Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கரூர்: `கலங்காதே, நான் பார்த்துக்கிறேன்!' - இறந்த ஆசிரியரின் குடும்பத்தை நெகிழ வைத்த ஆட்சியர்

மைல்ட் ஹார்ட் அட்டாக் என்று திருச்சி தனியார் மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சைப் பெற்றுவந்த குளித்தலை ஆசிரியர் ஒருவருக்கு, கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவர, அந்த அதிர்ச்சியிலேயே அவர் இறந்தார். 'அவர் தனது கல்லூரி தோழியின் அண்ணன்' என்பதை அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அவருக்கு அஞ்சாமல் மாலை அணிவித்ததோடு, அவரின் இறுதிசடங்குகள் நடைபெற்ற முக்கால்மணிநேரமும் கூடவே இருந்து, அந்த ஆசிரியர் குடும்பத்தினரை நெகிழவைத்திருக்கிறார்.

ஆறுதல் சொல்லும் அன்பழகன்

Also Read: கரூர்: `இந்தப் பதக்கம் உங்களால்தான் கிடைத்தது!' - இளைஞர்களை நெகிழ வைத்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர்

கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் கனகராஜ். 55 வயது நிரம்பிய, குளித்தலைப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். அமெரிக்காவில் இருக்கும் இவரின் தங்கை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனோடு ஒன்றாக, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர். இந்த நிலையில், ஆசிரியர் கனகராஜூக்கு பத்து நாளைக்கு முன்பு நெஞ்சுப்பகுதியில் லேசாக வலி ஏற்பட்டிருக்கிறது. பதறிப்போன அவரது உறவினர்கள், அவரை கார் மூலம் அழைத்துச்சென்று, திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் அவர் உயிர்பிழைத்தார். 'அவருக்கு மைல்டு அட்டாக் வந்திருக்கிறது.

ஆசிரியரின் இறுதி நிகழ்வில் அன்பழகன்

ஒருவாரம் மருத்துவமனையில் அவர் இருப்பது நல்லது' என்று மருத்துவர்கள் சொல்ல, அவரது உறவினர்கள் அதற்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள். அவருடன், அவரது மனைவியும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், கனகராஜூக்கு மருத்துவர்கள் கொரோனா சம்பந்தப்பட்ட சோதனையை செய்ய, அவருக்கு பாசிட்டிவ் என்று தெரியவந்திருக்கிறது. கூடவே, அவரது மனைவிக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது. இதனையறிந்த கனகராஜ், அதிர்ச்சியாகி அப்படியே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்.

அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்ததால், குளித்தலைக்கு அவரது உடலை எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், தகுந்த பாதுகாப்போடு, திருச்சி காவிரிக்கரையில் உள்ள ஓயெம்மாரி சுடுகாட்டில் அவரது உடலை தகனம் செய்ய முடிவெடுத்தனர். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அவரால் தனது கணவர் இறுதிசடங்கில் கலந்துகொள்ளமுடியாத சூழல். அதேபோல், அமெரிக்காவில் இருக்கும் ஆசிரியரின் தங்கையும், தனது சகோதரர் இறந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியாகியிருக்கிறார்.

ஆறுதல் சொல்லும் அன்பழகன்

'எனது அண்ணன் இறுதிசடங்கில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லையே. எங்கண்ணியாலும் கலந்துகொள்ளமுடியாத சூழல். இறைவா, என்ன கொடுமை இது?' என்று அழுது அரற்றியிருக்கிறார். இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், 'நான் இன்னொரு சகோதரனாக இருந்து இறுதிசடங்கை செய்கிறேன்' என்று தனது கல்லூரி தோழியிடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். அதன்படி, திருச்சிக்கு விரைந்து சென்ற அவர், கனகராஜின் உடலுக்கு, தனது ஷூவை கழற்றியபின், அஞ்சாமல் நெருங்கிபோய் மாலை அணிவித்தார்.

அதோடு, கனகராஜின் உடல் தகனம் செய்யப்படும்வரையில், அங்கேயே இருந்து எல்லா விசயத்தையும் செய்திருக்கிறார். 'எனது கல்லூரி நண்பர் கலெக்டராக இருந்தும், அதையெல்லாம் நினைக்காமல், இன்னொரு சகோதரனாக இருந்து எனது அண்ணனுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தியது உண்மையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திட்டு' என்று அமெரிக்காவில் வசிக்கும் கனகராஜின் தங்கை, தனது உறவினர்களிடம் நெக்குருகிபோய் சொல்லியிருக்கிறார். கொரோனா அச்சம் காரணமாக ஒருவரை தூக்க தயங்கிய நிலையில், காவல்துறை பெண்மணியான அல்லிராணி என்பவர், தன்கையால் தொட்டுத் தூக்கினார்.

ஆறுதல் சொல்லும் அன்பழகன்

அதற்காக, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, 74 சுதந்திர தின விழாவில் அவரை கௌரவித்ததோடு, அவரை மேடையேற்றி, தான் அவருக்கு சல்யூட் செய்து, அல்லிராணியை நெகிழவைத்தார். அதேபோல், கொரோனா பாதித்த பெண்ணின் அண்ணனின் இறுதிசடங்கில், தனது கல்லூரி தோழியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டது, பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

இதுகுறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் பேசினோம்.

"இறந்தவரின் தங்கை என்னோடு ஒன்றாக படித்தவர். அந்தவகையில், அவரின் அண்ணனை எனக்கு தெரியும். அவர் திடீர்னு இறந்ததை கேள்விப்பட்டதும், எனக்கு அதிர்ச்சியாயிட்டு. 'எங்க அண்ணனை பார்க்க முடியவில்லையே'னு அமெரிக்காவில் இருந்து எனது தோழி போனில் அழுதாங்க. அதனால்தான், நான் இன்னொரு சகோதரனா போய், ஆசிரியரின் இறுதிசடங்கில் கலந்துகிட்டேன். அந்த ஆசிரியர் மிகவும் நல்ல மனிதர். நல்ல மனிதர்களின் இறுதிஅஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொள்வதை எந்த விசயத்துக்காவும் தவிர்க்கவே கூடாது.

அன்பழகன் (மாவட்ட ஆட்சியர்)

அதேபோல், மைல்ட் அட்டாக் வந்து அவர் பிழைத்தாலும், கொரோனா பாசிட்டிவ் என்று தகவல் வந்ததும், அந்த அதிர்ச்சியில் இறந்துபோயிட்டார். அதனால், 'கொரோனா பாதித்தவர்களை நாம் அந்நியமாக நினைக்ககூடாது. அவர்களை ஒதுக்ககூடாது' என்று விழிப்புணர்வு ஏற்படுத்ததான், அவருக்கு நெருங்கிபோய் தகுந்த பாதுகாப்போடு நின்று, மாலை அணிவித்தேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-collector-did-the-final-ritual-to-kulithalai-teacher-who

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக