Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

எண்ணிக்கையில் குளறுபடி - மறைக்கப்படுகிறதா கோவை கொரோனா மரணங்கள்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, கோவையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகரிப்பால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கோவையில் மொத்தம் 5,805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 1,571 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை

Also Read: Corona Live Updates: `ஒரே நாளில் 5,175 பேருக்குத் தொற்று; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்

நேற்றைய நிலவரப்படி, கோவையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 என சுகாதாரத்துறை வழங்கும் மீடியா புல்லட்டினில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறை கோவை ஆவணங்களில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிலவரப்படி 130 பேர் மாவட்டத்தில் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்க, அதை மறைக்கப் பார்க்கின்றனர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறப்பு அறிக்கையில், மரணத்துக்கு வேறு காரணங்களைப் போட்டுவிடுகின்றனர் என்கின்றனர்.

கொரோனா மரணம்

உதாரணத்துக்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இறந்த ஒருவரின் இறப்பு அறிக்கையில், அவர் கார்டியாக் அரெஸ்டால் இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டு, `அதை வெளியிலும் சொல்லிட வேண்டாம்’ என்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை தரப்பில் கூறி வருகின்றனர். ஏற்கெனவே, தமிழகத்தில் கொரோனா மரணங்களை மறைக்கிறார்கள் என்ற புகார் எழுந்தது. அதை முதலில் அரசுத் தரப்பில் மறுத்தனர். ஆனால் பிறகு அதே அரசுத்தரப்பில், 444 மரணங்கள் விடுபட்டதாகக் கூறினர்.

Also Read: 444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன?

அதை உறுதிப்படுத்தும் வகையில் கோவையில் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் கணக்குகளை, சுகாதாரத்துறை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட்ட மீடியா புல்லட்டினில்தான் குறிப்பிட்டுள்ளது. இப்படி மதுரை, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் உயிரிழந்த மரணங்களை, சுகாதாரத்துறை தற்போது கணக்குக் காட்டி வருகிறது. அந்த வகையில், சுகாதாரத்துறை சொன்ன தமிழகத்தில் விடுபட்ட மரணங்களின் கணக்கு 500-ஐ தாண்டிவிட்டது.

கொரோனா மரணம்

கோவை கொரோனா மரணங்கள் மர்மம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,``கொரோனா மரணங்கள் உடனடியாக ரிப்போர்ட் செய்யப்பட்டு, அதற்கான காரணங்களும் அறிக்கையாக வழங்கப்பட்டுவிடுகின்றன. நீங்கள் கோவையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் சொல்கிறீர்கள். அது நம் கணக்கில் வராது” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-corona-death-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக