துக்குத்தானே இந்த பாடு... சாப்பிடறதுக்குள்ளே பஸ்ஸர் அடிச்சிட்டீங்களே பிக்பாஸ்" என்று சிணுங்கினார் ரம்யா. ஆரி மற்றும் ரம்யாவிற்கு இடையே புகைச்சல் இருந்தாலும் ரம்யாவிடம் ஜாலியாகப் பேசும் போது ஆரியின் முகத்தில் ஒரு மெல்லிய வெட்கமும் சிரிப்பும் வந்து போவதைப் பல முறை கவனிக்க முடிகிறது. (இன்னொரு அண்டர்லைன்!).

கீழே விழும் பந்துகளுக்கு மதிப்பெண் உண்டு என்பதால் "பந்துகளைத் தட்டிவிடலாம் என்று பார்க்கிறேன்" என்று ஆஜித் சொல்ல (மனச்சாட்சி எங்கேப்பா போனது? அப்புறம் உக்காந்து அழக்கூடாது!) "அப்புறம் unfairன்னு அவங்க ஆரம்பிப்பாங்க” என்று ஆஜித்திற்கு நேர்மையாக அறிவுறுத்தினார் ஆரி. (இன்னொரு அண்டர்லைன்). "பிடிக்கிற மாதிரி தட்டி விடு" என்று குறுக்குவழி காட்டினார் அனிதா. தலையணையை போட்டு போட்டு பிடித்து பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 79
பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் இருக்கும் போது பஸ்ஸர் அடிக்க பாய்ந்து வெளியே ஓடி வந்தார்கள். இம்முறை ரியோவிற்கு அதிர்ஷ்டம் அடித்தது. கீழே விழுந்த இன்னொரு பந்தை சிதறு தேங்காய் போல பாய்ந்து பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார் ரியோ.

மீண்டும் எல்லைக்கோட்டு பிரச்னை ஆரம்பித்தது. (பார்டர்னாலே பிரச்னைதான் போல). சோமுவிடம் நிகழ்ந்த விவாதத்தில் "சரி வாங்க... அடிச்சுக்கூட விளையாடலாம்" என்று ஆரி வழக்கம் போல் கோபப்பட (நோ அண்டர்லைன் ப்ளீஸ்). வாக்குவாதம் சூடானதால், "நான் செஞ்சதுதான் தப்பு. விடு” என்று வேண்டாவெறுப்பாக விலகிச் சென்றார் சோம்.

இரண்டாம் பகுதியில் இரண்டாம் சுற்று ஆரம்பித்தது. இதில் ஒரு சுவாரஸ்யமான டிவிஸ்ட்டை வைத்தார் பிக்பாஸ். சிவப்பு நிற பந்துகளும் இடையில் வருமாம். அதை ஒருவர் தொட்டு விட்டால் அந்த அணி அதுவரை பெற்ற மொத்த மதிப்பெண்களையும் இழக்க நேரிடுமாம். இதற்காக ஒவ்வொரு அணியில் இருந்து கண்காணிப்பாளரையும் நியமித்தார்கள். சோம் அணி முன்னணியில் இருந்ததால் ‘சிவப்பு பந்தை மட்டும் நாம தொட்றக்கூடாது’ என்று ஜாக்கிரதையாக பேசிக் கொண்டார்கள். அதை சரியாக யூகித்து விட்டார் பாலாஜி.

‘எந்தா மாரி... அந்தா மாரி’ என்று போன சீஸனில் சாண்டி செய்த முழக்கத்தை உற்சாகமாக சொன்ன பாலாஜி முதலில் சிவப்பு நிற பந்தை பிடித்து அணியின் மொத்த மதிப்பெண்களையும் இழக்கச் செய்தார். தான் தொட்டதை ஒப்புக் கொள்ளவும் செய்தார். பாலாஜியின் ‘அந்தா மாதிரி’ ஸ்லோகனை இப்போது பதிலுக்கு கூவி அவரை ஜாலியாக வெறுப்பேற்றினார்கள்.

ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட ‘குட்நைட் பிக்பாஸ்’ என்று சொல்லி தங்களுக்கு தூக்கம் வருவதை உணர்த்தினார்கள். ஆனால் வெளி விளக்குகளை எரிய விட்டு ‘ஆட்டம் தொடர்வதை’ உறுதிப்படுத்தினார் பிக்பாஸ். மேலும் ‘விடிய விடிய ஆட்டம் உண்டு’ என்பதை அறிவிப்பிலும் முதலிலேயே தெளிவுப்படுத்தி விட்டார். பிறகு ஆரி அணிக்கு சில அதிர்ஷ்ட பந்துகள் கிடைத்தன. தரையில் தவழ்ந்து பாய்ந்து பந்து பிடித்தார் அனிதா.

பிக்பாஸ் – நாள் 79

ஆரி அணி சிறிது நேரத்தில் சிவப்பு நிற உடையை ஒரே மாதிரி அணிந்து வந்தார்கள். சிவப்பு நிற பந்துகளைத் தொடக்கூடாது என்பதற்கான குறியீடு போல. இவர்கள் ராக்கோழி மாதிரி காத்திருந்தும் பைப்பில் இருந்து அசைவு ஏற்படவில்லை. முன்னணியில் இருந்த காரணத்தால் சோம் அணி நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஆரி அணியோ ‘காத்தடிக்குது.. காத்தடிக்குது...' ‘டங்கா மாரி’ போன்ற குத்துப்பாடல்களை பாடி தங்களை உற்சாகமாக்கிக் கொள்ள முயன்றார்கள். எதிர்அணியிடமிருந்து குறட்டை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

‘அமைதியா இருக்குது... ரொம்ப பயமா இருக்கு’ என்று புதுப்பேட்டை தனுஷ் போல பாலாஜி அணி கத்திக் கொண்டிருந்தாலும் பைப்பில் எந்த அசைவும் இல்லை.

எனவே பைப் வழியாக பாலாஜியும் அனிதாவும் பிக்பாஸ் டீமை நோக்கி ஜாலியாக கத்திக் கொண்டிருந்தார்கள். "அய்யோ... ஸ்டூல் போட்டும் அனிதாவிற்கு எட்டலையே” என்று பாலாஜி ஜாலியாக புலம்பியது ஜாலியான காட்சி. ‘என்னைக் கலாய்க்கறாங்க’ என்று சிணுங்கினார் அனிதா. திடீரென்று பஸ்ஸர் அடிக்க தூக்கத்தில் இருந்த அணியும் பதறியடித்து பாய்ந்து வந்தது.

பிக்பாஸ் – நாள் 79

ஆனால் வந்தது என்னமோ சிவப்பு நிற பந்து. நல்ல வேளையாக யாரும் அதைப் பிடிக்கவில்லை. "என்னா பாஸ்... இவ்ளோ காத்திருந்தா எங்களுக்கு ரெட் கலர்ல ஆப்பு வைக்கறீங்க" என்று பாலாஜி ஜாலியாக ஆட்சேபிக்க, ‘போராடுவோம்... போராடுவோம்’ என்று உற்சாகமாக அனிதா கத்திக் கொண்ருந்ததோடு இன்றைய எபிஸோட் முடிந்தது.

அதிகாலை வேளையில் ‘பால் வேணும்... பால் வேணும்...’என்று பாலாஜியும் அனிதாவும் கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டு வீட்டின் வெளியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பால்காரர் எவராது உள்ளே வந்து விட்டாரா இல்லையா என்பதை அடுத்த நிகழ்ச்சியைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-ball-task-bigg-boss-tamil-season-4-day-79-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக