தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பால் வேலையிழந்த கேமராமேன் ஒருவர் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து, தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எல்லோரையும் சிரிக்க வைக்கும் கேமராமேன்களின் வாழ்கையில் மறுபடியும் மகிழ்ச்சி வரவைக்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேசவன். இவருக்கு சரளா என்ற மனைவியும்,3 வயதில் கோகுல் என்ற மகனும் உள்ளனர். வீடியோ கேமராமேனாக இருக்கும் கேசவன், சொந்தமாக வீடியோ கேமரா வைத்திருப்பதுடன், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் வீடியோ எடுத்து கொடுக்கும் வேலை செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், கொரோனா லாக்டெளன் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தடைப்பட்டு போனதில் வருமானத்தை இழந்த இவர், தன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாமல் தவித்திருக்கிறார். எல்லோரையும் சிரிக்க வைத்து படம் எடுக்கும் கேமராமேன்களின் வாழ்கை மொத்தமும் கொரோனாவால் தலைகீழாக மாறிவிட்டதே என மனதிற்குள் புலம்பியிருக்கிறார். இதையடுத்து, தன் குடும்பத்தை காப்பதற்காக சாலையோரத்தில் தேங்காய் கடை நடத்தத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து கேசவனிடம் பேசினோம். ``கொரோனா லாக்டெளனுக்கு முன்பு வரை வீடியோ எடுத்து கொடுப்பதன் மூலம் மாதம் தோராயமாக ரூ 20,000 வர சம்பாதிப்பேன். வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு மற்றும் கேமரா மெயின்டெனன்ஸ் உள்ளிட்டவைக்கு அந்த பணம் சரியாக இருக்கும். இதில் மிச்சப்படுத்த முடியாது என்றாலும், எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
Also Read: கரூர்: `6 குழந்தைகளுக்கும் சரியா சாப்பாடு போட முடியல!' - நாடோடி மனிதரின் துயரம்
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் வருமானம் ஏதுமின்றி பலரது வாழ்க்கை தலைகீழாக புரட்டி போட்டப்பட்டது. என்னைப் போன்ற ஸ்டியோ தொழிலில் இருக்கும் கேமராமேன்களின் நிலை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முதல் இரண்டு மாதத்தைக் கையில் இருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி ஓட்டி விட்டேன்.
அதன்பிறகு ஒத்தபைசா கூட கையில் இல்லாமல் போனது. இதனால், என் மகனுக்கு பால், பிஸ்கட் வாங்கிக் கொடுக்கக் கூட காசில்லாத துயரநிலைக்குத் தள்ளப்பட்டேன். போட்டோ, வீடியோ எடுக்கும்போது எல்லோரையும் `ஸ்மைல் பண்ணுங்க’ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம். எல்லோரும் முகம் மலர்ந்து சிரிக்க வைத்த பிறகே, போட்டோ எடுப்போம். இதனை கேமராமேன்களின் தனி சிறப்பாகவே நான் கருதுகிறேன்.
இப்படி எல்லோரையும் சிரிக்கச் சொன்ன எங்கள் வாழ்கையில் இவ்வளவு சீக்கிரம் சிரிப்பை மறப்போம் என தெரியாமல் போனது. நான் வெளியே போயிட்டு வந்தாலே பிஸ்கட் வாங்கி கொண்டு வந்திருக்கேனா என என் மகன் அப்பா என ஓடியாந்து என் கையைப் பார்ப்பான். அப்போது மனசு சுக்குநூறாக உடைந்துவிடும்.
நண்பர் ஒருவர், `எப்ப இந்த லாக்டெளன் சரியாகும் என தெரியவில்லை. இப்படியே அரை வயிற்று கஞ்சி குடிச்சிகிட்டு எத்தனை நாள் இருக்கப்போற? வியாபாரம் எதாவது செய்’ என நம்பிக்கை கொடுத்தார். அதற்கும் காசு வேண்டுமே என கையைப் பிசைத்து நின்றபோது உறவினரான மாமா ஒருவர், தன் தோப்பில் இருக்கும் தேங்காய்களை கொடுத்து விற்பனை செய்து விட்டு காசு கொடுக்க சொன்னார்.
Also Read: `சினிமா கோடிகளில் புரளும் தொழில்தான்; ஆனால்..!’ - அனுபவம் பகிரும் தஞ்சை `போஸ்டர் காடி’
புதிய வெளிச்சம் பாய்வதை உணர்ந்த நான், எந்தக் கூச்சமும் படாமல் சாலையோரத்தில் தேங்காய் கடை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினேன். கையில் கேமராவை பிடித்த நான் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தேங்காயை வைத்து கொண்டு கூவி கூவி விற்பனை செய்கிறேன். இதன் மூலம் தினமும் எனக்கு ரூ.250 கிடைக்கிறது. இதனைக் கொண்டு குடும்பம் ஓரளவிற்கு நன்றாக ஓடுகிறது. என் பையன் முகத்தில் மறுபடியும் சிரிப்பைப் பார்க்க முடிகிறது.
என்னைப் போன்ற ஆயிரகணக்கான கேமராமேன்கள் வாழ்கையை ஓட்ட முடியாமல், என்ன செய்வது என தெரியாமல் தவித்து நிற்கின்றனர் அவர்களுக்கு அரசு, தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். எல்லோரும் சிரிக்க சொல்கிறவர்களான எங்கள் வாழ்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-camera-man-severely-affected-by-corona-lock-down
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக